murasoli thalayangam

‘திராவிட மாடல்’ ஆட்சி மூலம் பல்லாண்டு காலம் வாழ்வார் கலைஞர் : ‘முரசொலி’ தாழ் பணிந்து வாழ்த்துகிறது !

“பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தா இடியுது பார்!” - என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் மொத்த வாழ்க்கையையும் இரண்டே வரிகளி திருக்குறளைப் போலத் தீட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர்!

அப்படி இடிந்த பழமை லோகத்தை - நவீனத் தமிழ்நாடாகக் கட்டமைத்த சிற்பி யார்? அதுவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்!

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சியில் இருக்க இயற்கை அனுமதித்தது. அதன்பிறகு ஆட்சியானது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தோளி சுமத்தப்பட்டது. “கோடிக்கணக்கான மதிப்புள்ள சுரங்கம்தான் அண்ணா. அத்தகைய சுரங்கத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டோம். ஆனா அடுத்த கட்டப்பயணத்துக்கு ஒரு பத்து ரூபாய் தேவை. அந்தப் பத்து ரூபாயாக என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ - என்று அப்போது சொன்னார் தலைவர் கலைஞர். அத்தகைய கலைஞர் அவர்கள்தான் கோடிக்கணக்கான மதிப்புமிக்க சுரங்கமாக தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்கிக் காட்டினார்கள்.

இன்றைக்கு நாம் காணும் நவீனத் தமிழ்நாடு என்பது தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டது ஆகும். அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தமிழ்நாட்டையும் இன்றைய தமிழ்நாட்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த உத்தரப்பிரதேசத்தையும் இன்றைய உத்தரப் பிரதேசத்தையும் - அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பீகாரையும் இன்றைய பீகாரையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன என்பதை உணர முடியும்? அப்படி உணரப்படும் வளர்ச்சியானது - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் விளைந்தது - முதல்வர் கலைஞர் அவர்களால் விளைந்தது என்பதை உணர முடியும்!

சிலருக்குக் கனவுகள் இருக்கும். அதனை நிறைவேற்றப் பதவிகள் கிடைக்காது. சிலருக்குப் பதவிகள் கிடைக்கும். ஆனால் கனவோ, தொலைநோக்குச் சிந்தனையோ இருக்காது. இரண்டும் இருந்தாலும் சிலருக்கு அவற்றைச் செயல்படுத்த நீண்ட கால வாழ்க்கை அமையாது. தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கனவு இருந்தது. அதற்கான பதவியும் பொறுப்பும் கிடைத்தது. காலமும் அதனை அனுமதித்தது. இத்தகைய மூன்றும் வாய்த்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

தந்தை பெரியாருக்கு கனவும், நீண்ட வாழ்க்கையும் அமைந்திருந்தது. ஆனால், பதவியை அவர் அடைய நினைக்கவில்லை. பேரறிஞர் அண்ணாவுக்கு கனவும் இருந்தது, பொறுப்பும் கிடைத்தது. ஆனால் அதனை நிறைவேற்ற வயது அமையவில்லை. கனவு - பொறுப்பு - வயது மூன்றும் அமைந்தது முத்தமிழறிஞர் - தமிழினத்தலைவர் கலைஞருக்குத் தான்!

ஐந்து முறை ஆட்சியில் இருந்தார் - அதனால் சாதித்தார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவந்தாலும் முதன் முதலாக கலைஞர் அவர்கள் முதல்வர் ஆனதும் செய்த செயல்கள் என்பவை அவரை மொத்தமாக அடையாளப்படுத்தி விடுகிறது. ஆட்சியில் இருந்த அனுபவங்களின் மூலமாகப் பெற்ற பாடங்களை வைத்து கலைஞர் சாதனைகளைச் செய்தார்கள் என்று சொல்லி விட முடியாது.

முதன்முதலாக ஆட்சிக்கு வரும்போதே - வந்து அமர்ந்த 1969-76 காலக்கட்டத்திலேயே அவர் தனது பல கனவுகளை நிறைவேற்றிவிட்டார். பல கனவுகளுக்கு விதை போட்டுவிட்டார். “மிகச் சிறுவயதிலேயே தம்பி கருணாநிதிக்கு இந்த நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான கருத்து ஊறிவிட்டது” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். கருத்து மட்டுமல்ல, அந்தக் கருத்து மக்களுக்குப் பயனுள்ள செயலாக மாற்றத் தேவையான கனவும் இருந்தது என்பதை 1969-76 காலக்கட்டத்திலேயே நிரூபித்தும் விட்டார் கலைஞர்.

பள்ளிகள் இல்லாத ஊரில் பள்ளிகளைத் திறந்தார். பள்ளிக்கூடங்களை நோக்கி ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் அதிகம் வந்தார்கள். கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். அந்தக் காலக் கட்டத்தில் மட்டும் ஐம்பது கல்லூரிகள் புதிதாக உருவானது.

இன்னும் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் வட மாநிலங்களில் இருக்கிறது. ஆனால் 1972 ஆம் ஆண்டுக்குள் மின் ஒளி இல்லாத கிராமங்களே இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு தொண்டு ஆற்றியவர் முதல்வர் கலைஞர்.

அதே போலத் தான் குடிநீர் வசதி இல்லாத கிராமம் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

சமூகநலத் திட்டங்களின் மூலமாக நலிந்தோர் நலனைப் பேணி அவர்களைக் கைதூக்கி விட வேண்டிய கடமை ஒரு அரசாங்கத்துக்கு உண்டு என்பதைச் சிந்தித்துச் செயபடுத்தியவர் கலைஞர் அவர்கள்.

குடிசையில் வாழ்பவர்களுக்கு வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் கண்டவர் அவர். ‘சமூகநீதியில்அக்கறை கொண்ட அனைவர்க்கும் இது ஊக்கம் அளிக்கும் திட்டம்’ என்று உலக வங்கியின் தென் ஆசிய துணை இயக்குநர் கிரிகோரி வோட்டா அவர்களால் 1971 ஆம் ஆண்டே பாராட்டப்பட்ட திட்டம் தான் இந்த குடிசை மாற்று வாரியம் ஆகும்.

மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் திட்டம் இது என்று கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பைத் திறந்து வைத்து பேசும் போது சர்வோதயத் தலைவர் ஜெயப் பிரகாஷ் நாராயணன் அவர்கள் சொன்னார்கள். ‘அழுத பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் தரும் பொறுப்பு அரசுக்குஉண்டு’ என்று சொன்னவர் கலைஞர். அழாத பிள்ளைகளுக்கும் பால் கொடுத்த தமிழினத் தாய் தான் நம் கலைஞர்.

உணவு உற்பத்திக்கு இலக்கு வைத்தவர் கலைஞர் அவர்கள். ‘களஞ்சியம் நிரப்பிடக் கரிகாலன் வந்துவிட்டான்’ என்று அன்றைய பத்திரிக்கைகள் பாராட்டும் அளவுக்கு உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தியவர் கலைஞர் அவர்கள். இவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவர் எத்தகைய ஒரு நாட்டை அவர் உருவாக்க நினைத்தார் என்பதை உணரலாம். அதனால் தான், “தாய்த்திருநாட்டி திரும்பிய பக்கமெல்லாம் நலத்திட்டங்கள் மூலமாக கோடிக்கணக்கானவர்களுக்கு பயனளித்த வான்போற்றும் வள்ளல் தான் தலைவர் கலைஞர்” என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பாராட்டிப் போற்றினார்கள்.

கலைஞர் காலத்தில் நிறைவேற்ற முடியாத கனவுகளும் உண்டு. அதனை நிறைவேற்றும் ஆட்சியாக இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது ஆட்சி அமைந்துள்ளது. கலைஞரின் கனவுகளை மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் அனைத்துக் கனவுகளையும் நிறைவேற்றும் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக இது அமைந்துள்ளது.

“பாரதி இந்த நாட்டுக்குக் கொடுத்த சொத்துகள் இரண்டு. ஒன்று அவர் தம் கவிதைகள். மற்றொன்று பாரதிதாசன்” என்று எழுதினார் புதுமைப்பித்தன். அதேபோல், கலைஞர் இந்த நாட்டுக்குக் கொடுத்த சொத்துகளில் ஒன்று அவர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு. மற்றொரு சொத்து - இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அடுத்த ஆண்டு கலைஞர் அவர்களின் நூற்றாண்டு. பல்லாண்டு காலம், தனது கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமாக வாழ்ந்து கொண்டிருப்பார் கலைஞர்! ஆண்டு கொண்டு இருக்கிறார் கலைஞர்!

அவர் தம் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ இந்த 99ஆவது பிறந்தநாளில் வாழ்த்துகிறது தாழ் பணிந்து வாழ்த்துகிறது தாள்!

Also Read: “வாழ்வின் பொன்னான நாள் எது?” - பல்வேறு கேள்விகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அளித்த ‘தாறுமாறு’ பதில்கள்!