murasoli thalayangam

“ஊடக தர்மத்தைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா?” : துக்ளக்கிற்கு முரசொலி பதிலடி!

“ஊடக தர்மத்தைப் பற்றி யார் பேசுவது” என துக்ளக் இதழுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.

முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச., 9, 2021) தலையங்கம் வருமாறு:

ஊடக தர்மத்தைப் பற்றி யார் பேசுவது, யார் எழுதுவது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது! காலமெல்லாம் வர்ணத்தைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘துக்ளக்’ பத்திரிக்கை, ஊடக தர்மம் பற்றிப் பேசுவதுதான் அதர்மம்!

அனைத்து ஊடகங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊடகமாக மாறிவிட்டதாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சனமே செய்வதில்லையாம், போற்றிப் பாடுகிறதாம். ‘துக்ளக்’ இதழுக்கு ஒன்பது பொறிகளும் எரிகிறது.

ஆறு மாத காலத்தில் அகில இந்தியாவே போற்றும் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்து வருவதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதனால்தான் ‘குய்யோ முறையோ’ என்று விதம் விதமாய் கத்திப் பார்க்கிறார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டு ஊடகங்கள் இன்னமும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் குறித்தோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துடிப்பும், சிறப்பும் இணைந்த செயல்பாடுகள் குறித்தோ முழுமையாகச் சொல்லத் தவறியே வருகின்றன. அது அவர்களது விருப்பம். அதனை அவர்களது மனச்சாட்சி அறியும். தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்யத் தவறியதை அண்டை மாநில ஊடகங்கள் மிகச் சரியாகச் செய்கின்றன என்பதுதான் முழுமையான, யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

கேரளாவில் தி.மு.க ஆட்சியில் இல்லை. கேரளாவைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள் தமிழ்நாட்டு முதல்வரைப் புகழ்ந்தும், பாராட்டியும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை வழங்கி வருவது ‘துக்ளக்’ துர்வாசருக்குத் தெரியுமா? பேரே‘துர்’வாசர். அவர் துர்வாசனை தவிர வேறு ஏதும் அறிய மாட்டாரா?

ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ தி.மு.க ஆட்சியில் இல்லை. தெலுங்கு மொழி சார்ந்த ஊடகங்கள் தமிழ்நாட்டு முதல்வரைப் புகழ்ந்தும், பாராட்டியும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை வழங்கி வருவது ‘துக்ளக் ’துர்வாசருக்குத் தெரியுமா? ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், தமிழக முதலமைச்சரை தனது பேட்டியில் ‘தலைவர்’ என்றே விளித்தார். ‘ஏதோ என் உள்ளுணர்வு மு.க.ஸ்டாலின் அவர்களை அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது’ என்று அந்தப் பத்திரிக்கையாளர் பேட்டி அளித்தார்.

கன்னடத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டால், அதை உடனே கர்நாடகாவிலும் செய்யுங்கள் என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அந்தளவுக்கு முன்னுதாரணமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்து வருகிறார்’ என்று சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து ‘துக்ளக்’ என்ன சொல்லப்போகிறது?

‘நம்பர் ஒன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தேர்வு செய்தது தமிழ்நாட்டு ஊடகம் அல்ல. ‘நம்பர் ஒன் மாநிலம்’ என்று தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது தமிழ்நாட்டு ஊடகம் அல்ல. இவை அனைத்தும் வடமாநிலத்தில் இருந்து இயங்கும் ஊடகங்கள். இவர்களுக்கு தி.மு.க.வின் தயவோ, முதலமைச்சரின் தயவோ தேவையில்லை. ஆனாலும் பாராட்டுகிறார்கள் என்றால், அதுதான் உண்மையான ஊடக தர்மம். எது சரியோ அதைப் பாராட்டுவது. தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது. அதுதான் ஊடக தர்மம்.

‘துக்ளக்’ பத்திரிக்கை ஆரம்பித்ததே, ‘திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக!’. பத்திரிக்கையின் ஒரே குறிக்கோள், தி.மு.க.வை விமர்சிப்பது, கேவலப்படுத்துவது ஆகிய இரண்டுக்காக!

தி.மு.க.வை, தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களைக் கொச்சைப்படுத்துவது மட்டுமே தனது பிறவி தர்மமாகக் கொண்ட ஒரு பத்திரிக்கை, ஊடக தர்மம் குறித்து எழுதலாமா?

“சோவை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்” என்று பத்திரிக்கையாளர்கள் சின்னக்குத்தூசியிடமும் ஞாநியிடமும் சொன்னவர், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர். ஊடக தர்மம் நாறியது அன்று!

அ.தி.மு.க.வின் பொருளாளராகவும், அமைச்சராகவும் முன்பு இருந்தார் பி.சௌந்தர பாண்டியன். ‘எம்.ஜி.ஆருக்காக என்னை வேவு பார்க்கிறார் சோ’ என்று பேட்டி கொடுத்தார் அவர். ஊடக தர்மம் நாறியது அன்று!

அமைச்சர் காளிமுத்துவிடம் பேட்டி எடுத்துவிட்டு அதனை பத்திரிக்கையில் பிரசுரம் செய்வதற்கு முன்னதாக எம்.ஜி.ஆருக்குப் போட்டுக்காட்டிவிட்டார் என்று அன்று செய்தி பரவியது. ஊடக தர்மம் அன்று நாறியது!

‘சசிகலா’ கஸ்டடியில் இருந்த ஜெயலலிதாவை முதலில் எதிர்த்தும், அதன்பிறகு ‘சசிகலா’வை அவரிடம் இருந்து பிரித்தும் ஞானகுருவாகவே கடைசிவரை இருந்து செயல்பட்டவர் நடத்திய பத்திரிக்கை, ‘ஊடக தர்மம்’ குறித்து எழுதுகிறது.

பச்சையாக, தி.மு.க.வை வீழ்த்துவதற்காக ‘சாக்கடை ஜலத்தைப் பயன்படுத்துவோம்’ என்று குருமூர்த்திகள் கொக்கரித்த காட்சியைப் பார்த்தோமே!

தர்மனின் தோல் போர்த்திய சகுனிகள் இன்று தமிழ்ச் சமுதாயத்துக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எமனுக்கே தர்மன் என்ற பெயருண்டு. ‘எமதர்மன்’ என்பது உலகோர் வழக்கு. இவர்கள் எல்லாம் இந்த வகையினர் என்பதை உலகுக்கு உணர்த்தியது திராவிட இயக்கம். அதனால்தான் திராவிட இயக்கத்தின் மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க. மீது கட்டி வைத்த பொய்ப் பிம்பத்தை,பேசாமலேயே தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தகர்த்துவிட்டார், தகர்த்து வருகிறார் என்ற எரிச்சலில் இவர்கள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதட்டும். நாம் செயல்படுவோம்!

Also Read: "நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: மக்களைக் காக்கத்தான் அரசு.. காவு வாங்க அல்ல"- ஒன்றிய அரசைச் சாடிய முரசொலி!