கோப்புப்படம்
murasoli thalayangam

“பேரிடர் காலங்களில் கனமழைக்கு ஏற்ப முழு நிதியை வழங்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு ‘முரசொலி’ வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது!

இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும்; அதன்பிறகு நின்றுவிட்டு, பின்னர் மழை இருக்கும். ஆனால் இப்போதோ இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது! சில மாவட்டங்களில் கனமழை இருக்கும், மற்ற மாவட்டங்களில் மழை இருக்காது. ஆனால் இப்போதோ அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கட்டி கனமழை பெய்து வருகிறது!

தினந்தோறும் பெய்யும் அளவும் அதிகமாக இருக்கிறது. பெய்யத் தொடங்கினால் பெய்துகொண்டே இருக்கிறது. முதலில் சென்னை, அதன்பிறகு கடலூர், பின்னர் டெல்டா மாவட்டங்கள், அதன்பிறகு கன்னியாகுமரி, அதைத் தொடர்ந்து விழுப்புரம், காஞ்சிபுரம், இப்போது தென்மாவட்டங்கள் என மழை வரிசையாக தனது கைவரிசையைக் காட்டி வருகிறது. ‘24 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழையைப் பெறுகிறது திருச்செந்தூர்’ என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியபிறகு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 534.6 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமாக சராசரியாக 338.4 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் இந்தாண்டு 534.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 61% அதிகம். சென்னையில் வழக்கமாக சராசரியாக 582.4 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் இந்தாண்டு 928.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 59% அதிகமாகும்.

அதிகபட்சமாக திருப்பத்தூரில் 517.6 மி.மீ. பதிவாகியுள்ளது. வழக்கமாக சராசரியாக 216.1 மி.மீ. மழை பதிவாகும். இது இயல்பை விட 140% அதிகம். வடகிழக்குப் பருவ மழையில் சென்னையில் ஒருநாள் அதிகபட்சமாக நவம்பர் 7-ஆம் தேதி 126.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவ மழையில் நாகப்பட்டினத்தில் நவம்பர் 10-ஆம் தேதி ஒரே நாளில் 276.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையில் கன்னியாகுமரியில் நவம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 90.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடல் பகுதியில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. மழை, காலநிலைகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் இது குறித்து விரிவாக எழுதி வருகிறார்கள்.

வரலாற்றுப் புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தால் டிசம்பர் 6, 1997ஆம் ஆண்டு திருச்செந்தூரில் 280 மி.மீ. மழை ஒரே நாளில் பதிவானது. 24 ஆண்டுக்குப் பிறகு திருச்செந்தூர் வரலாறு காணாத மழையை பெறுகிறது. இத்தகைய சூழலில் இருந்து மக்களையும், மாநிலத்தையும் மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான நிதி உதவியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கனமழை வெள்ளப் பாதிப்புகளைச் சீரமைக்க 4 ஆயிரத்து 625 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கன மழையினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளச் சேதங்களைத் தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்ட மதிப்பீடாக 549 கோடியே 63 லட்சம் ரூபாயும், நிரந்தரமாகச்சீரமைக்க 2 ஆயிரத்து 79 கோடியே 86 லட்சம் ரூபாயும் என ஆக மொத்தம் 2 ஆயிரத்து 629 கோடியே 29 லட்சம் ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி, ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கணக்கெடுக்கப்பட்டுள்ள, கூடுதலான சேத விவரங்களின்படி தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கு 521 கோடி ரூபாயும், நிரந்தரமாகச் சீரமைக்க ஆயிரத்து 475 கோடி ரூபாயும் என ஆயிரத்து 996 கோடி ரூபாய் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ள தொகை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ஆயிரத்து 70 கோடியே 92 லட்சம் ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 3 ஆயிரத்து 554 கோடியே 88 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4ஆயிரத்து 625 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுவரை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கிட்டுக் கேட்கப்படும் நிதிதான். அடுத்தடுத்து பெய்ய இருக்கும் மழைக்கானது அல்ல. இது போன்ற பேரிடர் காலங்களில் ஒன்றிய அரசு முழு ஈடுபாட்டுடன் மக்களைக் காக்க நிதி வழங்க முன்வர வேண்டும். கனமழையின் அளவுக்கு ஏற்ப முழு நிதியை வழங்க வேண்டும்

Also Read: நாளையும் மிககனமழை எச்சரிக்கை... 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?