murasoli thalayangam

“பேரழிவு காலத்தில் உயிர்காக்கும் மருந்தைக் கூட கெஞ்சிக் கேட்டு வாங்கவேண்டுமா?”: முரசொலி தலையங்கம் கேள்வி!

முரசொலி நாளேட்டின் இன்றைய (15-07-2021) தலையங்கம் வருமாறு:

தடுப்பூசி தாருங்கள்!

தடுப்பூசியை தடையின்றி வழங்குங்கள்!

தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லாமல் கொடுங்கள்!

-மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசிடம் வைக்கும் ஒற்றைக் கோரிக்கை இதுதான்!

‘மக்களின் அலட்சியம் கவலை அளிக்கிறது’ என்று நேற்றைய தினம் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். கொரோனா பரவலைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுவெளிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைகிறார்களே என்பதுதான் பிரதமரின் வருத்தத்துக்குக் காரணம். உண்மைதான். அதைப் போலவே, இவ்வளவு கொரோனா பரவல் காலத்திலும் மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்காமல் ஒன்றிய அரசு இருப்பதற்குப் பேர் அலட்சியம் அல்லவா?

இந்த அலட்சியத்தை ஒன்றிய அரசுக்கு உணர்த்தி இருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், தமிழகத்துக்குக் குறைவான அளவில்தான் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றும், அதனால் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வமாக முன்வரத் தொடங்கியுள்ளார்கள் என்றும், அந்த ஆர்வத்துக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். மிக முக்கியமான வேறுபாட்டையும் முதலமைச்சர் உணர்த்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு 302 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆயிரம் பேருக்கு முறையே 533, 493, 446 தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. இந்த பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர். இதற்கு பதில் சொல்லவேண்டியது ஒன்றிய அரசு தான்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. அதனால் பொதுமுடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் வெளி நடமாட்டம் தவிர்க்க முடியாத நிலையில் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்குமானால் அதுவே சரியானதாக இருக்கும். அப்படி தமிழ்நாட்டு மக்கள் முழுமைக்கும் தடுப்பூசி வழங்கவே அரசு தவிக்கிறது. ஆனால் ஒன்றிய அரசோ தவிர்க்கிறது.

கழக அரசு பதவிக்கு வந்தபோதே தடுப்பூசி போதாமை இருந்தது. ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியது கழக அரசு. இங்கு போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லை என்றால் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ள உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. அம்மாதிரி ஒரு மாநில அரசு பெறுவதற்குத் தடை விழுந்தது. இதனை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்பதை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியது.

அடுத்து செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை எப்படியாவது உயிர்ப்பித்துவிட முடியுமா என்று முதலமைச்சர் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு அப்படியே கிடக்கிறது அந்த நிறுவனம். 2013ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதனைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கவில்லை. தமிழ்நாடு அரசிடம் ஒப்படையுங்கள், அல்லது குத்தகைக்குத் தாருங்கள் என்று கேட்டார் முதலமைச்சர். அதுவும் நடக்கவில்லை. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லிக்குச் சென்று கோரிக்கை வைத்தார். அதனையும் ஏற்கவில்லை. பாரத் பயோடெக் நிறுவனம் எடுத்து நடத்த இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி செல்ல இருக்கிறார். இதன் பிறகுதான் செங்கல்பட்டு செயல்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

புதிய தடுப்பூசிகள் வரப்போகிறது, புதிய நிறுவனங்கள் வரப்போகிறது என்று பிரதமர் சொன்னார். அதுகுறித்து அடுத்த கட்ட முன்னெடுப்புகள் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 985 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 25.9 சதவிகிதம் பேருக்குத்தான் போடப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் என்பது மிகமிகக் குறைவானது ஆகும். அதனால்தான் ஒரு கோடி தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்கிறோம். ஒரே நாளில் 8 லட்சம் தடுப்பூசி போடும் அளவுக்கு நம் மாநிலத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது.

தடுப்பூசிதான் கவசம் என்று ஒன்றிய அரசு விளம்பரம் செய்கிறது. இப்போது தேவை விளம்பரமோ, விழிப்புணர்வோ அல்ல. அது அதிகமாக மக்களிடம் வந்துவிட்டது. இப்போது தேவை தடுப்பூசிதான். அதனைக் கேட்காமலேயே தாருங்கள்.

ஜூன் 27ஆம் தேதி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். அதன் பிறகு தான் தடுப்பூசி வந்தது. மக்களவை கழகக் குழுத்தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு டெல்லி சென்று கோரிக்கை வைத்தார். அதன் பிறகு தடுப்பூசிகள் வந்தன. மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று கோரிக்கை வைத்த பிறகுதான் 10 லட்சம் தடுப்பூசிகள் வந்தது. இப்படி எல்லாமே கேட்டுக் கேட்டு வாங்க வேண்டி உள்ளது.

அதாவது பேரழிவு காலத்தில் உயிர்காக்கும் மருந்தைக் கூடக் கெஞ்சிக் கெஞ்சி கேட்டு வாங்க வேண்டிய சூழலில் ஒன்றிய அரசு வைத்துள்ளது என்றால் மற்ற விவகாரங்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை!

Also Read: “மேகதாது அணையால் ஆபத்துதான்.. அதை எந்த வகையிலும் தடுத்தாக வேண்டும்” : முரசொலி தலையங்கம்!