murasoli thalayangam
‘NEET’க்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ஒன்றிய அரசுக்கு ‘முரசொலி’ பதிலடி!
நீட் போன்ற தேசிய அளவிலான அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதியான, உறுதியான முடிவாக உள்ளது என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
“நீட் - நீண்ட போராட்டம்” என்ற தலைப்பில் முரசொலி நாளேட்டில் வெளிவந்துள்ள தலையங்கம் பின்வருமாறு:-
நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். இது நீட் தேர்வுக்கு எதிரான நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சி. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை இது தொடரும் என்பதுதான இந்தக் கடிதம் மூலமாக முதல்வர் சொல்ல வருவது!
மருத்துவத்துக்கு ஒரு நுழைவுத் தேர்வு என்று சொல்லப்பட்டதுமே எதிர்த்த இயக்கம் தி.மு.கழகம். 2013 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியே தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய பா.ஜ.க. அரசு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி உயிர் கொடுத்தது. அப்போதும் தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
நீட் தேர்வு என்பதே 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. முதல் தேர்வு நடந்ததே 2016 இல்தான். பல்வேறு மாநிலங்கள் எதிர்த்த காரணத்தால் விதிவிலக்கு தரப்பட்டது. 2016 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் 2016- 17 ஆம் ஆண்டுக்கான தேர்வில் விலக்கு கிடைத்தது. ஆனால் அடுத்து வந்த பழனிசாமி அரசாங்கம் அதன் பிறகு நீட் தேர்வை தலையாட்டி ஏற்றுக் கொண்டு விட்டது.
தானும் எதிர்ப்பது போல காட்டுவதற்காக இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒப்புக்கு அனுப்பினார்கள். உண்மையில் இவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் என்றால், தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை செல்லும்படி ஆக்க ஒன்றிய அரசை அழுத்தம் கொடுத்து வலியுறுத்தவில்லை.
ஏனென்றால், அந்த வலிமை அவர்களுக்கு இல்லை. அ.தி.மு.க அரசின் கையாலாகாத தனத்தால்தான் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்கள். நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று ஏழு மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்த போதும் அ.தி.மு.க. அரசு சும்மா தான் இருந்தது.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு நீட் தேர்வுக்கு எதிரான தனது தார்மீகப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இதனுடைய நோக்கத்திலேயே அனைத்தும் அடங்கி இருக்கிறது.
“ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின் தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு ஏற்படுத்திட உறுதி பூண்டுள்ளது” என்று மிகத்தெளிவாக முதல்வர் சொல்லி விட்டார்கள்.
நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. சேர்ந்து விடக்கூடாது என்பதால் தான் நீட் தேர்வே கொண்டு வரப்பட்டதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. 12 ம் வகுப்பில் பெருவாரியான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. அந்தளவு கடினமாக தேர்வு முறை உள்ளது. இலட்சக்கணக்கில் பணம் செலுத்தி கோச்சிங் சென்டர்களில் இரண்டு ஆண்டுகள் படிப்பவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.
இதனால் அரசுப் பள்ளியில் படித்த ஏழை எளிய, நடுத்தர, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களால் இலட்சக் கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி மையங்களுக்கு சேர முடியுமா? முடியாது. கடந்த ஆண்டு தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 6 ஆயிரத்து 692 பேர் நீட் தேர்வை எழுதினர். இதில் 1,633 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ளது.
அப்படியானால் இதை விட சமூக விரோதம், மக்கள் விரோதம் என்ன இருக்க முடியும்? நீட் தேர்வு முறையே பின் தங்கிய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? ( 7.5 சதவிகித இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற எண்ணிக்கையை இதில் சேர்க்கக் கூடாது) இந்த நோக்கத்துடன்தான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதே தமது அரசின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். எந்தவொரு தொழில் கல்விப் படிப்புக்கும் தேசிய அளவிலான பொதுநுழைவுத் தேர்வை நடத்துவது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
நீட் போன்ற தேசிய அளவிலான அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது அவரது இறுதியான, உறுதியான முடிவாக உள்ளது. நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் அறிக்கைக்குப் பின்னால் தமிழக அரசின் சட்டரீதியான முயற்சிகள் தொடங்க இருக்கின்றன! நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!