murasoli thalayangam
“1989 சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்று எப்படித் தெரியும்?”: மோடியின் பொய்களை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’!
திண்டுக்கல் லியோனி தேர்தலில் நிற்கிறாரா இல்லையா என்ற குறைந்தபட்ச தகவலைக் கூடத் தெரிந்து கொள்ளாத மோடிக்கு 1989 சட்டமன்றத்தில் நடந்தது எப்படித் தெரியும்? 1989 மார்ச் 25ம் நாள் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதாக அவருக்கு யாரோ மண்டபத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதனை அவர் தாராபுரத்தில் வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
பிரதமர் தனது உரையில் பயன்படுத்தும் போது, சொல்லும் போது காட்ட வேண்டிய குறைந்தபட்ச அக்கறையை யாவது அவர் காட்டினாரா என்று தெரியவில்லை. அப்படி அக்கறை செலுத்தி இருந்தால், அப்படி பேசி இருக்க மாட்டார். அதுவும் இவர் சொல்லும் நிகழ்வு சட்டசபையில் நடந்தது என்கிறார். சட்டசபையில் அப்படி நடந்ததாக அவைக் குறிப்புகளில் இருக்கிறதா?
அப்படி ஏதாவது அன்றைய தினம் சபை நிகழ்வுகளை எழுதிய நிருபர்கள் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி இருக்கிறார்களா? ஜெயலலிதா ஏதாவது வழக்குப் போட்டுள்ளார்களா? என்ன வரலாற்று ஆதாரத்தை வைத்து ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதாக மோடி சொல்கிறார்?
நாடாளுமன்றத்தில் நடக்காத ஒரு சம்பவம் குறித்து இப்படி நடந்ததாக பேசிவிட்டுப் போய்விட முடியுமா? உரிமை மீறல் கொண்டு வர மாட்டீர்களா? அதே உரிமை முறை தமிழக சட்டசபைக்கு இல்லையா? 14 ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகிறது.
அவையின் முதல் நிதி நிலை அறிக்கையை முதல்வரும் நிதியமைச்சருமான மாண்புமிகு கலைஞர் அவர்கள் வாசிக்கப் போகிறார்கள். அவரை அவமானப்படுத்தும் வகையில் ஆத்திரத்தின் உச்சத்துக்குப் போய் வார்த்தைகளை உச்சரித்த ஜெயலலிதா தன்னுடைய ஆட்களை வைத்து முதல்வர் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க வைத்தார். கிழிக்க வைத்தார். முதல்வர் முகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் குத்தினார். அதனால் அவரது கண்ணாடி உடைந்தது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலையில் ஒரு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒலி பெருக்கியால் அடித்தார். அதில் அவர் தலையில் இருந்து ரத்தம் ஒழுகியது.
மிகப்பெரிய மோதலை நடத்துவதன் மூலமாக நிதிநிலை அறிக்கையை அது அறிவிக்கப்பட்ட நேரத்தில் படிக்கவிடாமல் தடுப்பதும் - அதையே காரணமாகக் காட்டி கலவரம் ஏற்படுத்துவதும் - அன்று மாலையே ஆட்சியைக் கலைப்பதும் தான் - ஜெயலலிதாவின் திட்டங்கள். இந்த சதித்திட்டம் தான் 1989 மார்ச் 25 சபையில் அரங்கேறியது.
அவைக்குள் அனைத்து பத்திரிக்கை நிருபர்களும் இருந்தார்கள். யாராவது மறுநாள் வெளியான நாளிதழில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார் என்று எழுதி இருக்கிறார்களா? ஜெயலலிதா அவராகச் சொன்னவை அனைத்தும் பொய்கள். அவரது கற்பனைகள். அந்தக் கற்பனைகள் எப்படி வரலாறு ஆகும்?
அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை அன்றைய தினம் அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் 1996ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தனது வாக்குமூலமாகவே சொல்லி இருக்கிறார். அது இதுதான் : “இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாக சொல்வதாகும்.
ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து, ‘நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்' என்று சொன்னார். நான் உடனே மிகுந்த வேதனையோடு சொன்னேன்.
“தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களை பத்தாண்டு காலம் கௌரவமிக்க பதவிகளில் வைத்துவிட்டுப்போயிருக்கிறார். தயவு செய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. இரண்டாவது இதுபோன்ற சம்பவம் வேண்டாம்' என்று நான் வாதாடினேன்.
நான் முடியாது என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப்பார்த்து , ‘சரி. அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார். உங்களில் யாருக்கு வசதிபடுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கி கிழியுங்கள்' என்று சொல்லிவிட்டு மேலே போய்விட்டார். டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே, திரு. ராகவானந்தம், திரு.மாதவன், திரு.எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்த தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அங்கே போய், ‘யார் இந்த ஆலோசனையைச் சொன்னது?' என்று அவர்களிடத்திலே சண்டை போட்டேன். பிறகு ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார்.
அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறையைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி. ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும், திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆரும் முன்னாலேயும், பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிற வரை, ‘இன்றைக்கு மாலையே ஆட்சியை கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்' என்று சொல்லிக் கொண்டே வந்தார்’’ - இதுதான் உண்மை.
ஒரு கலவரம் எப்படி திட்டமிடப்பட்டது என்பதை இதன் மூலம் மோடி அறியவேண்டும். மற்றபடி மோடி சொன்னது வழக்கம் போல் நான் டீ விற்றேன், வங்கதேசத்துக்காகப் போராடினேன் என்பது போன்ற கற்பனைகள்தான். எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் வைத்து ஜானகி கொடுத்தார், சென்னா ரெட்டி கையைப் பிடித்து இழுத்தார் - என்பது போன்ற ஜெயலலிதாவின் கப்சாக்களைப் பார்த்தது தமிழகம். அதனால் இது போன்ற பொய்களை மோடி, கொஞ்சம் கேட்டுத் தெரிந்து பேச வேண்டும்!
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!