M K Stalin

கோவையில் 50 சென்டில், 3 தளங்களை கொண்ட திமுக அலுவலகம்.. - அடிக்கல் நாட்டும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (நவ.4) கோவையில் நடைபெறும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகை தருகிறார்.

அதில் முதலாவதாக, கோவை நீலாம்பூரில், 50 சென்ட் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகம் பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (4-11-26) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுக கோவை மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி செய்து வருகிறார்.

புதிய ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகம், 3 தளங்களை கொண்டதாகவும், இதில் கீழ் தளத்தில் திருமண மண்டபம், முதல் தளத்தில் டைனிங் ஹால், 3-ம் தளத்தில் ஒருங்கிணைந்த திமுக அலுவலகம், கூட்ட அரங்கம் அமைய உள்ளது. மேலும், விசாலமான 4 சக்கரம் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தம் இடமும் அமைய உள்ளது.

நாளை நடைபெற உள்ள இந்த விழாவில், மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ ஏற்பாட்டில், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக தொண்டர்கள் திராளானோர் பங்கேற்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டும் விழாவில் கலந்துகொண்டு, ஏற்புரை ஆற்ற இருக்கிறார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் நன்றி பாராட்டும் விழாவிற்கு, தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையேற்று நன்றி பாராட்டுரை வழங்க இருக்கிறார். இதில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

Also Read: “புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனில்லை!” : மரிய வில்சனுக்கு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பதிலடி!