M K Stalin
“இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.1.2026) சென்னையில் நடைபெற்ற சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை.
சிறுமலர் பள்ளிக்கு நான் வருவது இது முதல் முறை அல்ல. 1984-ஆம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து 40 ஆண்டு காலமாக இந்தப் பள்ளிக்கு வந்துதான் என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
எந்த ஒரு நிறுவனமும், நூறாண்டு நிலைத்து நிற்பது என்பது மிகப் பெரும் சாதனை. அதுவும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரு கல்வி நிறுவனம் நூறாண்டு காண்பது என்பது பெருமைக்குரிய சாதனை.
ஆசிய அளவில், இப்படி ஒரு சாதனையை செய்திருக்கக்கூடிய பள்ளிகளை விரல்விட்டு எண்ணிடவிடலாம். அப்படி, நூற்றாண்டு சாதனை மைல்கல்லை எட்டியிருக்கின்ற இந்த லிட்டில் பிளவர் பள்ளியினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
இப்போது, நான் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தால், என்னை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. நான் எப்போதும் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும் கூட, இந்த நிகழ்ச்சிக்கு நிச்சயமாக அழைக்கப்பட்டிருப்பேன்.
ஏனென்றால், லிட்டில் பிளவர் கான்வென்ட்டுக்கும், எனக்கும் அப்படி ஒரு நீண்ட நெடிய, ஆழமான உறவு இருக்கிறது. ஒருவேளை, நீங்களே அழைக்க மறந்தாலும், நான் உரிமையோடு வந்து உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பேன். மறக்கமாட்டீர்கள்!
இப்போது கூட சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கின்ற சமயம். இருந்தாலும், லிட்டில் பிளவர் நூற்றாண்டில், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று இங்கே வந்திருக்கிறேன். இங்கே பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், படிக்கின்ற மாணவர்களுக்கு நான் புது நபர் கிடையாது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்ற மற்றவர்ளுக்காகத்தான் இந்த தகவல்களை சொல்லுகிறேன்.
லிட்டில் பிளவர் பள்ளிக்கு, நான் சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கிறேன்; சென்னைக்கு மேயராகி வந்திருக்கிறேன்; உள்ளாட்சித்துறை அமைச்சராகி வந்திருக்கிறேன்; துணை முதலமைச்சராக இருந்து வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் வந்திருக்கிறேன்; இப்போது முதலமைச்சரான பின்பும் தொடர்ந்து ஆண்டு தவறாமல் இந்த லிட்டில் பிளவருக்கு நான் வந்து கொண்டிருக்கிறேன். இப்போது மட்டுமல்ல; இனியும் வருவேன். எப்போதும் வருவேன்.
மார்ச் 1 அன்றைக்கு வந்தால், அதிக நேரம் இங்கே செலவிட முடியாது என்று இப்போதெல்லாம் சில முறை அதற்கு முதல் நாளே வந்து சென்றுவிடுவேன். அப்போது தான் நீண்ட நேரம் மழலைகளுடன் இருந்து, கேக் வெட்டி கொண்டாடுவேன். நான் மட்டுமா வருவேன்! என்னுடைய குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வருவேன்!
அந்த பிறந்தநாளை இங்கே இருக்கக்கூடிய குழந்தைகளோடு தான் கொண்டாடுவோம். அதுமட்டுமா! அவர்கள் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பேன்; அவர்களுடன் மனம்விட்டு நான் பேசியிருக்கிறேன்; அவர்களுக்கு இனிப்புகள் நான் வழங்குவேன். இப்படிப்பட்ட உறவுதான் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் இந்த லிட்டில் பிளவர் பள்ளிக்குமான உறவு.
இந்த 40 ஆண்டுகளில், எத்தனையோ அழகான, நெகிழ்ச்சியான, பெருமிதமான உணர்வுகளையும் நினைவுகளையும் இந்தப் பள்ளி எனக்கு கொடுத்திருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஒருமுறை இந்த பள்ளிக்கு பிறந்தநாள் கொண்டாட வந்தபோது, பெனோ ஜெஃபின் என்கிற மாணவியை நான் சந்தித்தேன்.
“அமெரிக்காவில் நடைபெறும் இளந்தலைவர்கள் மாநாட்டிற்கு நான் தேர்வாகியிருக்கிறேன் – நீங்கள் அமெரிக்கா செல்வதற்கு எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று ஒரு கடிதத்தை வழங்கினார். அப்போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் முதலமைச்சர் – நான் உடனே அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு, தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரிடத்தில் எடுத்துச் சொல்லி, ஒரு சிறப்பு நேர்வாக, அந்த மாணவிக்காக நிதி விடுவித்து, அமெரிக்கா செல்ல உதவினோம்.
அதுமட்டுமல்ல, அவரின் பிறந்தநாள் அன்றைக்கு, அவரது வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தோம். கொளத்தூரில் தான் அவர்கள் வீடு. எனக்குத் தெரியாது – நான் கொளத்தூர் எம்.எல்.ஏ கிடையாது – அப்போது ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ. அந்த பெனோ ஜெஃபின் தான் பின்னாளில், ஒரு பெரிய சாதனையைப் படைத்திருந்தார்கள். உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தியாவிலேயே, I.F.S.-ஆக தேர்வான முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உங்கள் பள்ளியில் படித்த சீனியர்தான்.
என்னுடைய மனைவி கூட ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள், ‘அவரும் நானும்’ என்று ஒரு தொடர். அதில் கூட இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
இப்படி, பல்லாயிரம் சிறப்புக் குழந்தைகளின் வாழ்க்கையில், இந்த சிறுமலர் பள்ளி ஒளியேற்றி வைத்திருக்கிறது. I.C.M. அருட்கன்னியரின் கருணையால், 1926-ஆம் ஆண்டு 3 மாணவர்களின் ஊன்றப்பட்ட சிறிய விதை, இன்றைக்கு இவ்வளவு பெரிய ஆலமரமாக, பலருக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது.
நூற்றாண்டு காணும் இந்த வேளையில், இந்தப் பள்ளியை தொடங்கிய பெல்ஜியம் நாட்டு அருட்சகோதரிகளை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்லாமல், இளம் பெண்களின் வாழ்வாதாரத்திற்காகவும் தொழில் முனைவோர் பட்டறை, தடுப்பு மற்றும் புனர்வாழ்வு மையங்களையும் அமைத்து, சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றி வருகிறீர்கள். மேலும், வீட்டு வேலை தொழிலாளர்கள் நலன், புலம்பெயர் தொழிலாளர்கள் நலன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல பணிகளையும், தொடர்ந்து செய்துகொண்டு வரும் LFC-குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னலமற்ற உங்களின் இந்த சேவை இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர வேண்டும்.
இங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு நான் சொல்வது, இப்போது எப்படி தன்னம்பிக்கையுடன் படிக்கிறீர்களோ, இதே உறுதியுடன் நீங்கள் மேற்படிப்பையும் படித்து முடிக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கக் கூடிய அரசும், முதலமைச்சரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று மறந்துவிடாதீர்கள். எது வந்தாலும், நாங்கள் இருக்கிறோம் – தொடர்ந்து படியுங்கள்.
ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகையை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இருமடங்காக உயர்த்தி அறிவித்திருக்கிறோம். பிஎச்.டி படிக்கும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்திருக்கிறோம். நீங்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் ரூபாய் பராமரிப்புத் தொகை வழங்கப்படுகிறது. நம்முடைய அரசு தரும் ஆதரவால், பாராலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்று பல உலகத் தொடர்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை மேல் சாதனை படைத்துகொண்டு இருக்கிறார்கள்.
மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ இப்படி பல ரோல்மாடல்கள் உருவாகிக் கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும். அண்மையில் கூட, தமிழ்நாட்டில் உள்ள 13 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் இடம்பெற இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை நம்முடைய ஆட்சி செய்திருக்கிறது.
லிட்டில் பிளவர் மாணவர்கள் போலவே, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் ஏதாவது ஒரு துறையில், Achieve செய்ய வேண்டும். சாதனை படைக்க வேண்டும். அதற்காகத்தான், உங்கள் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் இதையெல்லாம் நான் சொல்கிறேன். கல்வியறிவோடு, தன்னம்பிக்கையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், விடாமுயற்சியையும் போதிக்கும் - லிட்டில் பிளவர் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் இல்லாமல் இந்த நூற்றாண்டு சாதனை சாத்தியம் இல்லை. லிட்டில் பிளவர் சாதனைகள், மேலும் மேலும் தொடரட்டும்! பன்மடங்கு பெருகட்டும்! உங்களோடு எனக்கு இருக்கும் இந்த பாச உறவும், என்றும் தொடரும்! நாம் எல்லோரும் சேர்ந்து ‘வெல்வோம் ஒன்றாக’ என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் வைத்திலிங்கம்!
-
“ஒன்றிய பாஜக அரசே திராவிட மாடல் திட்டங்களைப் பாராட்டியுள்ளது” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!
-
“எங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : புதிய வீடு பெற்ற பயனாளர்கள் நெகிழ்ச்சி!
-
இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று தொடங்கும் T20 போட்டி… எங்கு? எப்போது? - முழு விவரம் உள்ளே!
-
மீண்டும் மீண்டும்... இலங்கை கடற்படை காவலில் 90 தமிழக மீனவர்கள்... ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!