M K Stalin

தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2025) திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளை திறந்து வைத்தபின்னர், திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். 

அரசு மாதிரி பள்ளிகள்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் (அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் - STEAM) சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையிலும் மாதிரிப் பள்ளிகள் மாவட்டந்தோறும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

=> திருவண்ணாமலை மாநகரில் திறந்து வைக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் விடுதிகள்

திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் 4.52 ஏக்கர் பரப்பளவில்  19 கோடியே 33 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிலும், மாணவர்கள் விடுதிக் கட்டடம்  18 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவிலும், மாணவியர் விடுதிக் கட்டடம் 18 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 56 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிகள் 400 மாணவர்கள் மற்றும் 400 மாணவியர் தங்கும் வசதி கொண்டதாகும். 

=> மாதிரி பள்ளி மற்றும் விடுதி கட்டடங்களின் முக்கிய அம்சங்கள்

திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம், தரை மற்றும் இரண்டு தளங்களுடன்  மொத்தம் 52,695 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 22 வகுப்பறைகள், பெண் மற்றும் ஆண் ஆசிரியர்கள் அறைகள், பல்நோக்கு மண்டபம், நூலகம், கலை மற்றும் கைவினைப் பயிற்சி அறை, மூன்று மாற்றுத் திறனாளிகள் கழிப்பறைகள், 60 கழிப்பறைகள், 6 கைக் கழுவும் தொட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி (Ramp), வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள், 2 உயர் தொழில்நுட்பக் கணினி அறைகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. 

மாணவர்  மற்றும் மாணவியர் விடுதிகள் : மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 73,195 சதுர அடி பரப்பளவில் தனித்தனி கட்டடங்களாக கட்டப்பட்டுள்ளன. 

இவ்விடுதிகள், மாணவர்களுக்கு 416 மற்றும் மாணவியர்களுக்கு 416 படுக்கைகள், என மொத்தம் 832 படுக்கை வசதிகளை கொண்டது. மேலும், பொது அறை / நூலகம், தலா 2 விடுதிக் காப்பாளர் அறைகள், தலா 2 மின்தூக்கிகள், சமையலறைகள், சமையல் பொருட்கள் சேமிப்பு அறைகள், தலா 200 நபர்கள் அமரும் கொள்ளளவு கொண்ட உணவுக் கூடம், கைக் கழுவும் பகுதிகள், எரிபொருள் அறைகள், தலா 65 கழிப்பறைகள், தலா 10 மாற்றுத் திறனாளிகள் கழிப்பறைகள், தலா 75 குளியலறைகள், தலா 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், 20 வெந்நீர் இயந்திரங்கள் (Water Heater 25 லிட்டர்), தலா 2 தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், ஆழ் துளை கிணறுகள், தீ அணைப்பான்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திருவண்ணாமலை மாநகர் அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு,  அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுடன் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

அப்போது, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிஷா, நவம்பர் 27 - 30 வரை திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Also Read: திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!