M K Stalin

ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (7.12.2025) மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் ரூ.35,560.15 கோடி முதலீட்டில், 52,060 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், ரூ.1,100.20 கோடி முதலீட்டில் 4,706 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம், ரூ.36,660.35 கோடி முதலீட்டில் 56,766 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை

  • தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் சில முக்கிய திட்டங்களின் விவரம் பின்வருமாறு:

  • Pei Hai குழுமம் : தைவான் நாட்டைச் சேர்ந்த Pei Hai குழுமம், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் திட்டத்தினை மதுரையில் நிறுவிட உள்ளது.  இதன்மூலம், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.  இதில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் மகளிருக்கானவை ஆகும்.

  • Hyundai நிறுவனம் : ஒரு கப்பல் கட்டுமானத் திட்டத்தை நிறுவிட உள்ளது.  கப்பல் கட்டுமானத் துறையில், தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் அடைந்துவரும் இத்தருணத்தில், இத்தகைய முதலீடு, மற்ற நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, உபபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கத்தகுந்த வகையில் இருந்திடும்.

  • SFO Technologies: பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்ப தீர்வுகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், மின்னணு உபபாகங்கள் உற்பத்திக்கான விரிவாக்கத் திட்டத்தை தேனியில் மேற்கொள்ள உள்ளது.

  • Reliance Industries:  தென் மாவட்டங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், உயிர் எரிசக்தித்துறையில் (Bio Energy) ரூ.11,000 கோடி முதலீடு மேற்கொள்ள உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ.1,100.20 கோடி முதலீட்டில் 4,706 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இம்மாநாட்டின் பிற முக்கிய நிகழ்வுகள்

சிப்காட் மேலூர் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல்

மதுரையின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையிலும், புதிய முதலீடுகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் ஒருதளம் அமைத்துத்தரும் வகையிலும், மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திற்குரிய அடிப்படை வசதிகள் மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற சிறந்த சூழலமைப்புடன் ஒரு தொழிற்பூங்கா சிப்காட் மூலம் உருவாக்கப்பட உள்ளது.   இத்தொழிற் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாஸ்டர் பிளான் 2044 வெளியீடு

பாரம்பரியம் மற்றும் புதிய வாய்ப்புகள் இணையும் முன்னோடியான நகரமாக மதுரை வளர்ச்சி பெறவேண்டும் என்ற வகையில், 42 லட்சம் மக்கள்தொகையை எதிர்நோக்கி, நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP)  தயாரித்துள்ள “மதுரை மாஸ்டர் பிளான் – 2044” னை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வெளியிட்டார். 

தமிழ்நாடு பொம்மைகள் உற்பத்திக் கொள்கை 2025’ வெளியீடு

உயர்தர மற்றும் நிலைத்தன்மை கொண்ட பொம்மைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னணி மையமாக மேம்படுத்தும் வகையிலும், விளாச்சேரி, தஞ்சாவூர், அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கைவினைக் கலைஞர்களின் பாரம்பரிய பொம்மைகள் உற்பத்தித்திறனை உயர்த்தும் வகையிலும், அவர்களுக்கு புதிய சந்தை, வடிவமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ’தமிழ்நாடு பொம்மைகள் உற்பத்திக் கொள்கை 2025’னை வெளியிட்டார். 

கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி

தொழில் மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்புடன் அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ‘தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பூங்கா அறக்கட்டளை’ என்ற நிறுவனம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அப்பகுதியிலுள்ள முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து, புதுமையான ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறது. இந்தத் திட்டங்களுக்கு முதல் தவணையாக 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆராய்ச்சியாளர்களிடம் வழங்கப்பட்டது.

உணவு பதப்படுத்துதல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (TNAPEX) இன்று, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒன்பது முக்கிய தேசிய நிறுவனங்கள் மற்றும் மைசூருவில் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது. 

பணி நியமன ஆணைகள் வழங்குதல்

ஐந்து தொழில் நிறுவனங்களின் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  

Also Read: SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!