M K Stalin

டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டிட்வா புயல் நேற்று (நவ.30) இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கபட்டிருந்த சூழலில் தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், டித்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :-

டித்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்!

அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்குப் பருவமழை கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்!

Also Read: திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!