M K Stalin
1,000 தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள்.. புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள், பணியின்போது உயிரிழந்த 2 தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 1,260 மாணவர்களுக்கு அனைத்து விதமான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக 2.82 கோடி ரூபாய்க்கான உதவிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ், 1,000 பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் உதவித் தொகைக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலன் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2007-ஆம் ஆண்டு “தூய்மை பணியாளர் நல வாரியம்” அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திட 14.8.2025 அன்று 6 புதிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருந்தார்கள்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்விற்காக அறிவிக்கப்பட்ட அப்புதிய அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம், குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் புதிய நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதன் விவரங்கள்:
=> பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் காலை, மதியம் மற்றும் இரவு என என சுழற்சி முறையில் பணியாற்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதால், பெருநகர சென்னை மாநகராட்சியில், நிரந்தர மற்றும் சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள், மலேரியா தொழிலாளர்கள், தூய்மைப் பணிக்கான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மயான பூமி தூய்மைப் பணியாளர்கள், தனியார் பொது பங்களிப்பில் செயல்படும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளர்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், மாநகராட்சியில் கள பணிகளில் ஈடுபடும் சாலை பணியாளர்கள், என மொத்தம் 31,373 பணியாளர்களுக்கு நாள்தோறும் வெப்பம் தாங்கும் பைகளில் (Insulated Thermal Carrying Bag) சிற்றுண்டி தாங்கி பெட்டிகள் (Stainless Steel Tiffin Box) மூலம் சுகாதாரமான உணவு வழங்கப்படும்.
=> பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டு கழிவுகளை அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முதற்கட்டமாக கார்கில் நகர் திட்டப்பகுதியில் 510 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் பகுதி-III திட்டப்பகுதியில் 490 குடியிருப்புகளும், என மொத்தம் 1,000 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
=> பணியின்போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களின் எதிர்கால நலன் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியின்போது உயிரிழந்த 2 தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் உதவி தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
=> தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர், சுயமாக தொழில் தொடங்குவதற்கு ரூபாய் 3.50 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்
தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில தொடங்கிடும் வகையில், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 25 பயனாளிகளுக்கு மொத்த திட்ட தொகையான 46 இலட்சம் ரூபாயில் 16 இலட்சம் ரூபாய் மானியத் தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
=> தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம்
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் 1,260 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர திட்டங்களின்படி வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையுடன் கூடுதலாக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் அவர்கள் உயர்கல்வி பயிலும்பொழுது அவர்களுக்கு அனைத்து விதமான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக 2.82 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
=> பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள்
தூய்மைப் பணிபுரிவோர் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளான விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி வாங்க உதவித் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 1,000 பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் உதவித் தொகைக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்விற்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அதனை செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தூய்மைப் பணியாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி, கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி. சேகர், இ. பரந்தாமன், வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுதர்சனம், பிரபாகரராஜா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
CSK அணியின் அடுத்த கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் !
-
”எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் இதுதான் - முதலமைச்சர் கூறியது என்ன ?
-
“அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!