M K Stalin

“கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திராவிட மாடல் 2.0 அரசிலும் தொடரும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை.

குகை கோயில்கள் - கல்வெட்டுகள் - தொல்லியல் சின்னங்கள் என்று நிறைந்து சோழர் - பாண்டியர் - முத்தரையர் - தொண்டைமான்களால் ஆட்சி செய்யப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற புதுக்கோட்டை மண்ணில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த அடைகிறேன்! 

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், மொழிப்போர் பெரும் முக்கியத்துவம் கொண்டது. அந்த மொழிப்போரில் உயிரைத் தந்து தமிழ் காத்த இரண்டு தியாகிகள் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து. இந்த இரண்டு பேரையும் மறக்க முடியுமா! “இந்தியை நிறுத்துங்கள்”-என்று அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களுக்கும், “தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்” என்று பேரறிஞர் அண்ணாவிற்கும் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு உயிர்நீத்தார், கீரனூர் முத்து அவர்கள்!

நம் உயிரோடு கலந்து, நம்மை இயக்கிக் கொண்டிருக்கக்கூடிய நம் தாய்மொழியான தமிழ்மொழியைக் காக்க நஞ்சுண்டு இறந்தார், விராலிமலை சண்முகம் அவர்கள்! அந்த தியாகச் சீலர்களின் நினைவைப் போற்றும் விதமாக, 1967-இல் கீரனூரில் “கீரனூர் முத்து சீரணி அரங்கமும்”,  திருச்சி பாலக்கரையில் கட்டப்பட்ட பாலத்திற்கு, 2006-இல், கீழப்பழுவூர் சின்னச்சாமி – விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக, “சின்னச்சாமி - சண்முகம் பாலம்”-என்று பெயர் வைத்தவர், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! 

புதுக்கோட்டைக்கு எத்தனையோ சிறப்புகள் – பெருமைகள் இருந்தாலும், அதில் முக்கியமானது என்னவென்று கேட்டீர்கள் என்றால், இந்த புதுக்கோட்டை மாவட்டம், தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாவட்டம்! 

1974-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாள், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை என்ற புதிய மாவட்டத்தை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். இந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் அரசு விழாவை புதுமையாக நடத்திக் காட்டி இருக்கிறார் நம்முடைய மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்
திரு. ரகுபதி அவர்கள். சட்ட அமைச்சராக இருந்த அவர், இப்போது கனிமவளத்துறை அமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மக்கள் நலனுக்காக ஏராளமான முன்னோடி திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர வைத்து, பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு மீது பலரும் அரசியல் இலாபங்களுக்காக – வயிற்று பிழைப்பிற்காக நாள்தோறும் அவதூறுகளை பரப்புகிறார்கள்.

அப்படி பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு முதல் ஆளாக ஊடகங்களுக்கு முன்பு வந்து, எதிர்வாதங்களை வைக்கக் கூடியவராக – பதிலடி கொடுப்பவராக இருப்பவர்தான், நம்முடைய ரகுபதி அவர்கள்! தன்னுடைய ஆழமான – ஆணித்தரமான வாதங்களின் மூலமாக ஆட்சியைக் காக்கும் அரணாக விளங்குகிறார்! அவருக்கு உங்களுடைய அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகள்! 

அதேபோல இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் மெய்யநாதன் அவர்கள்.  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை மூலமாக மிகச் சிறப்பான பணியினை செய்து வருகிறார். திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே சமூக நீதிதான்.

அதனை காக்கும் துறையை அவர் கையில் வைத்துள்ளார். சாதி அடையாளமாக சூட்டப்பட்ட விடுதிகளை சமூக நீதி விடுதியாக பெயர் மாற்றியது. அதுமட்டுமல்ல, விடுதிகளை நவீனமயமாக்குகிறார் திரு. மெய்யநாதன் அவர்கள். அனைவருக்குமான அரசு என்பதை மெய்ப்பித்து வருகிறார் திரு.மெய்யநாதன் அவர்கள்.  

இந்த அரசு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் திரு. ரகுபதி அவர்களுக்கும் – அமைச்சர் திரு.மெய்யநாதன் அவர்களுக்கும் அவருக்கு துணை நிற்கக்கூடிய, சிறப்பாக செயல்படக்கூடிய மாவட்ட ஆட்சியர் அருணா அவர்களுக்கும், மாவட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! 

இந்த நிகழ்ச்சியின் மூலமாக 223 கோடி ரூபாய் மதிப்பிலான 577 முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்து, 201 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 103 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 43 ஆயிரத்து 993 பேருக்கு 341 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக 766 கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களை மக்களிடம் வழங்கக்கூடிய விழா இந்த விழா!

 இன்றைக்கு திருமயத்தில் உருவாகியிருக்கும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான, அரசு மருத்துவமனையையும், அரிமளம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் சமத்துவபுரத்தையும் திறந்து வைத்திருக்கிறோம்.

இதற்கான ஒப்புதலை என்னிடம் வாங்கும்போது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய பணிகளின் பட்டியலை வாங்கிப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது! அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த பணிகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், 

  • திருமயத்திலும் – ஆலங்குடியிலும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. 

  • புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. 

  • புதுக்கோட்டை ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. 

  • திருமயம் தொகுதியிலும் – ஆலங்குடி தொகுதியிலும் - நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

  • புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கீரனூர் வரை, 40 கோடி ருபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 

  • 344 அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

  • 33 திருக்கோயில் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது

இப்படி ஏராளமான திட்டங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தனை திட்டங்கள் செய்திருக்கிறோம் என்று திருப்தி அடைபவன் இல்லை நான்… இன்னும் இன்னும் செய்ய வேண்டும் என்று ஊக்கம் கொண்டு உழைப்பவன்… இங்கு வந்து உங்களை சந்தித்துவிட்டு, புது அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பேனா? அப்படியே வெளியிடாமல் சென்றால் நீங்கள் விட்டுவிடுவீர்களா? நம்முடைய அமைச்சர்கள் என்னை விடுவார்களா? விடமாட்டார்கள். இந்த நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன். 

முதலாவது அறிவிப்பு - அறந்தாங்கி வட்டத்தில் இருக்கும் வீரகொண்டான் ஏரி, செங்கலநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் 15 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். 

இரண்டாவது அறிவிப்பு – கீரமங்கலம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்ப்பதன கிடங்கு 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். 

மூன்றாவது அறிவிப்பு - ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும், விளானூர் ஊராட்சி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும். 

நான்காவது அறிவிப்பு - புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும். 

அடுத்த இரண்டு அறிவிப்பும் கொஞ்சம் ஸ்பெஷல் அறிவிப்பு!

ஐந்தாவது அறிவிப்பு -  கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கந்தர்வகோட்டை ஊராட்சி – பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

ஆறாவது அறிவிப்பு - பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதி பேரூராட்சி - நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். 

இந்த அறிவிப்புகள் எல்லாம் மிக விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.

அடுத்து, நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில், அதிலும் குறிப்பாக இந்த மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளின் எண்ணிக்கையை  மட்டும் அதுவும் சுருக்கமாக நான் சொல்ல விரும்புகிறேன்.  உங்களுக்கே அது மலைப்பாக இருக்கும்.

  • 3 இலட்சத்து 18 ஆயிரத்து 83 சகோதரிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 

  • 14 கோடியே 16 இலட்சம் கட்டணமில்லா விடியல் பயணங்களை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள்! 

  • 14 ஆயிரத்து 446 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த சுய உதவிக் குழுக்களுக்காக இதுவரை 3 ஆயிரத்து 894 கோடி ரூபாய் கடனுதவி தரப்பட்டிருக்கிறது. 

  • ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலமாக 5 ஆயிரத்து
    874 உயிர்களையும், ஏன்! குடும்பங்களையும் காப்பாற்றியிருக்கிறோம்!

  • ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலமாக
    4 இலட்சத்து 79 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். 

  • 88 ஆயிரம் பெண்கள் மகப்பேறு நிதியுதவி பெற்றிருக்கிறார்கள்.

  • ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக 19 ஆயிரத்து 179 பேர் பயனடைந்திருக்கிறார்கள். 

  • 66,000 மாணவர்களுக்கு தினமும் காலையில் சூடான – சுவையான – சத்தான  காலை உணவை வழங்கப்படுகிறது. 

  • 33 ஆயிரத்து 680 மாணவிகளுக்கு மாதந்தோறும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலமாக ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

  • 64 ஆயிரத்து 25 மாணவ - மாணவியருக்கு சைக்கிள் வழங்கியிருக்கிறோம். 

  • 3 ஆயிரத்து 136 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிக் கொண்டு வருகிறோம்.

  • ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின்கீழ், 44 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

  • அதுமட்டுமல்ல, மிகவும் முக்கியமாக இதுவரைக்கும்,
    37 ஆயிரத்து 615 பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். அதில் இன்றைக்கு மட்டும் 12 ஆயிரத்து 618 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கினோம்.

  • ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக இந்த மாவட்டத்தில் மட்டும் இதுவரைக்கும் 1 இலட்சத்து 14 ஆயிரம் மனுக்களில், பெரும்பாலான மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகதான் வந்திருக்கிறது. நான் உறுதியோடு சொல்கிறேன்… தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் விரைவில் கிடைக்கப் போகிறது! 

மகளிருக்கு உரிமைத்தொகை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னபோது, அப்படியெல்லாம் தர முடியாது என்று, யார் சொன்னார்? தமிழ்நாட்டின் நிர்வாகத்தை பாழ்படுத்திய அதிமுக-வும் சொன்னார்கள்.

ஆனால், நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரி செய்ததுமே உரிமைத்தொகையை வழங்க ஆரம்பித்தோம்! அப்போதும், என்ன சொன்னார்கள் என்றால், இந்த திட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்று அவர்கள் வதந்தியை கிளப்பினார்கள்.

ஆனால், அதற்கு மாறாக இதுவரைக்கும் 27 மாதங்களில் 1 கோடியே 14 இலட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 27 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம். 1000 ரூபாய் எதற்கென்று சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன்…

எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்குகின்ற மாதாந்திர சீர் என்று என்னுடைய சகோதரிகள் சொல்கிறார்களே! இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! இந்தத் தொகையை வழங்க ஆரம்பிக்கும்போது என்னிடம் கேட்டார்கள்…..  “யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய்?" கிடைக்கும் என்று சட்டமன்றத்தில் கேட்டார்கள்!

நான் சொன்னேன், “யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்” என்று நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் - தகுதியுள்ள எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்.   நான் உறுதியோடு சொல்கிறேன்… தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும்போது, நம்முடைய திராவிட மாடல் 2.0 அரசிலும் நிச்சயம் தொடரும்! 

சமூக முன்னேற்றத்திற்காக – விளிம்புநிலை மனிதர்களுக்கு உதவுவதற்காக – எளிய மனிதர்களை அரவணைப்பதற்காக – பின்தங்கியுள்ள மக்களை கைதூக்கி விடுவதற்காக – நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். 

  • அந்த உன்னதமான திட்டங்களில் புதிதாக செயல்படுத்தியிருக்கும் திட்டம்தான், தாயுமானவர் திட்டம்! 70 வயதுக்கு அதிகமானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரத் தேவையில்லை. அவர்களுக்கான பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்க தொடங்கிய இந்த திட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று திருத்தி, 21 இலட்சம் குடும்பங்களுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்களை தருகிறோம்.

  • சில மாதம் முன்பு, காலை உணவுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினோம். அந்த விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார்.

  • அடுத்து, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியின் மூலமாக  புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் விரிவாக்கத் திட்டத்தில் தெலங்கானா முதல்வர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

  • சில வாரம் முன்பு தென்காசி சென்றிருந்தபோது, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளிக்கு வீட்டை வழங்கி, மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்டிக்கொண்டு வருகிறோம் என்று சொன்னேன்.  

  • அடுத்து, அன்புக்கரங்கள் திட்டம்! பெற்றோர்கள் இல்லாத  குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை மாதம் 2 ஆயிரம் ரூபாய்  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

  • அதன் மற்றொரு தொடர்ச்சியாகதான் அடுத்த நிகழ்ச்சி அன்புச்சோலை திட்டத்தை இன்று நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 

  • மார்ச் மாதம் பட்ஜெட்டில் சொன்னோம், வேலைக்கு செல்லும் பலரது வீடுகளில் முதியோர்கள் தனிமையில் இருக்கிறார்கள். அவர்களின் தனிமையை போக்கி, நட்பு வட்டத்தை உருவாக்கி, மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருப்பதை இந்த மையங்கள் உறுதி செய்யும் என்று சொன்னோம்! அதற்காக 25 மையங்களை தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக இன்று தொடங்குகிறோம். அவர்களுக்கு சிற்றுண்டி, மதிய உணவு, பிசியோதெரபி பயிற்சி, தொலைக்காட்சி, இண்டோர் கேம்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்குகள், கைவினைப் பயிற்சி என்று தேவையான அனைத்தும் அன்புச்சோலை மையத்தில் கிடைப்பது போல் இந்த திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம். இதனால், வீட்டில் பெரியவர்களை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்பவர்களுக்கும் டென்ஷன் இல்லை, முதியோர்களும் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக இருப்பார்கள். 

இப்படி, எந்த ஊருக்குச் சென்றாலும் ஒரு புது திட்டம் தொடக்கம், திட்டங்களின் விரிவாக்கம் என்று நாம் செயல்படுவதால்தான் எதிரிகள் கிலி பிடித்து இருக்கிறார்கள். அதுவும் வாக்குவங்கி, தேர்தல் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல், எல்லா தரப்பினருக்குமான திட்டங்களாக நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இப்படி நம்முடைய திராவிட மாடல் செயல்படுத்தும் திட்டங்கள், பிற மாநிலங்களுக்கும் மாடலாக அமைந்திருக்கிறது. தெலங்கானா, பஞ்சாப்பில் நம்முடைய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தியா தாண்டி கனடாவிலும் இப்போது இது செயல்படுத்தப்படுகிறது. இதுதான் நம்முடைய மாடலுக்கு கிடைத்திருக்கும் வெற்றி!  

அது மட்டுமா, இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குகிறோம் என்று குற்றச்சாட்டை வைத்தது யார்? பா.ஜ.க. அந்த பா.ஜ.க.வே அவர்கள் ஆளும் மகாராஷ்டிரா மத்திய பிரதேசத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். 

இதேபோல் நம்முடைய விடியல் பயணம் திட்டமும், எல்லா மாநிலங்களிலும் வரிசையாக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்று வருகிறது. அப்படி சொன்ன கட்சிகள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இப்போது உலக நாடுகளே பின்பற்றுகிறது. 

நியூயார்க் மாநகர மேயர் தேர்தலில் கட்டணமில்லாப் பேருந்து வாக்குறுதியை கொடுத்து ஸோர்தான் மாம்தானி அங்கு வெற்றிபெற்றிருக்கிறார். அவர் ஏழை எளிய மக்கள் பக்கம் நின்று இந்த வாக்குறுதியை தந்ததும், பெரும் பணக்காரர்கள் பக்கம் நின்ற அதிபர் டிரம்ப், நியூயார்க் மாநகரத்திற்கான நிதியை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டிப் பார்த்தார். ஆனால், இந்த மிரட்டல், அதட்டல்களை மீறி, மாம்தானிதான் வெற்றி பெற்றார். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அதற்காக சொல்கிறேன்... உங்களுக்கே புரிந்திருக்கும். 

’எல்லோருக்கும் எல்லாம்’-என்று இயங்குவதுதான் திராவிட மாடல்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல! அதனால்தான் கவனத்துடன், தொலைநோக்கு சிந்தனையுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்! ஆனால், சிலர் இதுபோன்ற திட்டங்களை மதிக்காமல், அரசியல் உள்நோக்கத்துடன் ஆட்சியை குறை சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

எதிர்க்கட்சி என்றால், எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லை. ஆனால், இன்றைய எதிர்க்கட்சிகள் மக்கள் நலத் திட்டங்களையும் – பயன்பெறும் மக்களையும் கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். என்ன செய்வது! அவர்களின் குணம், அப்படி! அவர்களுக்கு தெரிந்த பண்பாடு அவ்வளவுதான்! என்னைப் பொறுத்தவரைக்கும் போற்றுவார் போற்றட்டும்!

புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்! நம்முடைய பணி, மக்கள் பணி! நாம் அதை பார்ப்போம் என்று செயல்பட்டு வருகிறேன். எதிர்க்கட்சிகள் என்ன பொய் சொன்னாலும், பொறாமையில் மக்கள் நலத்திட்டங்கள் தேவையில்லை, ஆயிரம் ரூபாய் வேண்டாம் என்று சொல்லி கொச்சைப்படுத்தினாலும், மக்கள் அவர்களை மதிப்பதில்லை. தொலைக்காட்சிகளிலும் - சமூக வலைதளங்களிலும் பேட்டியளிக்கும் மக்கள் பலரும் நம்முடைய ஒவ்வொரு திட்டத்தையும் ஆதரித்து பேசுகிறார்கள். 

ஏன்? எனக்கு முன்பு இங்கு ஒரு தம்பி பேசினாரே… ஒரே குடும்பத்தில் எத்தனை திட்டங்களில் பலன் பெறுகிறோம். தெளிவாகவும், ஆதாரத்தோடும் சொன்னாரே… இதுதான் எதிர்க்கட்சிகளின் அந்த பொய்களுக்கான  அந்த தம்பியின் பதிலடி!

நம்முடைய திட்டங்கள் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லி கேட்கும்போது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது! மக்களாகிய நீங்கள்தான் திராவிட மாடலின் தூதர்களாக செயல்படுகிறீர்கள்! திராவிட முன்னேற்றக் கழக அரசும் - மக்களான நீங்களும் – தமிழ்நாட்டின் முன்னேற்றம் என்ற ஒரே சிந்தனையில், ஒரே ‘வேவ்-லென்த்’-இல் இருக்கிறோம்! அதனால்தான் திராவிட மாடல் 2.0 கன்பார்ம் ஆகிவிட்டது என்று நான் எங்கு சென்றாலும் நம்பிக்கையாக சொல்கிறேன்! தேர்தல் நெருங்கி வந்துவிட்டது! இப்போதே தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டது! 

இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் முக்கியமான வேண்டுகோள் என்ன என்றால், பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமக்குதான் போடப்போகிறீர்கள்… இந்த ஆட்சி தான் வரவேண்டும் என்று போடப்போகிறீர்கள்… அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதுதான் முக்கியம். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உங்களின் வாக்குகள், நீக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை – தேர்தலை முறையாக, ஒழுங்காக - நேர்மையாக - உண்மையாக நடத்துவதுதான். அதைக்கூட அவர்கள் பல மாநிலங்களில் செய்யவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் செய்திகளை படிக்கும்போது நமக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது! நீங்கள் எல்லோரும் செய்திகளில், சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். அரியானா மாநிலத்தில் அநியாயமாக நடந்திருக்கிறது! 

ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே ஒரு வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருடைய வீட்டு முகவரியில் 500 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

முன்னாள் எம்.பி. ஒருவரே, இரண்டு மாநிலங்களில் வாக்களித்து வெளிப்படையாக போட்டோ போட்டிருக்கிறார். அந்த மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது வாக்களித்த 35 இலட்சம் பேரால், சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. ஆனால், புதிதாக 25 இலட்சம் வாக்காளர்கள் அந்த மாநிலத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது எல்லாவற்றையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் – இளம் தலைவராக விளங்கிக்கொண்டிருக்கும் என்னுடைய ஆருயிர் சகோதரர் ராகுல்காந்தி அவர்கள் இதைத் தெளிவாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனால், தேர்தல் ஆணையம் பதில் சொல்லாமல் பதுங்குகிறார்கள்! இது ஏதோ தனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினை போன்று, அமைதியாக இருக்கிறார்கள். 

இந்த சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு வாக்காளரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று  பாருங்கள். உங்களின் வாக்குச் சாவடியில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா என்பதையும்  கண்காணிக்குமாறு உங்களை நான் விரும்பி கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பது நம்முடைய ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை! ஜனநாயக உரிமை! அந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது! தேர்தல் ஆணையமே அதை செய்ய நினைத்தாலும் மக்களாகிய நீங்கள்தான் தடுக்க வேண்டும். 

உங்கள் உரிமைகளை நிலைநாட்ட - உங்கள் நலனைக் காக்க இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த எல்லா வகையிலும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செயல்படுவேன் என்று உறுதி அளித்து விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

Also Read: “டெல்லி பிக்-பாஸூக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டு வருகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!