M K Stalin

காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.10.2025) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவலர் வீரவணக்க நாள் விழாவில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

​அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையில் பணியிலிருந்த போது மரணம் அடைந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தை சேர்ந்த 110 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கும், 65 நபர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் / வரவேற்பாளர் (Data Entry Assistant / Receptionist) பணியிடத்திற்கும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை, வழங்குவதின் அடையாளமாக 20 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

​மேலும், பணியின் போது வீரமரணமடைந்த திருப்பூர் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் எம்.சண்முகவேல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை காவலர் எஸ்.ஜெஸ்மின் மில்டன் ராஜ் ஆகியோரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சம்பள தொகுப்பு (Salary Package) திட்டத்தில் தனிநபர் காப்பீட்டு தொகையாக தலா 1 கோடி ரூபாய்க்கான காசோலைகள்;

பணியின் போது வீரமரணம் அடைந்த விருதுநகர் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பி.விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை காவலர் எஸ்.ஜெஸ்மின் மில்டன் ராஜ் ஆகியோரது குடும்பத்தினருக்கு கருணைத் தொகையாக (Ex-gratia) தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

மேலும், காவல்துறையில் பணிபுரிந்து விபத்துகளில் மரணம் அடைந்த 3 காவலர்கள் என மொத்தம் 6 காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்பு (Salary Package) திட்டத்தில் State Bank of India மற்றும் Union Bank of India ஆகிய வங்கிகளின் மூலம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் கருணைத் தொகை, என மொத்தம் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் ஜி.வெங்கடராமன், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப., காவல்துறை உயர் அலுவலர்கள், வங்கி உயர் அலுவலர்கள், பணியின் போது உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read: தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!