M K Stalin

பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் புகைப்படம்... அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்ட முதலமைச்சர்!

தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். அதன்படி கடந்த ஆக.30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி சென்றார். அங்கே முதல்நாள் தமிழர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர், அதன்பின்னரே முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீடுகள் ஈர்த்தார்.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர், அங்கே Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அங்கேயும் பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.

அதாவது தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்திக்காக ஹிந்துஜா குழுமம் ரூ. 5,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. அதே போல அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்தில் அண்ணல் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இலண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) படிக்கும்பொழுது, தங்கியிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன்.

அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது. இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, இலண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார்.

குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது. இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்! ஜெய் பீம்!

Also Read: தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!