M K Stalin

காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!

உலக நாடே பின்பற்றும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் வரும் ஆக.26-ம் தேதி சென்னையில் நடைபெறும் நிலையில், உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அது குறித்த விவரம் வருமாறு :

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று போற்றுகிறது பழந்தமிழ் இலக்கியம். அதனால்தான், பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது என்பதை முக்கியமான திட்டமாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பே செயல்படுத்தியது திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் நிர்வாகத்தில் இருந்த சென்னை மாநகராட்சி மன்றம். அதன் தலைவராக இருந்த நீதிக்கட்சியின் நாயகர் திரு. பிட்டி. தியாகராயர் அவர்கள் 16-9-1920 அன்று மாணவர்களுக்கு உணவு வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அதனடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் அது, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களின் பசி தீர்க்கும் வகையில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழைக் குடும்பத்து மாணவர்கள் பெரும் பயனடைந்தனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியில் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் முட்டையுடன் கூடிய நிறைவான சத்துணவுத் திட்டமானது. மாணவர்களின் உடல்நலன் மேம்பட்டது. ‘பசியாத நல்வயிறு‘ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டது போல, பள்ளிக் குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக மதிய வேளையில் உணவு வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம்.

தனிமனித வருவாயிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் கண்டுள்ள தமிழ்நாட்டில், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் உள்ளது. அவர்கள் பணிக்குச் செல்லும் நேரத்தில், பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான அளவில் காலை உணவை வழங்க முடியாத நிலையையும் பல இடங்களில் காண முடிந்தது. அதன் காரணமாக, காலை நேரத்தில் பள்ளிக் குழந்தைகள் உடல்சோர்வினால், படிப்பில் ஆர்வம் காட்ட முடியாத நிலையும், உடல்நலன் கெடக்கூடிய ஆபத்தும் இருப்பதை உங்களில் ஒருவனான நான், ஒரு பள்ளிக்கு சென்றபோது நேரில் கண்டதும், இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று உறுதியெடுத்ததன் விளைவுதான், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.

திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு சிறப்புமிக்க திட்டமான இதுகுறித்து சட்டப்பேரவையில் விதி 110-இன்கீழ் 7-5-2022 அன்று உங்களால் முதலமைச்சரான - உங்களில் ஒருவனான நான் அறிவித்தேன். சொன்னதைச் செய்து காட்டுவதுதானே முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வகுத்துத் தந்திருக்கிற அரசியல் இலக்கணம். அதன்படி, திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் பிரிவான நீதிக்கட்சியின் நிர்வாகத்தில், பள்ளியில் மதிய உணவு வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 16-9-1920-இல் இருந்து சரியாக 102 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில், 15-9-2022 அன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, மாணவக் குழந்தைகளுடன் அமர்ந்து, சாப்பிட்டு மகிழ்ந்தேன். பிள்ளைகளின் வயிறு நிறைந்தது. எனக்கு மனது நிறைந்தது.

இந்தத் திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் பசியுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்பதுதான். மதிய உணவு நேரம் வரை அவர்கள் சத்துணவுக்காகக் காத்திருக்காமல், காலையிலேயே சத்தான உணவைச் சாப்பிட்டு, பாடங்களைக் கற்று, மதியம் சத்துணவு சாப்பிடச் செல்ல வேண்டும் என்பதும், இதன் மூலமாக, ஊட்டச்சத்து குறைபாடின்றி அவர்கள் ஆரோக்கியமாக வளரவும், அவர்களின் வருகை தடைபடாமல் இருக்கவும் செய்வதுடன், அந்தக் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைப்பதும் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோளாக அமைந்தது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1545 தொடக்கப் பள்ளிகளில் 1,14,095 குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளும் பயன்களும் எப்படி இருக்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். குழந்தைகளுக்கு என்ன வகையான ஊட்டச்சத்துகள் தேவை, அவர்கள் என்ன விதமான உணவை விரும்புகிறார்கள். சத்தும் ருசியும் கலந்த உணவு வழங்கப்படுகிறதா என்கிற ஆய்வுகளை மேற்கொண்டு, காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடியிருப்பதையும், தாய்மார்கள் தங்கள் பணிச்சுமை குறைந்த மகிழ்ச்சியுடன் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு அனுப்புவதையும் அறிந்துகொண்டேன். அடுத்த கட்டமாக, 2023-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாளன்று மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 433 அரசு தொடக்கப் பள்ளிகளில் 56 ஆயிரத்து 160 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டது.

உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் என்ற முறையில் மேற்கொள்ளும் பயணங்களின் போது, அங்குள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு நேரில் சென்று, உணவின் தரத்தையும் சுவையையும் பரிசோதித்ததுடன், பிள்ளைகளிடமும் அது பற்றி கேட்டறிந்தேன். நல்ல விளைவுகளை நேரில் அறிந்ததால், இதனை அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்திடத் தீர்மானித்தது நமது திராவிட மாடல் அரசு.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் அவர் படித்த தொடக்கப்பள்ளியில் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் உங்களில் ஒருவனான நான், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் தொடங்கி வைத்ததன் விளைவாக, 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 15 இலட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறத் தொடங்கினர்.

இந்தத் திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவடையச் செய்தால், அங்கு பயிலும் எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தினை கவனத்துடன் பரிசீலித்தது மக்களின் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுத் தொடங்கி வைத்த விழாவின் மூலமாக ஊரகப் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். தற்போது மொத்தமாக, 34 ஆயிரத்து 987 தொடக்கப் பள்ளிகளில், 17 இலட்சத்து 53 ஆயிரம் மாணாக்கர்கள் சத்தான காலை உணவுடன், தெம்பாகக் கல்வி கற்று வருகிறார்கள்.

ஒரு திட்டத்தை அறிவித்தால் அதனை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்பதும், செயல்படுத்தப்படும் திட்டத்தின் விளைவுகளைக் கவனித்து மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டது திராவிட மாடல் அரசு. இத்தகைய அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து மாநிலத் திட்டக்குழு, மதிப்பீடு மற்றும் செயலாக்கத்துறை உள்ளிட்ட பல அமைப்புகளின் ஆய்வின் வாயிலாக கிடைத்துள்ள தரவுகளின் படி, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகை அதிகரித்திருப்பதும், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு அடைந்து, நினைவாற்றலும் மேம்பாடு அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டுச் சூழலால் கிடைக்காமல் போன காலை உணவு, பள்ளிக்கு வந்ததும் சூடாகவும் சுவையாகவும் கிடைப்பதால் மாணவர்கள் அதனை ஆர்வத்துடன் சாப்பிடுவதுடன், சக மாணாக்கர்களுடன் சேர்ந்து சாப்பிடும்போது ஏற்படும் உணர்வும் இணைந்து அவர்களை வகுப்பறையில் உற்சாகமாக இருக்கச் செய்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பள்ளியில் காலை உணவு கிடைத்துவிடும் என்பதால் நிம்மதி அடைவதுடன் தங்களுடைய வேலைப் பளு குறைந்திருப்பதையும், பிள்ளைகளின் கற்றல் திறன் மேம்பட்டிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

நாளைய தலைமுறையின் இன்றைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு தாயுள்ளத்துடன் செயல்படும் திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் இதனைப் பின்பற்றுவதற்கான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதும், இங்கிலாந்து-கனடா-இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காலை உணவுத் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டிருப்பதும், உலகக் கண்ணோட்டத்துடன் தமிழ்நாடு செயல்படுவதை உறுதி செய்கிறது.

உணவை அளித்து உயிரை வளர்க்கும் தமிழர் மரபில், குழந்தைகளுக்குக் காலை உணவு தந்து கல்வியை வளர்க்கும் முதன்மையான பணியை மேற்கொண்டிருக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நம்முடைய அரசு அடுத்தகட்டமாக காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யவிருக்கிறது. வருகிற 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் மண்டலம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தினை என் அன்பிற்குரியவரும் மாண்புமிகு பஞ்சாப் மாநில முதலமைச்சருமான பகவந்த் மான் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இதற்கான அழைப்பிதழை கழக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் திரு. பகவந்த் மான் அவர்களிடம் நேரில் கொடுத்து, எனது சார்பில் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த விரிவாக்கத்தின் மூலம் நகர்ப்புறம் சார்ந்த 2 ஆயிரத்து 429 பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 3 இலட்சத்து 6 ஆயிரம் மாணவ-மாணவியர் பயன் பெறுவர்.

நாள்தோறும் திட்டங்கள், நலிவுற்றோர் ஏற்றம் காணும் செயல்பாடுகள், தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

Also Read: ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!