M K Stalin

“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயக கட்டமைப்பையும் சிதைக்கும் வகையிலான சட்டங்களை இயற்றும் அரசாக ஒன்றிய பா.ஜ.க அரசு அமைந்துள்ளது.

2014, 2019 மக்களவை தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க, வாக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை மேற்கொண்டதற்கு இடையிலும் 2024 மக்களவை தேர்தலில் தனது பெரும்பான்மை பலத்தை இழந்து, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை மீண்டும் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளை கூட்டணியில் தக்க வைக்கவும், பா.ஜ.க கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசை கவிழ்க்கும் நோக்கிலும் நாடாளுமன்றத்தில் 130ஆவது அரசமைப்பு திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா.

இதனைக் கண்டிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பின்வருமாறு,

130-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம்!

30 நாள் கைது = மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பா.ஜ.க. வைத்ததுதான் சட்டம்!

வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு: எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும்!

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன்.

பிரதமருக்குக் கீழான சர்வாதிகாரா நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்து விட்டது.

வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகியுள்ளது. தற்போதைய பா.ஜ.க. அரசு சட்டப்பூர்வமானதா என்பதே ஐயமாக உள்ளது. தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீர்ப்பைக் களவாடியுள்ள பா.ஜ.க., தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த அரசியலமைப்பு (130-வது திருத்தம்) சட்டமுன்வரைவு, 2025-ஐக் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டமுன்வரைவின் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது பொய் வழக்குகளைப் புனைந்து, எந்த விசாரணையும் தீர்ப்பும் இன்றியே, 30 நாட்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவிநீக்கம் செய்யலாம் எனும் சட்டப்பிரிவுகளின்கீழ், அவர்களை ஆட்சியில் இருந்து பா.ஜ.க. அகற்றவே இது வழி செய்கிறது. குற்றம் என்பது தீர விசாரித்த பிறகே முடிவாகும், வெறுமனே வழக்கு பதிவதால் முடிவாகாது என்பதால், அரசியலமைப்புக்குப் புறம்பான இந்தச் சட்டத்திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் இரத்து செய்யப்படும்.

மேலும், பல மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக அமைச்சர்களாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவர்களை, “ஒழுங்காக எங்களுடன் இருங்கள், இல்லையென்றால்…” என்று மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது.

எந்தச் சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளைக் கைது செய்யவும் பதவிநீக்கவுமான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் இந்தச் சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது.

Also Read: ”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!