M K Stalin
“கல்வி உரிமைக்காக பாடுபட்ட அறவழிப் போராளி முனைவர் வசந்திதேவி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இன்று (10.8.2025) நடைபெற்ற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த கல்வியாளருமான மறைந்த முனைவர் வே. வசந்தி தேவி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆற்றிய உரை.
வாழ்நாள் முழுக்க எளிய மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் பாடுபட்டவர்தான் அறவழிப் போராளி மறைந்த முனைவர் வசந்திதேவி அம்மையார் அவர்கள்.
கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படுகிற ஆயுதமாவோ இல்லாமல் – ஏழை - எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும்; கல்விதான் அவர்களுக்கான ஆயுதம், அதுதான் அழிக்கமுடியாத செல்வம் என்கின்ற நோக்கத்தோடு தொடர்ந்து செயலாற்றி, அதற்கான இயக்கங்களை முன்னெடுத்தவர் முனைவர் வசந்திதேவி அவர்கள்.
தான் பணியாற்றிய கல்லூரிகள் தொடங்கி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி வரை, சிறந்த கல்வியாளராக, தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி அவர்கள்! கல்வியில் சீர்திருத்தத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியவர்.
பொதுவுடைமைச் சிந்தனையும் மனித உரிமைக் கொள்கையும் கொண்ட அவர், மாநில மகளிர் ஆணையப் பொறுப்பில் இருந்தபோது ஆற்றிய பணிகள் சிறப்பானவை. தன்னுடைய பணிக்காலத்திற்குப் பிறகும் முற்போக்கு இயக்கங்களோடு சேர்ந்து நின்று, கல்வி உரிமைக்காகவும் மனித உரிமைக்காகவும் ஜனநாயகக் களத்தில் அயராமல் பாடுபட்ட அம்மையார் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நின்றவர். நம் திராவிட மாடல் அரசின் பள்ளிக்கல்வி முன்னெடுப்புகளையும் மனமார பாராட்டியவர்.
காலந்தோறும் கல்வியின் தரத்தை மேம்படுத்தி, கடைக்கோடி மனிதர்கள் வரை அது சென்றடைய வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தியவர். கல்வியாளர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை செயல்வடிவமாக்கி, மாணவர்களை உயர்த்துவதில் உறுதியான நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகின்ற திராவிட மாடல் அரசு, எளியோரும் ஏற்றம் பெறும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறோம்.
முனைவர் வசந்திதேவி அம்மையார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்த நேரத்தில், அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டுகின்ற திராவிட மாடல் அரசினுடைய செயல்பாடுகள் அனைத்தும் அம்மையாருக்கு செலுத்துகின்ற ஆக்கப்பூர்வமான அஞ்சலி என்று கூறி, முனைவர் வசந்திதேவி அவர்களுக்கு என்னுடைய புகழஞ்சலியை செலுத்துகிறேன்! நன்றி! வணக்கம்!
Also Read
-
"நமக்குள் இருக்கும் நட்பு தேர்தலுக்கானது அல்ல, கொள்கை நட்பு, இலட்சிய நட்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
B.Ed மாணாக்கர் சேர்க்கை ஆணை... எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? - அமைச்சர் கோவி.செழியன் கூறியது என்ன?
-
தாயுமானவர் திட்டம் : வயது முதிர்ந்தவர் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
நேரில் வந்த உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட பெண் வாக்காளர்- உச்சநீதிமன்றத்தில் அம்பலப்பட்ட தேர்தல் ஆணையம்!
-
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மடிக்கணினி... Dell, Acer ஆகிய நிறுவனங்கள் தேர்வு - முழு விவரம் உள்ளே !