M K Stalin
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.7.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நீர்வளத்துறையில் உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 169 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், நீர்வளத்துறை சார்பில் நபார்டு ஆலோசனை சேவைகள் (NABARD Consultancy Services) மற்றும் வசார் லேப்ஸ் நிறுவனம் (VASSAR Labs) மூலம் வடிவமைக்கப்பட்ட
30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பின் இணையதள சேவையையும், 3 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்நிலைகளின் தகவல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் இணையதள சேவையையும் தொடங்கி வைத்தார்.
=> உதவிப் பொறியாளர் (சிவில்) பணி நியமன ஆணைகள் வழங்குதல் :
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் மூலம் உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்டு, நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 169 உதவி பொறியாளர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை 374 நபர்களுக்கு உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
=> நீர்வளத்துறையின் இணைய தளங்கள் தொடங்கி வைத்தல் :
இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலத்திலுள்ள அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் நீர்வரத்து முன்னறிவிப்பு மாதிரியை தானியங்கி முறையில் உருவாக்கியது, அனைத்து தரப்பு நீர் தேவைகளை அறிதல், மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் ஒருங்கிணைந்த நீர்த்தேக்க செயல்பாடு ஏற்படுத்தியமை மற்றும் குறிப்பிட்ட இடம் சார்ந்த நீர் சம்மந்தமான விவரங்களை வழங்க புவி-நுண்ணறிவு கைபேசி பயன்படுத்துதல் ஆகிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
=> தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TNWRIMS) :
தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பிற்கான (Tamil Nadu Water Resources Information and Management System) இணையதளத்தை உருவாக்கிட தமிழ்நாடு அரசு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதன் அடிப்படையில் TNWRIMS இணையதளத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நீர் பயன்படுத்தும் பங்குதாரர்களிடமிருந்து தற்போதுள்ள எல்லா தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவொரு நீர் பயன்படுத்தும் துறைகளிடமிருந்தும், எதிர்கால முன்மொழிவை உருவாக்குவதற்கான நீர் தொடர்பான தரவுத்தளத்திற்கான ஒற்றை ஆதாரமாக நம்பகத் தன்மையுடன் இந்த இணையதள அமைப்பு செயல்படும்.
தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பானது நீர்வளத்துடன் தொடர்புடைய அனைத்து தரவுகளையும் ஒரே கட்டமைப்பில் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, நீர் விநியோகம், தேவைகள், செயல்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கூறுகளை உள்ளடக்கியவாறு, நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் ஆதாரங்களான நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், சிறுபாசன ஏரிகள் போன்றவைகளின் நேரடி கண்காணிப்பு மற்றும் முடிவெடுத்தல் ஆதரவைக் கையாளும் திறன் கொண்டதாகும்.
TNWRIMS-ன் செயல்திட்ட பணிகள் 26.10.2022 அன்று தொடங்கப்பட்டது. மத்திய நீர் வள ஆணையம் (CWC), இந்திய வானிலை மையம் (IMD), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), மாநில மற்றும் உலகளாவிய தரவுகள் (State and Global Data) ஆகியவற்றிலிருந்து தரவுகளை ஒருங்கிணைத்து, நிகழ்நேரத் தகவலைக் கொண்டு, இந்த ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு (Real time Dashboards modules) செயல்படும்.
நிகழ்நேரத் தகவலை அளித்திடும் இந்த அமைப்பில் நீர் வழங்கல், தேவை, தரம், பயனர்கள் போன்றவை, நீர் தணிக்கை, கிராம தண்ணீர் வரவு செலவு, வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவரம், நீர்வரத்து முன்னறிவிப்பு, நீர்த்தேக்க செயல்பாடு மேம்படுத்தல், நீர் பற்றாக்குறை தகவல், நிலத்தடி நீர் தகவல், திட்ட கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, ஆற்றுப்படுகைகளுக்கிடையே நீர் பரிமாற்றம், நீர் பாதுகாப்பு திட்டம் போன்ற 11 தொகுதிகள் உள்ளன. இந்த இணையதள பதிவு மற்றும் தரவுகள் இடம் பெயர்வுக்கான பணிகள், தமிழக அரசு நீர்வளத்துறை இணையதளத்தில் (http://tnwrims.tn.gov.in) இணைக்கப்பட்டுள்ளது.
=> தமிழ்நாடு செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்நிலைகளின் தகவல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (Tamil Nadu Satellite based Water Bodies Information Monitoring and Protection System) :
செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புதிய தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க இணையதளம் உருவாக்குவதற்காக 3 கோடியே 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நீண்டகால, எளிதாகக் கிடைக்கும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, வருவாய்த் துறை ஆவணங்களில் வரையறுக்கப்பட்ட நீர்நிலைப்பகுதியின் அளவீடு மூலம் நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பு / அத்துமீறல் போன்றவை செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைப் பயன்படுத்தி கண்டறிந்திடலாம்.
இத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, பரப்பளவில் ஏற்படும் மாற்றங்களால் நீர்நிலைகளின் கொள்ளளவு இழப்பை கண்டறியலாம், நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நீர்நிலைகளில் உள்ள புல எண்களில் ஏற்படும் மாற்றம் குறித்த விழிப்பூட்டல் தகவல்களை அனுப்பி, ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை செயல்படுத்தும் முன்னோடி திட்டமாக, அம்பத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை கண்டறியும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரின் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உணரி (Sensor) நிறுவப்பட்டு நீரின் தரம், குறிப்பிட்ட அளவுகள் மற்றும் மதிப்புகள் இணையதளத்தில் (http://tnswip.tn.gov.in) நிகழ்நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிவு கணக்கீட்டுக்காக பேத்மெட்ரிக் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் தரவுகள் பெறப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., நீர்வளத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), ச.ரமேஷ், நீராய்வு நிறுவனம் நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர் பு. சுந்தரராஜன், நபார்டு தலைமைப் பொது மேலாளர் ர.ஆனந்த், TNWRIMS & TNSWIP திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சுப்புராஜ், வசார் லேப்ஸ் முதன்மை செயல் அலுவலர் நிகிலேஷ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!