M K Stalin

ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.

=> 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தல் :

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 7.5.2022 அன்று சட்டப்பேரவை விதி எண் 110 கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதாரத் தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல, நகர்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி முதல்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 6.6.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.

அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. மேலும், அடையாறு, சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.

ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி பணியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நலவாழ்வு மையத்திற்கு வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் சுமார் 20,000 முதல் 25,000 வரை உள்ள மக்களுக்கு காலை 8.00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை “அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்“ கீழ் வழங்குவார்கள்.

மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் தரமான 12 அத்தியாவசிய சுகாதார சேவைகளான மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்ப்புற மக்கள், குறிப்பாக குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இ-சஞ்சீவினி இணைய முகப்பின் மூலம் நகர்ப்புற நலவாழ்வு மையத்திலேயே தேவைப்படும் நோயாளிகளுக்கு காணொலி மூலம் முதுநிலை மருத்துவரின் ஆலோசனை அல்லது சிகிச்சை குறித்த வழிகாட்டலை பெறும் உன்னத சேவைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு, அனைத்து அத்தியாவசியமான ஆரம்ப சுகாதார சேவைகளை மக்கள் எவ்வித பொருட் செலவின்றி அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதோடு, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்ப சுகாதார தேவைகளுக்காக மக்கள் தேவையின்றி அணுகும் சூழ்நிலையையும் நீக்குகின்றன.

அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தினை திறன்பட்ட மனிதவளம், வலுவான சுகாதார கட்டமைப்பு, மக்களின் சுகாதார உரிமைகளை பேணுதல் போன்ற அடிப்படையில் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்துவதின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்கினை அடைவதோடு, இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரியான மாநிலமாகவும் திகழ்கின்றது.

=> ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தல் :

அரியலூர் மாவட்டம் – பெரியாத்துகுறிச்சி, திண்டுக்கல் மாவட்டம் – மார்க்கம்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் – தேவரியம்பாக்கம், பெரம்பலூர் மாவட்டம் – கீழபுலியூர், தென்காசி மாவட்டம் – கீழக்கலங்கள், தேனி மாவட்டம் – அரண்மனைபுதூர், திண்டுக்கல் மாவட்டம் – ஆடலூர் பன்றிமலை, சிவகங்கை மாவட்டம் – சங்கராபுரம், தூத்துக்குடி மாவட்டம் – சிவஞானபுரம், திருநெல்வேலி மாவட்டம் – உதயத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் – பொன்மார், கடலூர் மாவட்டம் – மஞ்சக்கொல்லை மற்றும் ஒரங்கூர், தருமபுரி மாவட்டம் – அதகபாடி, ஈரோடு மாவட்டம் – பவானிசாகர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கீழ்ப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் – ஆம்பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம் – வடுவாஞ்சேரி, இராணிப்பேட்டை மாவட்டம் – காவனூர், தஞ்சாவூர் மாவட்டம் – திப்பிராஜபுரம், திருப்பூர் மாவட்டம் – பாடியூர், விழுப்புரம் மாவட்டம் – கோணை, செம்மார், விருதுநகர் மாவட்டம் – இலுப்பையூர், செம்பட்டி, நீலகிரி மாவட்டம் – கடநாடு ஆகிய ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள்;

ஈரோடு மாவட்டம் – மூலப்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் – காமராஜர் நகர், மதுரை மாவட்டம் – ஆரப்பாளையம், எஸ். ஆலங்குளம், நாமக்கல் மாவட்டம் – நாமக்கல், திருப்பூர் மாவட்டம் – குளத்துப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் – மணியகாரன்பாளையம், கன்னியாகுமரி மாவட்டம் – பெருவிளை, இராமநாதபுரம் மாவட்டம் – இராமநாதபுரம், சேலம் மாவட்டம் – தாதம்பட்டி, சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, மயிலாடுதுறை மாவட்டம் – மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டம் – குன்னூர், திருவள்ளூர் மாவட்டம் – ஆவடி, புதுக்கோட்டை மாவட்டம் – அசோக் நகர், திருநெல்வேலி மாவட்டம் – மேலபாளையம், திருச்சி மாவட்டம் – பஞ்சப்பூர், அரியமங்கலம், வேலூர் மாவட்டம் – ஓட்டேரி, காட்பாடி, கரூர் மாவட்டம் – வெங்கமேடு ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்;

என மொத்தம் 60 கோடி ரூபாய் செலவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள இப்புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) புறநோயாளிகள், உள்நோயாளிகள் சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை சேவைகள், மாதவிடாய் முதல் பேறடைதல் காலம் வரை, குழந்தை பிறப்புக்கு பிறகு பராமரிப்பு, குழந்தை ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி திட்டமிடல் சேவைகள் தேசிய சுகாதார திட்டங்கள் செயல்படுத்துதல் (NTEP, NLEP, NVBDCP, NPCDCS, NACP) மற்றும் பிற ஆய்வுக்கூட சேவைகள், சுகாதார மேம்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மற்றும் இ-சஞ்சீவினி இணைய முகப்பின் மூலம் தேவைப்படும் நோயாளிகளுக்கு காணொலி மூலம் மருத்துவரின் ஆலோனை அல்லது சிகிச்சை குறித்த வழிகாட்டலை பெறும் சேவைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மௌலானா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு. அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!