M K Stalin

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி திடீர் மறைவு... - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் அமுல் கந்தசாமி. சிறுவயதில் இருந்தே அதிமுகவில் இருந்து வந்த அமுல் கந்தசாமி, கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்திருக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டுதான் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் அண்மைக் காலமாக இவருக்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (ஜூன் 21) சிகிச்சை பலனின்றி இவர் திடீரென காலமானார். இவரது மறைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு அதிமுகவினர், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :

"வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அமுல் கந்தசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இதனிடையே வால்பாறை எம்.எல்.ஏ. மறைந்த நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், ஒரு எம்.எல்.ஏ-வோ, எம்.பி-யோ இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தலோ அந்த தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தேர்தல் விதி.

ஆனால் தமிழ்நாட்டுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 6 மாதத்தில் வால்பாறை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படுமா? அல்லது அடுத்த ஆண்டு சேர்த்து தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Also Read: “திமுகவை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம்...” - அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம்!