M K Stalin
ரூ.408.36 கோடியில் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.5.2025) திருச்சிராப்பள்ளி மாநகர், பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, 128.94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் 408.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடிநீர்த் திட்டங்கள், நகர்ப்புர வளர்ச்சித் திட்டங்கள், மின்வசதி, சாலை வசதி, பாலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வேளாண் வளர்ச்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குகின்ற வகையில் சிப்காட், டைடல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கம், மக்களின் நலனுக்கான புதிய மருத்துவ கட்டமைப்புகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மேலும் பயன்தரும் வகையில் முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. அப்பணிகள் குறித்த விவரங்கள்:
பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டுதல்
திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் 22 ஏக்கர் பரப்பளவில் 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த சந்தை தரைத்தளத்தில் 872 கடைகள், தானியங்கள் விற்பனைக்கென 149 கடைகள், திறந்தவெளியில் 850 தரைக் கடைகள், ஏலம் நடத்துவதற்கென 37,200 சதுர அடியில் மேற்கூரையுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், உணவகக் கட்டடம், 186 ஒப்பனை அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ஒப்பனை அறைகள், 110 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 698 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படவுள்ளன.
பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்தல்
திருச்சிராப்பள்ளியில் காந்தி சந்தை, கீழரண் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிற்கும் சரக்கு வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் 38.10 ஏக்கர் பரப்பளவில் 246 கனரக வாகனங்கள் நிறுத்தும் வகையில் 30.12.2021 அன்று கனரக சரக்கு வாகன முனையத்திற்கு முதலமைச்சர் அவர்களால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 128.94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை முதலமைச்சர் இன்றையதினம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தில் கனரக வாகனங்களை இயக்குபவர்களுக்கென 51 கடைகள் (Booking Office), 28 அலுவலக பணிக்கான கடைகள், 107 கண்காணிப்பு கேமராக்கள், 2 எல்.இ.டி. அறிவிப்புப் பலகைகள், வாகனங்களுக்கான மின்னணு கட்டண வசதி, 102 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 4816 சதுர அடியில் 120 இருக்கைகள் கொண்ட உணவகம், 46 ஒப்பனை அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ஒப்பனை அறைகள் மற்றும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், கனரக வாகன ஓட்டுநர்களுக்கென தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 208 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 29 ஒப்பனை அறைகள் கொண்ட சுகாதார வளாகமும் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் 87 தனியார் ஆம்னி பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்துகள் நிறுத்துமிடமும் அமையவுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தல்
திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும். திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம் அமைத்திட முதலமைச்சர் அவர்களால் 30.12.2021 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 162 .18 கோடியில் பன்நோக்கு வணிக வளாகம் மற்றும் 246.18 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என மொத்தம் 408.36 கோடி மதிப்பில் சிறந்த தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு மிக்க பேருந்து முனையமாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை இன்றையதினம் முதலமைச்சர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தரைத்தளத்தில் 124 பேருந்துகள், நீண்ட நேர நிறுத்த பேருந்துகள் 141, குறைந்த நேர நிறுத்த பேருந்துகள் 80 என 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளூர் நகரப் பேருந்துகளும், என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 78 கடைகள் மற்றும் 4 உணவகங்கள், 6 மின்தூக்கிகள், 6 இயங்கும் படிக்கட்டுகள் (Escalators), 49 எல்.இ.டி. அறிவிப்புப் பலகைகள், 11 நபர்கள் அமர்ந்து செல்லும் பேட்டரி கார்கள், 166 கண்காணிப்பு கேமராக்கள், ஏடிஎம் மையங்கள், பயணச்சீட்டு முன்பதிவு மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணியர் ஓய்வறை, குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, நேரப் காப்பாளர் அறை, 50 மீட்டருக்கு ஒன்று வீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்புகள், ஜெனரேட்டர் வசதி, புத்தகக் கடைகள் மற்றும் இலவச செல்போன் சார்ஜர் மையங்கள், 135 சிறுநீர் கழிப்பிடம், 104 கழிப்பிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் 4, குளியலறை 4 என 284 ஒப்பனை அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ஒப்பனை அறைகள், 100 ஆட்டோக்கள் நிறுத்துமிடம், 1923 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 212 கார்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இப்பேருந்து முனையத்தில், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 208 படுக்கை வசதி மற்றும் அனைத்து வசதிகளுடன் ஒரு தனி தங்கும் விடுதியும், வாகனங்கள் நிறுத்துமிட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதிக்காக பேருந்து முனையத்தின் தரைதளம் முற்றிலும் குளிரூட்டும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. காற்றுமாசினை கட்டுப்படுத்தி குளிர்ந்த சூழலை ஏற்படுத்தும் வகையில், பேருந்து முனையத்தைச் சுற்றிலும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கும் சமூக நீதிக்கும் அரும்பாடுபட்ட முப்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பெயரால் அமைந்திடும் காய்கறி அங்காடி, கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவை மக்களின் முன்னேற்றத்திற்கும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் வித்திடும் பெரும் திட்டங்களாகும்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (9.5.2025) மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை பார்வையிட்டு, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 102 புதிய பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 8 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும் என மொத்தம் 120 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்த 120 புதிய பேருந்துகளில், மகளிரின் சிறப்பான வரவேற்பினை பெற்ற “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக” 38 நகரப் பேருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!