M K Stalin

“பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி!” : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் போது நடைபெற்ற விவாதத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்,

“எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமின்றி பொதுவாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார். பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. துயரங்கள் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சாட்சி.

தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அதிமுக ஆட்சியில் பட்ட வேதனைகளை கண்ணீருடன் புலம்புவார்கள். சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை.

அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரம் தலைவிரித்து ஆடியதை யாரும் மறக்கவில்லை. இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தவர்கள் அதிமுகவினர். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளது. திமுக ஆட்சியில் 15,899 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விரைவாக chargesheet பதிவு செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது.

அதிமுக ஆட்சியில் 55,925 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 91,501 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்ற 17,537 கடைகள் மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் எந்த காரணத்தை கொண்டும், மதவாதம் உள்ளே நுழைய முடியாது! முடியாது! முடியாது! பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில்தான் அதுபோன்ற நடவடிக்கைகள் மேலோங்கி இருக்கின்றன. ஆனால், அதுசார்பில் பிரதமர் அப்பகுதிகளை ஒருமுறைகூட சென்று பார்க்கவில்லை என்பதை மக்கள் அறிவார்கள்.”

Also Read: பொதுமக்களுக்கு பணத்தை மீட்டுத்தரும் திமுக அரசு.. -பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில்!