M K Stalin
"தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரை:-
திக்கெட்டும் புகழ் பரப்பிய நெல்லைச் சீமையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பாண்டியர் ஆட்சியாக இருந்தாலும், சோழர் ஆட்சியாக இருந்தாலும், விஜயநகர ஆட்சியாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும், அதில் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர் நம்முடைய திருநெல்வேலி!
இந்தியாவே அடிமைப்பட்டு நெளிந்துக்கொண்டு இருந்தபோது, ஆங்கிலேயருக்கு எதிராக ‘புரட்சி பூபாளம்’ பாடிய மாவீரன் காத்தப்ப பூலித்தேவன் பிறந்த மண், இந்த நெல்லை மண்! ஓராண்டு, ஈராண்டு அல்ல,
17 ஆண்டுகள் வெள்ளையருக்கு எதிராக படை நடத்திய பாளையக்காரர்தான் பூலித்தேவன்! அந்தப் பூலித்தேவனுக்கு ‘நெல்கட்டும்செவல்’-இல் நினைவு மண்டபம் அமைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
நெல்லையின் அடையாளங்களில் முக்கியமானது, ஏழாம் நூற்றாண்டில், “நின்றசீர் நெடுமாறப் பாண்டியரால்” கட்டப்பட்ட நெல்லையப்பர் கோயில். இப்படி பாரம்பரியம் மிக்க கோயிலை, 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து, திருப்பணிகள் செய்தவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.
அதேபோல, நம்முடைய ஆட்சியில் தான் நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது. அதேபோல, வரும் நவம்பருக்குள் கோயிலின் வெள்ளித்தேர் ஓடும்.
தலைநகர் சென்னை மையப்பகுதியில், அண்ணா மேம்பாலம் அமைத்தது போன்று, நெல்லையில் 1973-ஆம் ஆண்டு ஈரடுக்குப் பாலம் அமைத்து, அதற்கு திருவள்ளுவர் பாலம் என்று பெயர் சூட்டியவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்! செல்லப்பாண்டியன் பெயரிலான பாலமும் கழக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது.
1965-ஆம் ஆண்டு தமிழ்மொழி காக்க மாபெரும் போர் தமிழ்நாட்டில் நடந்தபோது, அதை தூண்டியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் பாளையங்கோட்டை சிறையில்தான் அடைக்கப்பட்டார். அதற்கு அடுத்த தேர்தலில் தி.மு.க ஜார்ஜ் கோட்டையை பிடித்தது என்பது வரலாறு! தமிழரின் வரலாற்றுப் பெருமைக்கும் இந்த நெல்லை மண்தான் அடையாளம்!
தமிழர்களின் தொன்மையை நிலைநாட்டி வரும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மூலமாக நாம் தொடர்ச்சியாக செய்துகொண்டு வருகிறோம். அந்த ஆய்வுகள் பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் நகர நாகரிகமும், எழுத்தறிவும் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்று கீழடி அகழாய்வு முடிவுகள் மூலமாக நிறுவியிருக்கிறோம். இரும்பின் தொன்மையானது 5300 ஆண்டுகள் என்று சில வாரங்களுக்கு முன்பு நாம் உலகத்திற்கு அறிவித்தோம்.
இந்த மாவட்டத்தில் பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் பயிர்தொழிலில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது என்று சிவகளை அகழாய்வு முடிவில் வெளிப்படுத்தி இருக்கிறோம். பொருநை அருங்காட்சியகப் பணிகளும் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள், பணிகள் முடிவு பெற இருக்கிறது. இப்படி தமிழர்களின் வரலாற்றுப் பெருமைக்கு அடையாளமாகவும், வரலாற்றுத் தொன்மையும், வீரமும், மிகுந்த நெல்லை மாவட்டத்தில் இந்த அரசு விழாவை எழுச்சியோடு, இங்கே அமர்ந்தவுடன் நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகள் அவர்கள் சொன்னார்கள், என்னப்பா, இது மாநாடு போல் இருக்கிறது என்று சொன்னார்; ஆகவே, பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் நேரு அவர்களைப் பொறுத்தவரைக்கும், எதையும் பிரமாண்டமாக நடத்தித் தான் அவருக்கு பழக்கம். சிறியதாக எல்லாம் அவருக்கு நடத்த தெரியாது; வராது. அதேபோல், அனைத்து மாவட்டங்களையும் தன்னுடைய சொந்த மாவட்டங்களாக நினைக்கும் பரந்த உள்ளம் கொண்டவர் அமைச்சர் நேரு அவர்கள். திருச்சி மண்டலத்தை வளர்த்தெடுத்த அமைச்சர் நேருவுக்கு முதலில் சேலம் மாவட்டப் பொறுப்பை வழங்கினோம். சேலத்தை சீர் செய்தார்! அடுத்து, நெல்லையை வழங்கினேன். நெல்லையை நேர் செய்துள்ளார் நேரு! ஏராளமான திட்டங்களை உருவாக்கி, அதற்கான நிதிகளையும் பெற்று உரிய காலத்துக்கு முன்னதாக திட்டங்களையும் முடித்துக் காட்டி நெல்லை மாவட்டத்தை சீர்மிகு நெல்லையாக மாற்றிக்கொண்டு வரும் அமைச்சர் நேரு அவர்களுக்கும் இந்த மாவட்ட நிர்வாகத்துக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும்! வாழ்த்துகளும்!
•ஆயிரத்து 304 கோடி ரூபாய் மதிப்பிலான 23 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழா
•309 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா
•பல்வேறு அரசுத் துறைகள் சார்பாக 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று முப்பெரும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமான உபரி நதி நீர் இணைப்புத் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, நம்முடைய மூத்த அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களின் மேற்பார்வையில் தொடங்ககப்பட்டு, இன்று அவர் முன்னிலையில் திறக்கப்பட்டிருக்கிறது. தாமிரபரணி கருமேனியாறு, நம்பியாறு, உபரி நதிநீர் இணைப்புத்திட்டம் மிக மிக முக்கியமான திட்டம். இது மூலமாக, தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை 75 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய் மூலம் வறட்சிப் பகுதிகளான திசையன்விளை மற்றும் சாத்தான்குளத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். இது ஒரு முன்னோடியான நதி நீர் இணைப்புத் திட்டம். இதன் திட்ட மதிப்பு ஆயிரத்து 60 கோடியே 76 இலட்சம் ரூபாய். கடந்த 2 ஆண்டுகளாக நடந்த சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இன்றைக்கு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்று ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது.
•பொருநை அருங்காட்சியகத்தைப் பற்றி முதலிலேயே சொன்னேன்.
•தாழையூத்து முதல் ‘கொங்கந்தான் பாறை விலக்கு’ வரை திருநெல்வேலி மாநகருக்கான மேற்குப் புறவழிச்சாலை,
•அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை,
•தாமிரபரணி நதியை நீராதாரமாக கொண்டு 605 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,
•களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு 423 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
•திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-22 முதல் டிசம்பர் 2024 வரை 5 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 405 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, 115 குடியிருப்பு பகுதிகள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
•திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம்
•முறப்பநாடு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
•மணிமுத்தாறு அணைப்பூங்கா பகுதியில் பல்லுயிர்ப் பூங்கா மற்றும் சாகச சுற்றுலாப் பூங்கா அமைக்கும் பணிகள் பரிசீலனையில் இருக்கிறது.
•திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் புதிய ஐ.டி. பூங்கா
•வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை
•திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகம்
•திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், இதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான உயர்சிறப்பு மருத்துவப் பிரிவு
•அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்
•மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பிரிவு, என்.சி.டி. பிளாக் மற்றும் டயாலிசிஸ் பிரிவு
•பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை
•மானூர் வட்டம் மதவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி
•காணி பழங்குடியின மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையான விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட காரையாறு – சின்னமயிலாறு இடையே, தாமிரபரணி ஆற்றைக் கடக்க, இரும்பு பாலம் என இப்படி பல திட்டப்பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலையில், தினசரி பத்திரிகையில் பல்வேறு கோரிக்கைகளை படித்துப் பார்த்தேன். செய்திகளாக போட்டிருக்கிறார்கள். நல்ல எண்ணத்தோடு சில பேர் போட்டிருக்கிறார்கள். கெட்ட எண்ணத்துடனும் சில பேர் போட்டிருக்கிறார்கள். அது வேறு. எந்த செய்தியாக இருந்தாலும் நான் படிப்பேன். அதில் தவறுவதில்லை. ஆகவே, உங்களை பார்ப்பதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கின்ற நான் புது அறிவிப்புகளை அறிவிக்காமல் இங்கிருந்து போகமுடியுமா? நேரு அவர்கள் என்னை விட்டுவிடுவாரா?
•நெல்லை சீமைக்கான முதல் அறிவிப்பு - திருநெல்வேலி மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில், 2 ஆயிரத்து 291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, மூலக்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் ஆயிரத்து 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
•இரண்டாவது அறிவிப்பு - திருநெல்வேலி மாநகரத்தில், மதுரை குமரி சாலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் இடையே குலவணிகர் புரத்தில் இருக்கும் இரயில்வே கடவுப்பாதைக்கு மாற்றாக, புதிய Y வடிவ இரயில்வே மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
•மூன்றாவது அறிவிப்பு - திருநெல்வேலி மாநகராட்சியில், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்சாலைகளுக்கும், மற்ற தொழில் பூங்காக்களுக்கும் பயன்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்கவும் தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும் வழிவகை ஏற்படும்.
•நான்காவது அறிவிப்பு - பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் சாலை மேலப்பாளையம் பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.
•ஐந்தாவது அறிவிப்பு - அம்பாசமுத்திரம் வட்டம், அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
•ஆறாவது அறிவிப்பு - மீனவப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில், கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
நான் இப்போது அறிவித்த திட்டங்களுக்கு எல்லாம், விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும்!
2023-ஆம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று உங்களுக்கு தெரியும்! அதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த பாதிப்புகளிலிருந்து மீள, ஒன்றிய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள்! ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை. நம்முடைய திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார்.
இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை நாங்கள் செய்தோம். தொடர்ந்து ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுக்காத அவர்களை கண்டித்தோம். அப்போதும் வரவில்லை! நாடாளுமன்றத்திலும் பேசினோம். அப்போதும் வரவில்லை! ஏன், நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும் எவ்வளவு? நாம் கேட்டது, 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய்! வேறு வழியில்லாமல் ஒன்றிய அரசு கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது வெறும் 276 கோடி ரூபாய்! நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காட்டைக் கூட கொடுக்கவில்லை. இப்படிதான் ஒன்றிய அரசு நடந்துகொண்டு இருக்கிறது!
சரி போகட்டும்! இந்த பட்ஜெட்டிலாவது நாங்கள் கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை! தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள்! மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது, ஒன்றிய பா.ஜ.க. அரசு! அவர்களை பொருத்தவரைக்கும், கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும் நிதியையும் கொடுப்பார்கள். அதனால்தான் நாங்கள் கேட்கிறோம். என்ன கேட்கிறோம்?
இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா? இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பா.ஜ.க.-விடம் இருந்து எந்த பதிலும் வராது.
திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வாதான் அதைவிட புகழ்பெற்றதாக இருக்கிறது! நம்முடைய திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் – ஒன்றிய அரசை பொருட்படுத்தாமல், நமக்கு நாமே-என்று தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறோம். அதனால்தான், ஒன்றிய அரசு வெளியிடும் எல்லா புள்ளிவிவரங்களிலும் முன்னணியில் இருக்கிறோம்! அதற்கு காரணம், வாக்களித்த மக்களான உங்களுக்கு, நாங்கள் உண்மையாக இருக்கிறோம்.
ஒன்றிய அரசு மேல் குறை சொல்லிக்கொண்டு எந்த திட்டத்தையும் உருவாக்காமல் விட்டுவிடவில்லை. நாளுக்கு நாள் புது புது திட்டங்கள், வந்துக்கொண்டே இருக்கிறது! நாங்கள் உருவாக்கிக்கொண்டே இருப்போம்! நேற்றுகூட, கங்கைகொண்டான் சிப்காட்டில், 3800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா பவர் சோலார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தேன்.
அதுமட்டுமல்ல, 2574 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விக்ரம் சோலார் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இதில், டாடா பவர் சோலார் நிறுவனத்திற்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்து 4.7.2022-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, 20.10.2022-இல் அடிக்கல் நாட்டி, நேற்று, அதாவது இரண்டே ஆண்டில் திறந்து வைத்திருக்கிறோம்! அந்த தொழிற்சாலை மூலமாக மட்டும் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதில் முக்கியமானது என்ன என்று கேட்டால், 80 சதவிகிதம் பேர் பெண்கள். அந்த நிறுவனத்திற்கு நான் சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண் தொழிலாளர் என்னிடம் சொன்னது, அப்பா, எங்கள் ஊரில் எவ்வளவு பெரிய தொழிற்சாலையைக் கட்டி எங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி என்று அந்த மகள் சொன்னபோது நான் நெகிழ்ந்து போனேன்.
அதேபோன்று, விக்ரம் சோலார் நிறுவனத்தை பொருத்தவரைக்கும், கடந்த ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தாலும், அதற்கு பிறகு அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதைப்பற்றி கவலையும் படவில்லை. ஆனால், நம்முடைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் சூழ்நிலையை விளக்கி, உறுதி கொடுத்து அந்த நிறுவனத்தை அழைத்து வந்திருக்கிறோம்! அதிலும், 2500 பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது. நான் இப்போதே சொல்கிறேன். அங்கும் பெரும்பகுதி மகளிருக்குதான் வேலைவாய்ப்பு. இப்படி சொல்வதால் இந்த மாவட்டத்து ஆண்களுக்கு சிறிது பொறாமை கூட வரும்.
உண்மையை சொன்னால், ஒரு பெண் கல்வி பெற்று பொருளாதார சுதந்திரம் அடைந்தால், அந்த குடும்பத்தின் தலைமுறையே உயர்ந்து நிற்கும். அதனால்தான் என்னுடைய ஆட்சியில் மகளிருக்கான திட்டங்களைப் பார்த்துப் பார்த்து நாங்கள் செய்துக்கொண்டு வருகிறோம்.
இன்றைக்கு விவசாயிகள் பயன்கூடிய வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெகா உணவுப் பூங்காவையும் அதே சிப்காட்டில் திறந்து வைத்திருக்கிறேன். அதன் மூலம் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்! என்னுடைய இந்த ஆட்சியில், நவீன தொழில்களின் மையமாக தமிழ்நாட்டை உயர்த்தவேண்டும். சென்னை, கோவை என்று மட்டுமல்லாமல், தென் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் நிறைய அமைய வேண்டும். இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் இதுதான் என்னுடைய இலக்கு!
அதை முன்னுரிமையாக கொண்டுதான் திட்டங்களை தீட்டி, முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் தந்து புதிய வரலாற்றை நம்முடைய திராவிட மாடல் ஆட்சி படைத்துக்கொண்டு இருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு இங்கேயே நல்ல வேலை கிடைப்பதை உறுதி செய்வோம்!
இந்த தென்பாண்டிச் சீமையை, தொழில் வளர்ச்சி நிறைந்த சீமையாக மாற்றியது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று வரும் காலம் சொல்லும்! அந்த அளவுக்கு, வலுவான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறேன். உலக அளவிலான முதலீட்டாளர்களாக இருந்தாலும், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களாக இருந்தாலும், அவர்களை நான் சந்தித்தால், "எங்கள் தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க வாருங்கள்"-என்றுதான் நான் கேட்பேன்.
நான் மட்டுமல்ல, நம்முடைய அமைச்சர்களும் அதிகாரிகளும் "தென்மாவட்டங்களில் முதலீடு செய்ய பரிசீலனை செய்யுங்கள்"-என்றுதான் வேண்டுகோள் வைத்துக்கொண்டு வருகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் தென்மாவட்டங்களின் வளர்ச்சி ’புலிப் பாய்ச்சலாக’ இருக்கும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பகுதிகளின் முகமே மாறும் அளவுக்கு முன்னேற்றமானது பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அது நிச்சயம் நனவாகும்!
ஒரு பக்கம் இப்படி நாங்கள் உழைத்துக்கொண்டு இருந்தால், மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பதிலுக்குப் பதில் பேசி, நம்முடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.
நம்முடைய நேரத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செலவிடவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். விஷகிருமிகளின் அக்கப்போர் உருட்டல்கள் எல்லாம், காலப்போக்கில் காணாமல் சென்றுவிடும். இப்படி எத்தனையோ பேரை அரை நூற்றாண்டுக்கும் மேலான என்னுடைய அரசியல் வாழ்க்கையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
என்னை பொருத்தவரைக்கும், நான் அழுத்தம் திருத்தமாக சொல்வது. மற்றவர்கள் போன்று, “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை”-என்று இறுமாப்போடு பேசுபவன் இல்லை இந்த ஸ்டாலின். தோழமையில் இருப்பவர்கள் பேசினாலும் சரி. எதிர்முகாமில் இருப்பவர்கள் பேசினாலும் சரி. அன்பாக பேசினாலும் சரி. கோபமாக பேசினாலும் சரி. அவர்கள் பேசுவதில் நியாயம் இருந்தால் – மக்களுக்கு நன்மை இருந்தால் – அதையெல்லாம் செய்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பவன்தான் நான்!
நமக்கு எதிராக பேசிவிட்டார்களே என்று காழ்ப்புணர்வோடு நடந்துக்கொள்பவன் இல்லை நான். எனக்கு தமிழ்நாடும் – தமிழ்நாட்டு மக்களும் வளரவேண்டும்! அவ்வளவுதான்!
நம்முடைய வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், நம்முடைய ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு செய்தியும் எப்படியெல்லாம் திரிக்கிறார்கள்? கருத்துருவாக்கம் செய்கிறார்கள்! அவர்களின் நோக்கம் ஒன்று தான்! திமுக-வை எப்படி அழிக்கலாம்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படி கெடுக்கலாம்? ஏன் என்றால், அவர்களின் நீண்டகால திட்டத்திற்கு தடையாக இருக்கிறது நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான்! அவர்களால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த ஆட்சி இருப்பதால்தான், தமிழ்நாட்டை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். உண்மையான வரலாற்றை தோண்டி எடுக்கிறார்கள். மொழியுணர்வு, கல்வி உரிமை, மாநில உரிமை என்று பேசுகிறார்கள் என்று அவர்களுக்கு நம்மைப் பிடிக்கவில்லை!
நான் உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு பக்கபலமாக தி.மு.க. ஆட்சி எப்போதும் இருக்கும்! தி.மு.க.,வுக்கு பக்கபலமாக தமிழ்நாட்டு மக்களான நீங்களும் எப்போதும் இருப்பீர்கள்! அவர்கள் என்ன சதி திட்டம் தீட்டி, நேரடியாக வந்தாலும் சரி – துரோகிகளை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும் சரி – அதை நாங்கள் நிச்சயம் முறியடிப்போம்!
ஏன் என்றால் – நாங்கள் தந்தை பெரியாரின் வழிவந்தவர்கள்! பேரறிஞர் அண்ணாவின் வழிவந்தவர்கள்! தமிழினத் தலைவர் கலைஞர் வழிவந்தவர்கள்! ”கொண்டிருக்கும் கொள்கையாலும்” – ”செய்திருக்கும் சாதனைகளாலும்” – நாங்கள்தான் தமிழ்நாட்டை என்றென்றைக்கும் ஆள்வோம்! அதற்கு எப்போதும் உங்களுடைய துணை வேண்டும். அதற்கான ஆதரவை தொடர்ந்து நீங்கள் தரவேண்டும் என்று கேட்டு, விடைபெறுகிறேன்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!