M K Stalin
“சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா 2025” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (13.1.2025) சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்திய மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். தமிழ்நாட்டின் கலை பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இவ்வரசால் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை
மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளன.
‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்’ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத்திருவிழாவும், பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளையும் பார்வையாளர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?