M K Stalin

100 ஆண்டுகளை கடந்த ‘வைக்கம் போராட்டம்’... 12-ம் தேதி கேரளா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. காரணம் ?

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு, 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவுகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளது.

மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை வரும் 12-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம்‌ தேதி சென்னையிலிருந்து கேரளா செல்ல உள்ளார். 12-ம்‌ தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற உள்ள வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

மேலும் தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவுக்கு கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார்.

Also Read: போலி கணக்கு காட்டி கார் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் கையாடல்... சேலம் இளம்பெண் கணக்காளர் சிக்கியது எப்படி?