M K Stalin
”திராவிட இயக்க கருத்தியலுடன் பின்னிப் பிணைந்தவர்”- பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா (ECI) பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இ.சி.ஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் நேற்று (செப்.22) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
இவரது மறைவுக்கு பலரும் இரங்கல தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :
“ஈசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான திரு, எஸ்றா சற்குணம் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் தலைவர் கலைஞரோடும் என்னோடும் பங்கேற்றவர். அவரது பிறந்தநாள் அன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட தருணங்கள் இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் மாறாத அன்போடு என்னுடனும் பழகியவர். என்னுடைய பிறந்தநாளில் மட்டுமல்லாது, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போதும் என்னை வாழ்த்தத் தவறாதவர்,
பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள், கிறித்தவ மக்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் - அவர்களின் நலன் பேணும் தளகர்த்தராகவும் செயல்பட்டு வந்ததோடு, அனைத்துச் சமூக மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படவும், அவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்படவும் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மறைவு. கிறித்தவப் பெருமக்களுக்கு மட்டுமின்றி, சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் இசிஐ திருச்சபை நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும், இந்திய சமூகநீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குடும்பத்தினர் – உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
எஸ்றா சற்குணத்தின் உடல், எம்பாமிங் செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் வின்சென்ட் பார்க்கர் சேவை மையத்தில் வரும் 25ஆம் தேதி வரை வைக்கப்படவுள்ளது. பின்னர் வரும் 26 ஆம் தேதி, வானகரத்திலுள்ள ஜீசஸ் கால் சென்டரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதைத்தொடர்ந்து உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!