M K Stalin

அம்பேத்கர் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு !

நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேகர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அரசியல் சாசனத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அனைவரும் சமம் என்ற நோக்கில் பலரும் உறுதி ஏற்பர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2022-ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தது.

தமிழ்நாட்டில் அப்போதில் இருந்தே, அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ 'சமத்துவ நாள்'ஆக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மீண்டும் மரியாதை செய்தார். மேலும் முதலமைச்சர் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

=> 'சமத்துவ நாள்' உறுதி மொழி பின்வருமாறு:

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,

சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,

ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,

ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,

வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,

எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,

நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,

சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க,

நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,

சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும்,

சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.

Also Read: “நான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்” - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு!