M K Stalin
”இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.2024) சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-2023 தொடக்க விழாவில் ஆற்றிய உரை:-
I extend a special welcome to eminent sports persons and coachers for all over India. "எல்லார்க்கும் எல்லாம்" – "அனைத்துத் துறை வளர்ச்சி" - "அனைத்து மாவட்ட வளர்ச்சி" – "அனைத்து சமூக வளர்ச்சி" என்பதை உள்ளடக்கமாக கொண்ட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டு வருகிறோம்.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி நம் இலக்கோ அதேபோல, தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நம்முடைய குறிக்கோள்! இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்களை நான் பாராட்டுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மாமல்லபுரத்தில், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஏ.டி.பி. சேலஞ்சர் டூர், சென்னை ஓப்பன் சேலஞ்சர், ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, ஸ்குவாஷ் உலக கோப்பை 2023, அலைச்சறுக்குப் போட்டி, கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை நம்முடைய தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம். அதே நேரத்தில், விளையாட்டு கட்டமைப்புகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்திக் கொண்டு வருகிறோம்.
இந்தியாவிலேயே முதன் முறையாக, பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள், ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அரங்கம், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் "ஒலிம்பிக் அகாடமி", முதல் கட்டமாக
10 சட்டமன்றத் தொகுதிகளில் "மினி ஸ்டேடியம்", புதிய மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டில் மாவட்ட விளையாட்டு மையங்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் 62 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை வரும் 24-ஆம் தேதியன்று நான் திறந்து வைக்க இருக்கிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் இந்த ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் வெகு விரைவில் துவங்கப்பட இருக்கிறது. மணிப்பூரில் நிலவும் பிரச்சனைகளால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களை சகோதர உணர்வோடு தமிழ்நாட்டிற்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது நமது திராவிட மாடல் அரசு. அவர்களில் சிலர், இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
கேலோ இந்தியா போட்டி தமிழ்நாட்டில் நடப்பது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்த முறை சேர்க்கப்பட்டிருக்கிறது. கேலோ இந்தியா 2023 லோகோ-வில் வான்புகழ் வள்ளுவர் இடம் பெற்றிருக்கிறார். அந்தச் சிலை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், அய்யன் திருவள்ளுவருக்கு இந்திய நாட்டின் தென்முனையில் வானுயர அமைக்கப்பட்டது.
அதேபோல், ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் சின்னமும் அதில் இடம் பெற்றிருப்பது நமக்குக் கூடுதல் பெருமை. விளையாட்டையும், வளர்ச்சியின் இலக்காக கருதி செயல்பட்டு வருகிறோம். சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, எல்லோருடைய நல்வாழ்வுக்கும் விளையாட்டு உதவுகிறது. அன்புப் பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கு உண்டு.
விளையாட்டுத் துறையிலும், தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்களை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை வரவேற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!