M K Stalin

"இதயம் உடைத்து விட்டது, நமது கூட்டு மனசாட்சி எங்கே?" -மணிப்பூர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அங்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி சென்ற சிறுமி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது அங்கு 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.

மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் யாரையும் இதுவரை போலிஸார் கைது செய்யவில்லை. இந்த வீடியோ இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறை சம்பவம் இதயத்தை உடைத்து விட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? வெறுப்பும், வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்குகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கு குணத்தை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.