M K Stalin
”எதிர்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பா.ஜ.கவுக்கு எரிச்சல்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பேட்டி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.7.2023) பெங்களூரில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
மோடி அவர்கள் தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக் கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.
அதைத்தொடர்ந்து, இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூரில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் 24 கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பீகாரிலும், தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பிஜேபி-யை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் இது.
பிஜேபி ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இது. அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவப்பட்டு, ஏற்கனவே வடமாநிலப் பகுதிகளில் அந்தப் பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும், அந்தப் பணியை தொடங்கி இருக்கிறார்கள். ஆகவே, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சுற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை. இன்றைக்கு, உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய பொன்முடி அவர்கள் இல்லத்தில், அமலாக்கத் துறையின் மூலமாக சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், இந்த வழக்கை பொறுத்தவரையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு இந்த வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டு காலத்திற்கு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அதிமுக தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், இதைப்பற்றி எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
அண்மையில் கூட பொன்முடி அவர்கள் மீது கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே, இந்த வழக்கைப் பொறுத்தவரையிலே சட்டரீதியாக அவர் இதனை நிச்சயமாக சந்திப்பார்.
எது, எப்படி இருந்தாலும், வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், இதற்கெல்லாம் நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், பீகாரிலும், கர்நாடக மாநிலத்திலும் இதைத்தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடைபெறவிருக்கக்கூடிய இந்த கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக, அவர்கள் செய்து கொண்டிருக்கக்கூடிய தந்திரம்தான் தவிர, வேறல்ல. இதை எல்லாம் நிச்சயமாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
கேள்வி : உங்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியாக பார்க்கிறீர்களா?
முதலமைச்சர் பதில் – ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் ஆளுநர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்.
கேள்வி : கடந்த முறை நீங்கள் பீகார் சென்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்தது, பிறகு இரண்டாவது முறையாக பெங்களூர் செல்லும் போது அமைச்சர் பொன்முடி அவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் பதில் – இது எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யக்கூடிய நாடகம். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாதா. நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே இது நியாயமா, இதை எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
கேள்வி: பெங்களூருக்கு செல்கிறீர்கள், காவேரி விவகாரம் பற்றி பேசுவீர்களா?
முதலமைச்சர் பதில் – காவேரி பிரச்சனை பொறுத்தவரையிலே, மேகதாது பிரச்சனை பொறுத்தவரையிலே என்றைக்கு கலைஞர் அவர்கள் அதிலே ஒரு முடிவெடுத்து அந்தப் பணியை நிறைவேற்றி கொண்டிருந்தாரோ, அந்தப் பணியில் கிஞ்சிற்றும் மாறாமல் அதை கடைப்பிடிப்போம். இந்தக் கூட்டம் என்பது, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக நடைபெறவுள்ள கூட்டம். காவேரி பிரச்சனை பற்றிய கூட்டம் அல்ல, இன்னும் சொல்லப் போனால், இப்போது இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது, அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!