M K Stalin

“Bullet Train-க்கு இணையான இரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்..” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்றார்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.5.2023 மற்றும் 25.5.2023 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் நாட்டின் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர்களையும் சந்தித்து பேசியதுடன், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

​அதனைத் தொடர்ந்து 25.5.2023 காலை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்றிரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்திற்கு சென்றடைந்தார். அதன் தொடர்ச்சியாக 26.5.2023, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்று ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இந்த கலாச்சார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான அகிமி சகுராய் முதலமைச்சர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி தற்போது ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் இரயிலில் பயணம் செய்கிறார். மேலும் இது போல் புல்லட் இரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு Bullet Train-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் Bullet Train-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!" என்றுள்ளார்.

Also Read: இந்தியாவுக்கே பெருமையும் வளமும் சேர்க்கும் மாநிலம் தமிழ்நாடு -ஜப்பானில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!