M K Stalin

”பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு !

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைவாணர் மாளிகையை திறந்து வைத்தார். தொடர்ந்து கன்னியாகுமர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேராசிரியரின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பேராசிரியரின் உருவபொம்மைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி அங்கு நடைபெற்ற விழாவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் உலவிக் கொண்டிருப்பவர்கள், நமது திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் நோக்கில் சிலர் மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இந்த ஆட்சியை இப்படியே விட்டால் நம் பிழைப்பு என்னாவது என்று எண்ணி புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

என் மீது வைக்கப்படும் தேவையற்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. அதைச் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள இவ்வாறு இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் சிறப்பான கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலில் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதெல்லாம் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியம் இருக்கிறது. மார்ச் 1-ம் தேதி என் பிறந்தநாள் விழாவில் பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் முன்னிலையில் பேசியபோது தமிழ்நாட்டைப் போல தேசிய அளவிலும் மத சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

கருத்து வேறுபாடுகளையும். தன் முனைப்பையும் விட்டுவிட்டு பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டேன். அதைத்தான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையே காக்க வேண்டுமென்றால் கலைஞரின் இலட்சியத்தை கொண்டு நாம் செயல்படவேண்டும் " என்று கூறினார்.

Also Read: கீழடி ஆய்வுகளை உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்துவிட்டார் முத­ல­மைச்­சர் -முரசொலி புகழாரம் !