M K Stalin

“‘கலைஞர் வரலாறு - திராவிடமும் சமூக மாற்றமும்’ : 2 நூல்களும் போர் வாள்கள்..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

எழுத்தாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் எழுதிய 'கலைஞர் மு. கருணாநிதி வரலாறு' மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய 'திராவிடமும் சமூக மாற்றமும்' நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவர், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் திரு. என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப்படத்தையும் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர், 'கலைஞர் மு. கருணாநிதி வரலாறு' மற்றும் 'திராவிடமும் சமூக மாற்றமும்' ஆகிய 2 நூல்களும் அறிவு கருவூலங்கள்; போர் வாள்கள் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கும் - தமிழினத்துக்கும் தேவையான மாபெரும் அறிவுக் கருவூலமான இரண்டு புத்தகங்களை இன்று நான் வெளியிட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நானும் உங்களோடு பங்கேற்று புத்தகங்களை வெளியிட்டு அதே நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான – நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதி, உலகப் புகழ்பெற்ற பதிப்பகமான பென்குயின் வெளியிட்டிருக்கக்கூடிய புத்தகம்தான் 'Karunanidhi - A Life'!

இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவரான, நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முனைவர் ஜெயரஞ்சன் எழுதி, கயல்-கவின் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம்தான் 'A Dravidian Journey'!

இந்த இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இன்று இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது. இவை இரண்டையும் புத்தகங்கள் என்றல்ல; 'அறிவுக் கருவூலங்கள்' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்! இவை தமிழினத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய, திராவிட இயக்கத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய கொடைகள் மட்டுமல்ல, 'போர்வாட்கள்' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்!

ஏனென்றால், இதனை எழுதியிருக்கும் ஏ.எஸ்.பன்னீர்செல்வனாக இருந்தாலும் சரி, ஜெயரஞ்சனாக இருந்தாலும் சரி, அவர்களெல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல; தமிழினத்திற்கும் அறிவியக்கமான திராவிட இயக்கத்திற்கும் கிடைத்துள்ள புதையல்கள் என்று சொன்னால்கூட அது மிகையாகாது.

யார் அறிவாளி என்பதற்கு இந்திய அறிவுலக மேதையான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், "எவர் ஒருவரின் அறிவு, அவர் வாழும் சமுதாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்தான் உண்மையான அறிவாளி!" என்று சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் பார்த்தால், தங்களது அறிவையும், ஆற்றலையும், சிந்தனைத் திறனையும் இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள்தான் நம்முடைய பன்னீர்செல்வன் அவர்களும், ஜெயரஞ்சன் அவர்களும்!

ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் தலைவர் கலைஞருக்குப் பிடித்த மிக நெருக்கமான பத்திரிகையாளர். சில பத்திரிகையாளர்கள் முதலமைச்சராக இருக்கும்போது மட்டும் நெருக்கமாக இருப்பார்கள், நெருங்கி வருவார்கள். பன்னீர்செல்வன் அவர்கள் அப்படிப்பட்டவர் அல்ல. தலைவர் கலைஞர் அவர்களுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ, அவர் மீது விமர்சன அம்பு எப்போதெல்லாம் பாய்கிறதோ, அதற்குப் பதில் சொல்வதற்கு முன்வரும் ஒரு பேனா போராளிதான் நம்முடைய ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

நடுநிலையான பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதை மட்டுமே தங்களது பணி என்றும், அதனால் சிலரிடம் கிடைக்கும் அங்கீகாரம்தான் தங்களுக்கான வாழ்நாள் பாராட்டென்றும் நினைப்பவர்கள் இந்தக் காலத்தில் உண்டு, எந்த காலத்திலும் உண்டு. அப்படிப்பட்ட காலத்தில், நேர்மறையாகப் பார்த்து எழுதி, நடுநிலையாளர்கள் மனதில் திராவிட இயக்கம் குறித்த சரியான பார்வையை விதைக்க பன்னீர்செல்வனின் ஆங்கில எழுத்துகள் பயன்பட்டிருக்கின்றன, தொடர்ந்து பயன்பட இருக்கின்றன.

நமது பன்னீர்செல்வன் தி இந்து, அவுட்லுக் உள்ளிட்ட முன்னணி ஆங்கில இதழ்களில் பணியாற்றியவர். தி இந்து ஆங்கில நாளிதழில் "ரீடர்ஸ் எடிட்டராக" ஒன்பது ஆண்டுகள் இருந்தவர். பனோஸ் தெற்காசியா அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும், உலகளாவிய வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இருந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ராய்ட்டர்ஸ் பெல்லோஷிப்புக்குத் தேர்வானவர்.

200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கக்கூடியவர். தற்போது சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஆய்வுப் பிரிவுத் தலைவராக இருக்கக்கூடியவர். இப்படி எங்கே, எத்தனை பொறுப்புகளில் இருந்தாலும் தன்னைத் திராவிட இயக்கத்தவன் என்று பெருமையோடு பெருமைப்படுத்திக் கொள்வதிலே அவருக்கு ஈடு அவர்தான்.

நம்முடைய பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அறிமுகம் தேவையில்லை. செய்தித் தொலைக்காட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அந்த அளவுக்கு அவர் வெகுமக்களிடையே பிரபலமாகி விட்டவர். பொய்யையும், புனைசுருட்டையும், அவதூறுகளையும் சொல்லி திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி வந்தவர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும் மடார் மடார் என்று தலையில் கொட்டிப் பதில் சொன்னவர் அவர், உண்மைகளை உரக்க சொன்னவர் ஜெயரஞ்சன் அவர்கள்தான்.

பொருளாதாரம் என்றாலே, சில ஆங்கிலச் சொற்களை வைத்துக் கொண்டு சிலர் மிரட்டினார்கள். ஆனால், அவர்களது சொற்களையே உள்வாங்கி, அவர்கள் மீதே திருப்பி எறியக்கூடிய வித்தைக்காரர் நம்முடைய ஜெயரஞ்சன் அவர்கள். இதுபோன்ற விவாதங்கள் வரும்போது, நானே பலமுறை அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறேன், நன்றி சொல்லி இருக்கிறேன்.

சோஷியல் மீடியா வளர்ந்து வந்த இந்த நேரத்தில் திமுக மீதான பொய்யான தாக்குதலை தடுத்த மாபெரும் கேடயம்தான் நம்முடைய ஜெயரஞ்சன். இந்த அளவு சிந்தனைகளும் அறிவு கூர்மையும் கொண்டவர் நம்மோடு இருக்க வேண்டும் என்று நினைத்துதான், ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவினுடைய துணைத் தலைவராக அவரை அரசின் சார்பிலே நாம் நியமித்தோம்.

இன்று அரசு கொள்கை வகுப்பதில், ஆலோசனைகளை வழங்குபவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். தமிழினத்தின் மேன்மையை எந்தவகையில் எல்லாம் செயல்படுத்த முடியும் என்று வழிகாட்டுபவராக - அப்படி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கக்கூடியவராக நம்முடைய ஜெயரஞ்சன் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய ஆற்றல் வாய்ந்த இருவர் தங்களது அறிவுப்பங்களிப்பை நமக்கு வழங்கி இருக்கிறார்கள். ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஆங்கிலத்தில் எழுதிய நூலை கலைஞர் மு.கருணாநிதி வரலாறு என்ற தலைப்பில் சந்தியா நடராசன் அவர்கள் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். தலைவர் கலைஞருக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவராக இருக்கக்கூடிய இளையபாரதியின் வ.உ.சி. நூலகம் இதனை அழகாக வெளியிட்டுள்ளது.

தலைவர் கலைஞரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையான நூல்களில் இந்த நூலும் நிச்சயமாக இடம்பிடித்திருக்கிறது. ஏனென்றால் இது விமர்சனப் பார்வையுடன் அமைந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பொதுப்படையான அரசியல் வரலாற்று ஆய்வாளர்களும் படிக்கத் தக்க வகையில் செம்மையாக எழுதப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நம்முடைய இந்து ராம் அவர்கள் சொன்னதுபோல, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த நிலைப்பாடுகள் பற்றி விரிவாக தனது நேரடி அனுபவங்களின் மூலமாக நம்முடைய பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார்.

Also Read: “‘பராசக்தி’ படத்தின் தாக்கம், இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்..” - இயக்குநர் வெற்றிமாறன் !