M K Stalin

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்.. முதலைமச்சர் கடிதத்தையடுத்து வேகமெடுத்த ஒன்றிய அரசின் நடவடிக்கை !

தாய்லாந்திற்கு தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளுக்காக சென்ற இந்தியர்களில் சுமார் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை துப்பாக்கி முனையில் மியான்மர் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளனர்.

அப்படி கடத்தப்பட்ட அவர்கள் அங்குள்ள சட்டவிரோத வேலைகள் செய்யும்படி கட்டயப்படுத்தப்படுகின்றனர். அப்படி செய்ய மறுத்தால் அவர்களை அங்கிருப்பவர்கள் கடுமையாக தாக்குவதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிலர் வீடியோ வெளியிட்டனர். மேலும் தங்களை இங்கிருந்து மீட்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21-9-2022) கடிதம் எழுதினார்.

அதோடு அந்த கடிதத்தில் அங்கிருக்கும் இந்தியர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். முன்னேற்றங்கள் குறித்து தூதர் என்னிடம் விவரித்தார், மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: பாஞ்சாகுளம் விவகாரம் : குற்றவாளிகளுக்கு 6 மாதம் ஊருக்குள் வரத் தடை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!