M K Stalin
தொடங்கியது ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா... ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வருகை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய தன்வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய தன்வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் புத்தகம் வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது.
இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்கிறார். தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி வரவேற்புரையாற்றுகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிடுகிறார். பின்னர், நிகழ்வில் சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கின்றனர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்குகிறார்.
தி.முக. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 1953ஆம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரையிலான முதலான தனது 23 ஆண்டுகால வாழ்க்கையை பற்றி ‘உங்களில் ஒருவன்’ -1 என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவுகள், கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டைப் பருவத்தில் இருவண்ணக் கொடியேந்தி இயக்கத்திற்காக இயங்கத் தொடங்கிய ஏற்றமிகு பொழுதுகள் உட்பட தனது அனுபவங்கள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக விழா அரங்கிற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாயிலில் நின்று வரவேற்றார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!