M K Stalin

“ஒரு புதிய விடியல் தொடங்குகிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் பற்றி India Today சிறப்பு கட்டுரை!

‘இந்தியா டுடே’ ஆங்கில வார ஏடு மே 24 ந் தேதியிட்ட இதழில் ‘ஒரு புதிய விடியல் தொடங்கி இருக்கிறது’ என்ற தலைப்பில் பிரபல பத்திரிகையாளர் அமர்நாத் கே.மேனன் எழுதிய சிறப்பு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் சில பகுதிகள் வருமாறு:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 7 அன்று முதல்வராகப் பதவியேற்றவுடன், மாநிலத்தின் ஆபத்தான கோவிட்-19 நிலைமையை மதிப்பிட்டு, தைரியமான முடிவுகளைத் தேர்ந்தெடுத்தார். வைரஸ் பரவலை தடுத்திட (இந்த சூழலில்) வாழ்வாதாரத்தை விட உயிரே முக்கியம் என அவர் செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக மே 10 முதல் பதினைந்து நாட்களுக்கு பொது முடக்கத்தை அறிவித்தார். மே 9 ஆம் தேதி நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தனது அமைச்சரவை சகாக்களுக்கு, நிலைமையின் தீவிரத்தை அவர் கோடிட்டுக் காட்டினார், அவர்களில் 22 பேரை அதிகம் பாதிப்படைந்த 14 மாவட்டங்களுக்கு அனுப்பினார்.

கோவிட் தொடர்பான அனைத்து தடுப்பு முயற்சிகளையும் மேற்பார்வையிட, பொது முடக்கத்தின்போது அவர்கள் அங்கு இருந்து மேற்பார்வையிடப் பணித்தார். அனுபவமிக்க பழையவர்கள் மற்றும் புதிய இளம் அமைச்சர்களின் கலவையாக ஸ்டாலின் அவர்கள், தனது அமைச்சரவையினைத் தேர்வு செய்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். மொத்தமுள்ள 33 பேரில் 15 அமைச்சர்கள் புது முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையிலான பதவியேற்பு விழாவுக்குப் பிறகு முதன்முறையாக தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை சென்று ஸ்டாலின் அவர்கள், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

மே 15 முதல், ரூ.4,000 ரொக்க மானியத்தின் முதல் தவணையாக 20.7 மில்லியன் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் கோவிட் நிவாரணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்கான டோக்கன்கள், நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு வீடு வீடாக பணியாளர்களால் வழங்கப்பட்டு தற்சமயம் விநியோகம் நடைபெறுகிறது. இதனால் அரசிற்கு ரூ.4,150 கோடி செலவாகும். இத்துடன் தமிழக அரசே அனைத்து கொரோனா நோயாளிகளுக்கான செலவையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டாலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக செலவினம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியதன் வாயிலாக, சென்னை மற்றும் பிற நகர்ப்புறங்களில் உள்ள அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள். இதனால் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி செலவினம் ஏற்படும். அதன் வாயிலாக பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் என்ற வகையில் தமிழ்நாட்டின் 40 சதவீதப் பயணிகள் பயனடைவார்கள். இவ்வாறு மகளிருக்கு அளிக்கப்பட்ட இலவச பயணச்சலுகை காரணமாக மகளிருக்கு அதிகாரமளித்தல், வேலைவாய்ப்புகளுக்கான அணுகலை எளிதாக்குதல், கல்வி கற்கும் வாய்பினை அதிகரித்தல் ஆகியவை மேம்படும் எனக் கொள்கை வடிவமைப்பாளர்கள் கருதுகின்றனர். மாற்றுத் திறனாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவருக்கும் இத்தகைய இலவச பயணச் சலுகையை அளிக்க கோரிக்கை விடுத்து, அதுவும் தற்சமயம் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய தேர்தல் வாக்குறுதியான பால் விலைக் குறைப்பினையும் அமல்படுத்தி மாநில அரசிற்குச் சொந்தமான ஆவின் பாலினை லிட்டருக்கு ரூ.3 குறைத்து, அதற்குரிய கொள்முதல் விலையிலும் உரிய மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணக்கிடப்பட்ட மாற்றம்

அடுத்த சில மாதங்களில் கோவிட் நிலைமையைக் கையாள்வதில் அவரது செயல்திறன், அவரது பதவிக் காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தமிழக முதல்வர் அறிந்திருக்கிறார். மாநில தலைமைச் செயலாளரின் மாற்றம் மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு நான்கு சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், ஸ்டாலின் அவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சி எவ்வாறு இயங்கக்கூடும் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார். 12 மூத்த ஆட்சிப்பணி அலுவலர்களில் வெ.இறையன்பு அவர்களை தலைமைச் செயலாளராகத் தெரிவு செய்துள்ளார்.

இறையன்பு ஒரு நேர்மையான நிர்வாகியாக பரவலாகக் கருதப்படுகிறார், அரசாங்க இயந்திரத்தைச் செலுத்துவதில் ஒரு நல்ல சாதனை படைத்துள்ளார், மேலும் மாநிலத்திலுள்ள ஒரு சில ஆட்சிப்பணி ஊழியர்களில் தலை சிறந்த ஊக்கமளித்திடும் மேடைப் பேச்சாளராக, குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே பிரபலமாக உள்ளவர். முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முதல்வரின் முதல் செயலாளராக த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முந்தைய அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருந்த நிருவாக அமைப்பினையே முதலமைச்சர் அலுவலகம் அமைத்துள்ளது. மற்றொரு மாற்றமாக 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையின் போது கடலூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய ககன்தீப்சிங் பேடி ஐ.ஏ.எஸ். அவர்கள், தற்போதைய நிலையில் சென்னைப் பெருநகர மாநகராட்சியின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரத்துவத்தை வழி நடத்துவதற்கான மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்வுகள் நேர்மறையானவை, நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை அடையாளம் காணும், அவர்களில் சிலர், கடந்த 10 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்தவர்களாக இருந்தனர் என்று அரசியல் ஆய்வாளர் சத்திய மூர்த்தி கூறுகிறார். இது தேர்வினைப் பற்றி மட்டும் கூறுவதல்ல, ஸ்டாலின் அவர்கள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்த செய்தியாக மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் உள்ளது. மே 8ஆம் நாள் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்களை 100 நாட்களில் தீர்வு செய்வதாக உறுதியளித்தபடி, அந்தப் பொறுப்பினை திருமதி ஷில்பா பிரபாகர் சதீஸ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் ஒப்படைத்தார். அம்மனுக்களைத் தீர்வு செய்வதற்காக தனித்துறை ஒன்றை உருவாக்கியும், அதன் நிலைகளைக் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இணைய தளம் ஒன்றை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கம் அனைத்து மக்களுக்குமானது என வலியுறுத்தியுள்ளார்!

நிர்வாக நோக்கத்திற்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட குறைகளை மாற்றுத் தீர்வுகள் ஏற்படுத்துவதன் வாயிலாகத் தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு உறுதியளித்துள்ளார், மேலும் அரசாங்கம் அனைத்து மக்களுக்குமானது என்றும் வலியுறுத்தியுள்ளார். "கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் சென்ற எனது அனுபவங்கள் மற்றும் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு நம் மாநிலத்தைப் பற்றிய எனது கனவுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். உலகில் வாழச்சிறந்த இடமாக நம் மாநிலத்தை மாற்றிட விரும்புகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் முரசொலி நாளேட்டில் மே9 அன்று முதல்வராகப் பதவியேற்ற பின்னர் தனது கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "நான் என்னை முதலமைச்சராகப் பார்க்கவில்லை, ஆனால் ஒரு முன்னணிப் பணியாளனாகக் கருதுகிறேன் ஆளுகை என்பது ரோஜாக்களின் படுக்கை அல்ல, ஆனால் முட்கள் நிறைந்த ஒன்று என்ற உண்மையை மனதில் வைத்து இந்தப் பணிக்கு நான் தயாராக இருக்கிறேன். இது தி.மு.க. தலைவரான என் தலைமையிலான அரசாங்கம் என்றாலும், இது தி.மு.க.வின் அரசாங்கம் அல்ல, இந்த அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் உரியது, அது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் எந்த வேறுபாடும் இல்லாமல் அரவணைத்துச் செல்லும்" என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Also Read: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மூலம் : 549 கோரிக்கைகளுக்கு தீர்வு; சொன்னைதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

"நட்பு மனப்பான்மையுடன் மற்ற கட்சிகளின் தோழர்களையும் அரவணைத்துச் செல்வதன் மூலம், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கட்சி உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும்" என்று ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார்."கடந்த 10 ஆண்டுகளில் பல விதமான ஏமாற்றங்களைச் சந்தித்த மக்களிடையே பலத்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தைக் குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை, இருளைக் குறை கூறுவதை விட ஒளி விளக்கு ஒன்றை ஏற்றுவது நல்லது. இலையுதிர் காலத்தை விமர்சிப்பதை விட, வசந்தத்தை அழைப்போம்" என்றும் அவர் எழுதியுள்ளார். கடந்த காலங்களில், தி.மு.க.வினர் எதிர்க் கட்சிகளின் மீது கடுமையான கருத்துக்களைக் கூறியதாக அறியப்படுகிறது. எனினும் தற்போது சூழ்நிலை வேறு. அம்மா உணவகத்திலுள்ள முன்னாள் முதல்வரின் படங்களைச் சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுத்ததன் வாயிலாக அதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரத்தில் குறைந்தது மூன்று முறை தி.மு.க. தலைவர், "இது ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமல்ல, அனைத்து தமிழ்நாட்டிற்குமான ஒரு அரசாங்கமாக இருக்கும்" என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

ஸ்டாலின் அவர்கள், இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது, மேலும் அரசாங்கம் அதைச் செய்வதில் வெற்றி பெறுகிறதா என்று ஆவலுடன் எதிர்நோக்குவதாக உள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, எடப்பாடிபழனிசாமி போன்றவர்களை விட, மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் இருப்பார் என்று முதல்வரின் ஆரம்ப நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் அவர்கள் கடந்த காலங்களில் தனது பரப்புரைகளின் போது கிராம வாசிகளை மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டார், மேலும் கோவிட் நிலைமை தளர்ந்தவுடன் பல மாவட்டங்களுக்கு அவர் வருகை தரவிருக்கிறார். "கடந்த பல ஆண்டுகளாக உணரப்படாத நேர்மை மற்றும் தீவிர அணுகுமுறைத் தன்மையின் ஒரு அடிப்படை ஏற்பட்டுள்ளது" என்று அரசியல் விமர்சகர் என்.சத்தியமூர்த்தி கூறுகிறார். முதல்வர் பொது வாழ்க்கையில் சுமார் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். சென்னை மேயராகவும், துணை முதல்வராகவும் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு அரசியல் பதவிகளிலும் சிறந்த அனுபவம் பெற்றவர். தற்போதைய மோசமான சூழ்நிலையைத் தவிர, சுகாதாரத் துறையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது, மற்றும் நிதி நிலைமையை எளிதாக்க உதவும் முக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் குறிக்கிறது.

கோவிட் மேலாண்மை மற்றும் நிதி, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவை, அவர் ஒன்றிய அரசுடன் முன்னுரிமை அடிப்படையில் எதிர்கொள்ளப்போகும் முக்கியப் பிரச்சினைகள் ஆகும். "ஸ்டாலின் அவர்கள், தனது நிர்வாகத்திற்கு கொஞ்சம் புத்துணர்ச்சியைக் கொண்டுவர விரும்புகிறார், அதில் அவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது" என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் ராமு மணிவண்ணன் கூறுகிறார். அவர் தனது தந்தையை விட அதிகாரத்துவத்தை நன்கு பயன்படுத்துவார். சில அரசுத் துறையின் பெயர்களை மாற்றுவதற்கான முடிவு வெறும் ஒப்பனைக்கானதல்ல. இந்த நிர்வாகத்திலிருந்து ஆட்சியில் புதிய வகை முயற்சிகளை நாம் எதிர்பார்க்கலாம். ஸ்டாலின் தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை, ஆனால் மாநில தலைமைச் செயலாளரையும் அதிகாரிகளையும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதன் வாயிலாக நிறுவப்பட்ட சான்றுகளுடன் சென்றுள்ளார். தி.மு.க. ஆட்சியின் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் எதை எதிர்பார்க்கலாம்? ஸ்டாலின் அவரது அரசு மற்றும் தி.மு.க.வின் நிலை பற்றி அதிகம் புரிந்திருப்பதாக ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

எனவே, கட்சியை வலுப்படுத்த அனைத்தையும் அவர் செய்வார். அவர் மகன் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து தவிர்த்து வைத்திருக்கிறார். முதலமைச்சர் திராவிட அடையாளத்தைப் பற்றி அதிக உறுதியுடன் இருப்பார், மேலும் அந்தக் கருத்தளவில்தான் கட்சியை அணி திரட்டுவார். பதவியேற்ற சில நிமிடங்களில், ஸ்டாலின் ட்விட்டரில் தன்னை, "தமிழக முதல்வர், தி.மு.க. தலைவர், திராவிடச் சொந்தங்களைச் சேர்ந்தவன்" என்று குறிப்பிட்டார். பொருளாதார நிர்வாகத்தில் ஒரு முன்னுதாரணமான மாற்றம், திராவிட சமூக நீதி உறுதிப்பாட்டை மாற்றாமல், தூய்மையான அரசாங்கத்தை மீட்டெடுப்பது, அரசுக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை அவர் முன் உள்ள தலையாயப் பணிகள். "நிருவாகத்திற்கான ஒரு நிலையான அணுகுமுறையைத் தவிர, ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் உள்ள பிரச்சினைகளில் புத்துயிர், பா.ஜ.க. எதிர்ப்பு நகர்வுகளை நாடு முழுவதும் ஊக்குவித்தல் மற்றும் மேம்பாட்டு முன்னுரிமையை மறுவரையறை செய்வது போன்ற தி.மு.க.வின் நோக்கங்களும் அதிகமாக இருக்கும்"" என்கிறார் மணிவண்ணன்.

Also Read: கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சிக் குழு அமைத்த முதல்வர்; மாற்று அரசுக்கான சூத்திரம் என முரசொலி புகழாரம்!