M K Stalin

MGR சூட்டிய பெயரை மாற்றும் அளவுக்கு டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருப்பதா? - மு.க.ஸ்டாலின்

சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை” என்ற சாலையின் பெயரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்ட போதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க.” என எச்சரிக்கை விடுத்துள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

Also Read: “யாரை திருப்தி செய்ய பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம்?”: எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம் !