M K Stalin
“இதே வார்த்தைகளை பிரதமர் மோடி இருக்கும் மேடையில் சொல்வதற்கு பழனிசாமி தயாரா?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
““என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவோ, அடிமைப்படுத்தவோ முடியாது” என்று சொல்லும் முதலமைச்சர் பழனிசாமி, அதை டெல்லி சென்றபோது சொன்னாரா? அதை வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும் போது அந்த மேடையில் துணிச்சலுடன் சொல்வதற்கு தயாரா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (05-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை – கலைஞர் திடலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“நான் ரெடி, நீங்கள் ரெடியா? இப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தக் கோவில்பட்டியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப் போகிறோம்.
இது நிகழ்ச்சியா அல்லது பெரிய மாநாடா என்று சந்தேகப்படும் அளவிற்கு நீங்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக இந்த மாவட்டக் கழகத்தின் செயலாளர் - முன்னாள் அமைச்சர் - சட்டமன்ற உறுப்பினர் - அருமைச் சகோதரி கீதாஜீவன் அவர்கள் எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு எழுச்சியாக, உணர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் சகோதரி கீதா ஜீவன் அவர்களை உங்கள் அனைவரின் சார்பில் - தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘பெண் சிங்கம்‘ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் இவர் கழகத்திற்கு கிடைத்து இருக்கும் வீராங்கனையாக இந்த மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து நம்முடைய சகோதரி கீதாஜீவன் அவர்கள் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பழமொழி உண்டு, ‘அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறக்கும் பிள்ளை’ என்று சொல்வார்கள். ஆனால் ‘அப்பாவிற்குப் பெண் தப்பாமல் பிறந்திருக்கிறது’ என்று அதனை மாற்றிச் சொல்ல வேண்டும். அவரைப் பாராட்டும் அதே நேரத்தில் அவருக்குத் துணை நின்ற அத்தனை கழக நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
எல்லா இடங்களிலும் இதே போலக் கூட்டத்தை நடத்திக் கொண்டு வருகிறேன். ஆனால், இங்கே குண்டூசி போட்டால் கூட சத்தம் வரும் அளவுக்கு அவ்வளவு அமைதியாக, கட்டுப்பாடாக நீங்கள் உட்கார்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது, சகோதரி கீதாஜீவன் சொன்னது போல இந்த மாவட்டத்தின் எல்லா தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கிறது.
இந்த அரங்கத்திற்குள் நுழையும் போது வாயிலில் நம்முடைய தொண்டர்கள், தோழர்கள் உங்கள் பெயரை, உங்கள் விவரங்களை, நீங்கள் கொடுக்கும் புகார்களை, உங்களுடைய கோரிக்கைகளை அங்கே பதிவு செய்து கொண்டிருந்திருப்பார்கள். அங்கே பதிவு செய்துவிட்டு வந்திருப்பீர்கள்.
அப்போது அவர்கள் ஒரு ரசீது உங்களிடம் கொடுத்திருப்பார்கள். அந்த ரசீதில் வரிசை எண் இருக்கிறது. அதுதான் முக்கியம். பொத்தாம் பொதுவாக நாம் இந்தக் கூட்டத்தை நடத்தவில்லை. பேருக்காக, ஒப்புக்காக இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
நாம் ஆட்சிக்கு வந்து பொறுப்பேற்ற நாளிலிருந்து 100 நாட்களில் இந்தப் பெட்டியில் இருக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியே தீர்வான் இந்த ஸ்டாலின் என்ற அந்த உறுதியோடு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதற்காகத்தான் அந்த ரசீது முக்கியம் என்று சொன்னேன். ஏனென்றால் நீங்கள் நேரடியாக கோட்டைக்கு வந்து என்னைச் சந்தித்து உரிமையோடு கேட்க முடியும்.
இப்போது வந்திருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது யாரைப் பேச வைப்பது, இவ்வளவு பேரை எப்படி பேச வைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அது நடக்காத காரியம். அதனால் எல்லா இடங்களிலும் 10 பேரைத் தேர்வு செய்து பேச வைக்கிறோம். அதேபோல் இங்கும் பத்துப் பேரை அழைக்கிறேன்.
தேர்வு செய்கிறோம் என்றால் இந்தப் பெட்டியிலிருந்து எந்த சீட்டு வருகிறதோ அந்த சீட்டில் உள்ள பெயர்களை நான் அழைப்பேன். அவ்வாறு பேசுகிறவர்கள் சுருக்கமாக பேச வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடக்கவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:
“தி.மு.க. ஆட்சியில்தான் முதன் முதலில் இந்தியாவிலேயே குடிநீர் வடிகால் வாரியம் என்ற அமைப்பு - கலைஞரின் ஆட்சி காலத்தில்தான் அமைக்கப்பட்டது. குடிநீருக்குக் கலைஞர் அவர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
உதாரணமாக நான் துணை முதலமைச்சராகவும் - உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது, கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அங்கு குடிநீரில் ஃப்ளோரைடு கலந்து வரும். அதனால் அங்கு இருக்கும் மக்களுக்கு பல நோய்கள் வந்து விட்டது. உயிருக்கு உலை வைக்கும் வகையில் நோய்களெல்லாம் வர ஆரம்பித்து விட்டன.
அதனால் தலைவர் கலைஞர் அவர்கள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக என்னை, ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைத்து, அங்கு இருக்கும் வங்கியில் கடன் வாங்கி அந்தத் திட்டத்தை நிறைவேற்றிய ஆட்சிதான் தி.மு.க ஆட்சி - கலைஞருடைய ஆட்சி!
அதேபோல் அருகில் இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம், தண்ணீர் இல்லாத காடாக இருந்தது. அவ்வாறு இருந்த இராமநாதபுரம் மாவட்டத்திற்குக் கலைஞர் அவர்கள் 616 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த என்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.
12 மாதத்தில் முடிக்க வேண்டிய பணியை 10 மாதத்தில் முடித்து இப்போது குடிநீர் சென்று கொண்டிருக்கிறது. இப்போது தண்ணீர் இல்லாத காடு என்று யாரும் அப்பகுதியைச் சொல்வதே இல்லை.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த ஆட்சி. அது ஒரு கருப்பு நாள்.
நியாயமான முறையில் 100 நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். 100-வது நாள் ஒரு பேரணியாக வந்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், மறியல் செய்ய வேண்டும், கலவரம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் வரவில்லை. அமைதியாக ஒரு பேரணியை நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனுக் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்.
ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர், அலுவலகத்தில் இருந்து அதைப் பொறுமையாக வாங்கி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால், அவர் ஆட்சி - அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அந்த இடத்தை விட்டு வெளியில் சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகு அந்தப் பேரணியைக் கலைக்கவேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சென்னைக் கோட்டையில் இருந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டார்கள். அதனால் தடியடி நடத்தப்பட்டது. அதற்குப்பிறகு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 13 பேரை காக்கை குருவிகளை சுட்டுத் தள்ளுவது போலச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் நிலை தான் இருந்தது. எதுவும் தெரியாதது போல பாவலா செய்து கொண்டிருந்தார்.
முதலமைச்சர் நேரடியாக வந்து பார்க்கவில்லை. அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் அந்தக் கொடுமைக்கு இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்ததற்குப் பிறகு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமின்றி அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் ரத்து செய்வோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணம், போதிய டீசல் மானியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
பட்டியலினத்தைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிபை இப்போது பா.ஜ.க அரசு நிறுத்திவிட்டது. இது சம்பந்தமாக உடனடியாக நான் மத்திய அமைச்சரவையில் இருக்கும் டி.ஆர்.பாலு அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் மத்திய அமைச்சர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறார். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தொடர்ந்து அது வழங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நரிக்குறவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தி.மு.க அதற்காகப் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.
அதுகுறித்து 2013-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதேபோல திருச்சி சிவா எம்.பி. அவர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இது குறித்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாகத்தான் இப்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனால் இன்னும் சில பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அந்த பணிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு நலவாரியம் வேண்டும். ஆண் பெண் இருவருக்கும் சம ஊதியம் என்ற யோசனைகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உப்பளத் தொழிலாளர்களின் நலனை மனதில் வைத்து கொண்டு விரைவில் அமையவிருக்கும் தி.மு.க. அரசு நிச்சயமாக அவர்களுக்கு துணையாக இருக்கும். உங்கள் கோரிக்கைகள் அப்போது முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கலைஞர் ஆட்சியில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த காலத்தில் ‘ஊனமுற்றோர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு சொன்னால் அவர்களை இழிவு படுத்துவதாக இருக்கிறது, அவர்கள் மதிப்பைக் குறைப்பதாக இருக்கிறது.
அதனால் அந்தப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக ‘மாற்றுத் திறனாளிகள்‘ என்று பெயர் சூட்டி அழகு பார்த்தது கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமின்றி அந்தத் துறையை முதலமைச்சர் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அதற்குக் காரணம் அவர்களுக்கு வேலைவாய்ப்பில், கல்வியில், அவர்கள் செய்யும் சிறு குறு தொழில்களில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், சலுகை கொடுக்க வேண்டும் என்று பல திட்டங்களை கொண்டு வந்தார்கள்.
மாற்றுத்திறனாளிகள், சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டார்கள். பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். இப்படியெல்லாம் போராட்டம் நடத்தியும் இந்த ஆட்சி அவர்கள் பக்கம் இருக்கவில்லை.
நிச்சயமாக உறுதியாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மக்கள் நலப்பணியாளராக இருந்தாலும், சாலைப் பணியாளராக இருந்தாலும் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியம் கொடுப்போம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள் விரும்புகிறேன்.
மகளிர் சுயஉதவி குழு 1989-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.
எதற்காக மகளிர் சுயஉதவிக் குழுக்களை அவர் தொடங்கி வைத்தார் என்றால், பெண்கள் - மகளிர் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும், எதைப் பற்றியும் அவர்கள் கவலைப் படக்கூடாது, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த மகளிர் சுயஉதவிக் குழுவைத் தொடங்கி வைத்தார்கள்.
அவர் அதைத் தொடங்கிய பின் அது பரந்து விரிந்து பெரிய அளவில் நடந்தது. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது என்னிடத்தில் தான் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்கள். நான் துணை முதலமைச்சராக இருந்த நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு மாதம் 4 முறை அல்லது 5 முறை செல்வேன்.
அவ்வாறு செல்லும்போது அதிகாரிகளிடம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுழல் நிதியை, மானியத் தொகையை என் கையால் தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடுவேன்.
அவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும் போதும் அந்த நிகழ்ச்சியில் 5,000 பேர் உட்கார்ந்திருப்பார்கள். அந்த 5,000 பேருக்கும் கொடுத்துவிட்டுத் தான் செல்வேன். இப்போது இருக்கும் அமைச்சர்கள் காலம் தாழ்ந்து வந்து 4 பேருக்கு கொடுத்துவிட்டு, 200 பேருக்கு கொடுக்காமல் சென்று விடுவார்கள். இவ்வாறு தான் அரசு நிகழ்ச்சி நடக்கும்.
ஆனால் அதை மாற்றியது நான். 5,000 பேராக இருந்தாலும் அந்த 5,000 பேருக்கும் கொடுத்துவிட்டு தான் செல்வேன்.
அவர்களை அமைதியாக உட்கார வைத்து, அவர்களுக்கு நம்பர் கொடுத்து, அந்த நம்பர்படி வரிசையாக மேடைக்கு வரவழைத்து அவர்களுக்கு கொடுப்போம். அப்போது புகைப்படம் எடுப்பார்கள். அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு அந்த புகைப்படமும் கொடுத்து விடுவோம்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகும். நின்ற இடத்திலேயே நின்று கொடுத்திருக்கிறேன். இதைப் பெருமையாக நினைக்கிறேன்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சில தாய்மார்கள் எனக்கு திருஷ்டி எல்லாம் சுத்தி போட்டிருக்கிறார்கள். இவ்வளவு நேரம் நிற்கிறாய் உனக்கு கால் வலிக்கவில்லையா என்று வயது முதிர்ந்த தாய்மார்கள் என்னிடத்தில் கேட்பார்கள். அவ்வாறு கேட்கும்போது நான் அவர்களிடத்தில் ‘இதை கொடுக்கும் போது, உங்கள் முகத்தில் ஒரு சிரிப்பைப் பார்க்கிறேன். அதை பார்த்தவுடன் என் கால் வலி தானாக பறந்து விடுகிறது’ என்று சொல்லி இருக்கிறேன்.
எதற்காக சொல்கிறேன் என்றால் கலைஞர் அதைத்தான் விரும்பினார். கலைஞர் எந்த நோக்கத்திற்காக அதை கொண்டு வந்தாரோ அந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவ்வாறு செய்தோம்.
ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியில் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இன்னும் 3 மாதங்கள் தான் இருக்கிறது. இருக்கிறவரையில் கொள்ளை அடித்து விட்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.
‘நீங்கள் இருக்க வேண்டிய இடம்கோட்டை இல்லை, புழல் சிறையில் தான் இருக்கப் போகிறீர்கள். அதுதான் உண்மை. அதுதான் நடக்கப்போகிறது.’ என்பதையே அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
முன்பு தி.மு.க ஆட்சி இருந்தபோது வங்கிக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருப்பவர்கள் செல்லும்போது அவர்களை உபசரித்து, வங்கிக் கடன், மானியத் தொகை கொடுப்பார்கள். ஆனால் இப்போது மகளிர் சுய உதவி குழு சகோதரிகள் வங்கிக்குள் செல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கவலைப்படாதீர்கள், உங்கள் பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு வரப்போகிறது. அதுதான் இந்த தேர்தல் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
கோவில்பட்டியை பொறுத்தவரையில் இங்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் தான் செய்தித் தொடர்புத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த கோவில்பட்டியில் இருக்கும் பிரச்சனைகளுக்கு ஏதாவது நிரந்தரத் தீர்வு தந்திருக்கிறாரா? ஏதாவது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கிறாரா? அந்த கேள்வியைத் தான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இதுதான் அவரின் லட்சணம்.
உதாரணமாக கோவில்பட்டி நகர மக்களின் முக்கிய தேவையான, குடிநீர் திட்டமான 2வது பைப் லைன் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க ஆட்சி வந்ததற்குப் பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். மந்தமாக அந்த பணி நடந்துகொண்டிருக்கிறது.
60 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் 2வது கட்டப் பணிகள் நிறைவு பெற்றதாக அறிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு 2வது திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால் இன்று வரை பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காத நிலை தான் இருக்கிறது.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப் புறங்களில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படவில்லை.
இதுபோல கோவில்பட்டியை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாலைகள் அமைத்து தரப்படும் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார். இதுவரை அந்த சாலைகளும் முழுமையாக அமைத்துத் தரப்படவில்லை.
தேர்தல் வருவதை ஒட்டி தற்போதுதான் சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறார். கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. அந்த சுரங்கப் பாதை தரமற்ற வகையில் அமைக்கப்பட்டதால் இப்போது அந்த சுரங்கப்பாதை விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்று செய்தி என்னிடத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
சுரங்க பாதை அருகே சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை அமைச்சர் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த பகுதியைச் சார்ந்த மக்கள் அவசர மருத்துவ உதவிக்குக் கூட செல்ல முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த தொகுதி இருந்துகொண்டிருக்கிறது. எனவே நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது - இங்கே பல பிரச்சினைகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.
இதெல்லாம் மனுக்களாக இந்த பெட்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இப்போது இந்த மனுக்கள் அடங்கிய பெட்டியை மூடி, பூட்டு போட்டு, சீல் வைக்கப் போகிறோம். சீல் வைத்த பிறகு 10 நிமிடம் நான் உங்களிடத்தில் பேசப்போகிறேன்.
பேசியதற்கு பிறகு இந்த பெட்டியை சென்னை அறிவாலயத்தில் ஒப்படைக்கப்படும். நாம் ஆட்சிக்கு வந்த மறு நாள் இந்த பெட்டியில் பூட்டு உடைக்கப்பட்டு, பெட்டி திறக்கப்பட்டு, இதற்கென தனி சில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுக்கள் மூலமாக இது பராமரிக்கப்பட்டு, 100 நாட்களில் உங்களுடைய அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிற அந்த சூழ்நிலையை உறுதியாக ஏற்படுத்திதருவேன் என்ற நம்பிக்கையை சொல்லி இப்போது நான் பேசுவதற்கு முன்பு பூட்டு போடுகிற காட்சியை நீங்கள் பார்க்க போகிறீர்கள்.”
இவ்வாறு பொதுமக்களின் புகார்களுக்குக் தி.மு.க தலைவர் அவர்கள் பதிலளித்துப் பேசினார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்துள்ளது. இந்த ஐந்து முறையும் தமிழகத்துக்கு செய்த சாதனைகளை பட்டியல் போட ஆரம்பித்தால் இன்று முழுவதும் நான் பட்டியல் போடலாம்.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளும் அதிமுகவின் சாதனைகளைப் பட்டியல் போட முடியுமா? முடியாது. ஊழலை வேண்டுமானால் இன்று முழுவதும் பட்டியல் போடலாம்!
இந்தியாவிலேயே ஊழல் வழக்கால் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கியவர் அதிமுகவின் முதலமைச்சர் தான்!
இந்தியாவிலேயே ஊழல் வழக்கால் தண்டனை பெற்று - முதலமைச்சர் பதவியில் இருந்தபடியே சிறைக்குப் போனவரும் அ.தி.மு.கவின் முதலமைச்சர் தான்!
இப்படிப்பட்ட தலைகுனிவைத் தமிழகத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சி தான் அதிமுக ஆட்சி.
இது எல்லாம் நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பழனிசாமி பேசி வருகிறார்.
''நாங்கள் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம்" என்று முதலமைச்சர் பழனிசாமி சில நாட்களுக்கு முன் பேசி இருக்கிறார்.
இதுவரை இருந்த அரசுகளில் ஊழல் மலிந்த அரசு என்பது 1991 -96 வரையிலான அ.தி.மு.க அரசு தான். அதையும் தாண்டி ஊழல் செய்யும் அரசாக 2016-2021 அ.தி.மு.க ஆட்சி மாறிவிட்டது.
முதலமைச்சர் பழனிசாமி முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல் ஒன்றையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
* முதலமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
* வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதலமைச்சர் மீதான வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கலாமா என்று கேள்வி எழுப்பியது சென்னை உயர்நீதிமன்றம்.
* தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் இருக்கும்போதே, தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் ரெய்டு.
* டி.ஜி.பி. வீட்டில் ரெய்டு.
* உலக வங்கி நிதி ஊழல்,
* நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஊழல்,
* மத்திய அரசு வழங்கிய அரிசியை வெளிச்சந்தையில் விற்றதில் ஊழல்,
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் டாலர் கணக்கில் ஊழல்
* உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது எல்.இ.டி. பல்பு ஊழல், கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள்
* மின்துறை அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி ஊழல், மின் கொள்முதல் ஊழல், உதிரி பாகங்கள் கொள்முதல் ஊழல், காற்றாலை ஊழல்;
* மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்;
* வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மீது பாரத் நெட் டெண்டர் ஊழல்;
* மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், குவாரி ஊழல், கொரோனா காலத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், பிளீச்சிங் பவுடர், துடைப்பங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல்.
* முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்கள் மீது ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஊழல். ஆர்.கே.நகர் தேர்தலை மறந்திருக்க மாட்டீர்கள்.
* ஸ்மார்ட் சிட்டி ஊழல்
* அண்ணா பல்கலைக்கழக ஊழல்,
* முட்டை டெண்டர் ஊழல்
* கொரோனா கால டெண்டர் ஊழல்கள்
* பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையில் நடந்த ஊழல்கள்.
* கடைசி நேரத்தில் 2885 கோடி ரூபாய்க்கு அவசர டெண்டர்கள் விட்டுள்ளனர்.
இப்போது டெண்டர் எடுத்திருக்கும் ஒப்பந்ததாரர்கள் தயவு செய்து கமிஷன் கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இப்போது விடப்பட்டுள்ள அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் விடப்படும். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எந்த கமிஷனும் இல்லாமல் முறையாக, நியாயமாக அனைத்து ஒப்பந்தததார்களுக்கும் அந்த டெண்டர்கள் வழங்கப்படும்.
* நிலக்கரி வாங்கியதில் ஊழல்.
இதுதான் தமிழ்நாடு அமைச்சரவையின் இன்றைய நிலைமை!
இது கிரிமினல் கேபினெட், இது ஊழல் கேபினெட். இது ஊழல்வாதிகள் நிரம்பிய கேபினெட். ஊழலுக்காக, ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினெட்!
இத்தகைய ஊழல் அரசை நடத்தி வரும் பழனிசாமி, நேர்மையைப் பற்றி பேசுகிறார். அவர் மீதும், அவரது அமைச்சர்கள் மீதும், ஆளுநர் மீது பல்வேறு ஆதாரங்களுடன் ஊழல் புகார்களை கொடுத்துள்ளோம். அதற்கு இதுவரை பழனிசாமியோ, அமைச்சர்களோ இதுவரை பதில் சொல்லவில்லை.மெளனம் சம்மதம் என்பதைப் போல இருக்கிறார்கள்.
“உழைப்பவர் தான் முன்னுக்கு வர முடியும்" என்றும் சொல்லி இருக்கிறார். பழனிசாமியின் உழைப்பைத்தான் ஊரே பார்த்து சிரித்ததே! நாடே பார்த்து நகைத்ததே! அவர் என்னைப் பார்த்து நடிப்பதாக சொல்லி இருக்கிறார். நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆட்சி முடியப் போகிறது என்பதால் விவசாயியாக நடிப்பவர் பழனிசாமியே தவிர, நான் அல்ல. நான் உழைத்து, தியாகம் செய்து அரசியலில் முன்னுக்கு வந்தவன் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
* கோபாலபுரம் இளைஞர் தி.மு.கவை 1967 செப்டம்பர் 15 அன்று தொடங்கியதில் இருந்து நான் அரசியல் இருக்கிறேன்!
* 1971 சட்டமன்றத் தேர்தலில் கழகப் பிரச்சார நாடகமாக முரசே முழங்கு நாடகத்தை நாடு முழுவதும் நடத்தி கழக வெற்றிக்கு உழைத்தவன் நான்.
* திருமணமான ஐந்தாவது மாதத்தில் அவசர நிலை பிரகடத்தை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் நான் அடைக்கப்பட்டபோது எனக்கு வயது 23.
* அ.தி.மு.க அரசு மீதான எரிசாராய ஊழலை விசாரிக்கும் கைலாசம் கமிஷன் என்ற கண்துடைப்பு நாடகத்துக்கு எதிராக போராடியதற்காக 1981 ஆம் ஆண்டு ஒரு மாத காலச் சிறைத்தண்டனை பெற்றவன் நான்!
* 1984 ஆம் ஆண்டு கழக சட்டமன்ற அலுவகலத்தை காலி செய்யச் சொன்னது மட்டுமில்லை, அங்கிருந்த பொருட்களை எடுத்து வெளியில் வீசிய அராஜகத்தை கண்டித்து போராடியதற்காக கைது செய்யப்பட்டவன் நான்!
* 1987 ஆம் ஆண்டு சென்னை நகரில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தைக் கண்டித்து போராடியதற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டவன் நான்!
* 1987 ஆம் ஆண்டு மொழிப் போர் காலத்தில் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் சிறைவைக்கப்பட்டபோது வெளியில் இருந்து கழகப் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றினேன் என்பதற்காக என் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்தது காவல்துறை!
* 1990 ஆம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட வடமாநிலத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது இளைஞரணி சார்பில் ராணுவ மிடுக்கோடு மிகப்பெரிய பேரணியை நடத்தினோம்.
சட்டமன்றத்தில் பல குழுக்கள் அமைப்பார்கள். அப்போது பொதுநிறுவனங்கள் குழுவில் இடம்பெற்றிருந்த நான் உள்ளிட்டோர் பிரதமர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்தோம்.
டெல்லியில் பிரதமர் வி.பி.சிங் அவர்களை, எனது ஆருயர் நண்பர் அன்பில் பொய்யாமொழி உள்ளிட்ட கழக முன்னோடிகள், காங்கிரஸ், அதிமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று சந்தித்தோம். அப்போது ‘இவர்தான் கருணாநிதி மகன் ஸ்டாலின், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்’ என்று என்னை அறிமுகப்படுத்தினர். ‘இவரை அறிமுகப்படுத்த வேண்டுமா’ என்று கேட்ட வி.பி.சிங் அவர்கள், சென்னையில் நடைபெற்ற தேசிய முன்னணித் தொடக்க விழாவில் 'இராணுவத் தளபதியைப் போல தலைமை தாங்கி வந்த ஸ்டாலின்தானே இவர்' என்று குறிப்பிட்டார். அத்தகைய பாராட்டை பெற்றவன் நான்!
* 1993 - குடிநீருக்காக போராட்டம் நடத்தி சிறை!
* 1994 ஆம் ஆண்டு 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறை. எலச்சிப்பாளையத்தில் கழகக் கொடியேற்ற தடுக்கப்பட்டதால் மறியல் செய்து சிறை!
* 2003 - ஆம் ஆண்டு ராணி மேரிக் கல்லூரியை இடிக்க முடிவு செய்தது அதிமுக அரசு. அதைக் கண்டித்து போராட்டியதற்காக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டேன்.
- இப்படி தியாகத்தால் ஆனது எனது வாழ்க்கை!
பழனிசாமியின் கடந்த கால வாழ்க்கையைப் பேசினால், தமிழ்நாட்டுக்கே அவமானம்!
''என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது. அடிமைப்படுத்தவும் முடியாது" என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார். இதை அவர் டெல்லி போனாரே அங்கு போய் சொல்லி இருந்தால் பாராட்டலாம்.
அல்லது 14-ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் சென்னை வருகிறாரே! அந்த மேடையில் சொல்வதற்கு பழனிசாமி தயாரா?
தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, பா.ஜ.கவின் பாதம் தாங்கிக் கிடக்கும் பழனிசாமிக்கு இது போன்ற வாய்ச்சவடால் வசனங்களை பேசுவதற்கு உரிமை இல்லை!
இந்த வாய்ச்சவடால், வீண் ஜம்பம், பொய் விளம்பரம், போலி நடிப்பு இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது. இன்னும் மூன்றே மாதத்தில் பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
அதன் பிறகு அமையும் அரசு தான், உண்மையான அரசாக அமையும்.
ஒரு அதிகாரம் பொருந்திய மக்கள் அரசாக அமையும். உங்களுக்கான அரசாக அமையும். நன்றி. விடைபெறுகிறேன். வணக்கம்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.
Also Read
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!