M K Stalin
“பா.ஜ.க அரசு விவசாயிகளை உதாசீனப்படுத்தியதே இன்றைய காட்சிகளுக்குக் காரணம்” - மு.க.ஸ்டாலின் சாடல்!
பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 11-சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அரசின் பிடிவாதத்தால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதனால் போராட்டக் களம் போர்க்களமாகியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்துள்ள போராட்டக் காட்சிகள் எனக் குற்றம்சாட்டியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தும் நாடகங்களைத் தான் பா.ஜ.க அரசு நடத்தியதே தவிர ஆக்கபூர்வமான செயலைச் செய்யவில்லை. இந்திய நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை எதிரிகளாக நினைக்கிறது மத்திய அரசு.
பிரதமர், விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஏன் தீர்வு காண முயற்சி செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள். வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை சூழுமானால் அது ஒன்றே அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகளும் உணர வேண்டும்.
பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு மட்டும் நாடாளுமன்றத்தில் ஆதரிக்காமல் இருந்திருந்தால், 3 வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என்பதை நெருக்கடியான இந்த நேரத்தில் யாரும் நினைக்காமல் இருக்க முடியாது.
இனியும் பிரதமர் தாமதிக்காமல் விவசாயிகளை நேரடியாக அழைத்து அவரே பேச வேண்டும். விவசாயிகளால் நிராகரிக்கப்படும் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!