M K Stalin

“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பா.ஜ.க அரசு செவிசாய்க்காத நிலையில், நாளை குடியரசுத் தினத்தன்று டெல்லியை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் லட்சக்கணக்கான ட்ராக்டர்களுடன் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், "குடியரசுதின நன்னாளில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டில் விவசாயிகள் நடத்தும் பேரணி, ஒன்று கூடல்களுக்கும் தி.மு.கழகம் முழு ஆதரவு அளிக்கும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஏறத்தாழ இரண்டு மாதங்களாகத் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு உறுதியுடன் போராடி வருகிறார்கள் விவசாயப் பெருங்குடி மக்கள். நாட்டின் திறன் காட்டும் வகையிலான அணிவகுப்பு நடைபெறும் குடியரசு நன்னாளில், நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள், தங்கள் வாழ்வுரிமைக்காக நடத்தும் டிராக்டர் அணிவகுப்பு அமைதியான முறையிலும் வெற்றிகரமாகவும் நடைபெற்றிட திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவினை வழங்குகிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் பல இடங்களிலும் பேரணிகள், ஒன்றுகூடுதல்களை நடத்த முடிவெடுத்துள்ளனர். ‘நானும் விவசாயிதான்’ என வேடமிடுவோரின் ஆட்சியில் விவசாயிகளின் உரிமைக்குரலுக்கு பல இடங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனினும், மாநில ஆட்சியாளர்கள்போல மத்திய அரசின் சட்டங்களுக்கு அடிபணிந்து போகாமல், தங்கள் உரிமைப்போராட்டம் தொடரும் என தமிழக விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு நன்னாளாம் ஜனவரி 26 அன்று தமிழகத்தில் நடைபெறும் விவசாயிகளின் ஜனநாயக வழியிலான பேரணி-ஒன்றுகூடுதல்களுக்கு தி.மு.கழகத்தினர் ஆதரவளிப்பதுடன், கழகத்தின் விவசாய அணியினர் அதில் பங்கேற்று வெற்றிபெறச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!