M K Stalin
“ஐகோர்ட்டே எச்சரித்தும் போலிஸ் டார்ச்சரும் கஸ்டடி மரணங்களும் தொடர்வது கண்டனத்திற்குரியது” : மு.க.ஸ்டாலின்
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலைக்குப் பிறகு- உயர் நீதிமன்றமே எச்சரித்தும்- தமிழக காவல்துறை தலைவர் “கைது நடவடிக்கைகள்” குறித்து சுற்றறிக்கை அனுப்பியும்- இது போன்ற போலிஸ் டார்ச்சரும், அதனால் கஸ்டடி மரணங்களும் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க ஆட்சியில் தமிழக காவல்துறை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது என்பதற்கு ஒரு சில காவல் நிலையங்களில் இது போன்று நடக்கும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது. கடலூர் செல்வமுருகன் மரணத்தைப் பொறுத்தமட்டில், “உன் கணவர் மீது ஸ்டேஷனில் உள்ள திருட்டு வழக்குகளை எல்லாம் போட்டு விடுவோம்” என்று எச்சரிக்கப்பட்டதும்- “கணவனைக் காணவில்லை” என்று மனைவி பிரேமா கொடுத்த புகாரை வாங்காமல் வடலூர், நெய்வேலி நகரக் காவல் நிலையங்களில் உள்ள போலிஸார் இதயமற்ற முறையில் அலைக்கழித்ததும்- மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மீறும் செயல்களாகும்.
ஒருவர் புகார் கொடுத்தால்- காவல் நிலைய எல்லை குறித்து கவலைப்படாமல்- அப்புகாரினைப் பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றங்கள் பல முறை எச்சரித்தும்- ஒரு சில போலிஸ் ஸ்டேஷன்களில் உள்ள போலிஸார் இதை கடைப்பிடிப்பதில்லை என்பது அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறைக்குள் புகுந்து விட்ட “கருப்பு ஆடுகளின் ஆட்சியை” வெளிப்படுத்துகிறது!
கடலூர் செல்வமுருகன் வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தாலும்- அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது உண்மையாான வழக்கிற்காகவா? அல்லது சாத்தான்குளம் காவல் நிலையம் போல் பொய் புகாரிலா? விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட செல்வமுருகன் ஏன் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்? அப்படித் தாக்கிய போலீஸார் யார் யார்? சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிராக செல்வமுருகனின் உயிர் போகும் அளவிற்கு கொடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கி- இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் ஏன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை?
போலிஸ் கஸ்டடியில் மரணம் என்பதை மறைக்க- காயங்களுடன் சிறைச்சாலையில் செல்வமுருகன் அடைக்கப்பட்டது எப்படி?- அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து எல்லாம் தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க ஆட்சியில் போலிஸ் நிலையங்களில் நடக்கும் “கஸ்டடி மரணங்களை” வழக்கம்போல் மறைத்து- தமிழக காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் சீர்குலைத்து விட வேண்டாம் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!