M K Stalin

“கருத்து வேறுபாடுகளைக் களைந்து அரசுக்கு ஒத்துழைப்போம்; களத்தில் பணிகளை தொடர்வோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!

உயிர் காக்கும் பணியே, உயர்வான பணி என மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

“ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்டன. பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது மேலும் தொடருமா என்ற தவிப்பில், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மக்கள் இருக்கிறார்கள். கொரோனா நோய்த்தொற்றிலிருந்து 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களைக் காப்பதற்காக ஊரடங்கை நீடிக்க வேண்டியது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து, பிரதமர் என்னைத் தொடர்பு கொண்டபோது, கொரோனா நோய்த்தொற்றினைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்பதையும், தமிழகத்தில் வேகமாகப் பரவும் நோய்த்தொற்றினைத் தடுப்பதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்பதையும் பிரதமரிடம் வலியுறுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி பங்கேற்பார் என்பதையும் தெரிவித்தேன்.

ஏப்ரல் 8-ம் தேதியன்று பிரதமர் காணொளிக்காட்சி வாயிலாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலு, “நாட்டின் நலன் - மக்களின் நல்வாழ்வு - நாட்டின் பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் காத்திடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, இந்தியப் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - கழகமும் உறுதியாகத் துணை நின்று, தேவையான ஒத்துழைப்புகளை ஊக்கமுடன் நல்கும் என்பதை, இந்தக் காணொளிக்காட்சியின் வாயிலாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் தொடங்கினார்.

கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மாநிலத்தின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் - தமிழக முதல்வர், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த 9 ஆயிரம் கோடி ரூபாயை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பதை டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். அதுபோலவே, இதுவரை நிதி ஒதுக்கப்படாத புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உரிய பரிசோதனைகளை விரைந்து முடிப்பதற்கான கருவிகள், தமிழக மருத்துவர்களுக்கான பி.பி.இ. பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை விரைந்து வழங்கிட வேண்டும் என்பதையும் தி.மு.கழகத்தின் சார்பில் பிரதமரிடம் டி.ஆர்.பாலு விளக்கிச் சொன்னார்.

ஏழை - எளிய மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஈரானில் சிக்கித் தவிக்கும் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் நலன்களுக்காகவும் பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது தி.மு.கழகம்.

இதில் அரசியல் பார்வை சிறிதுமின்றி , மத்திய அரசிடமிருந்து உரிமையின் அடிப்படையில் மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு கிடைத்திட வேண்டும் என்ற தமிழ்மக்கள் நலன் சார்ந்த பார்வை மட்டுமே அடிப்படையாக இருந்தது. மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பதும், உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதுமே தி.மு.கழகத்தின் அணுகுமுறையாக உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டாண்டு காலத்திற்கு நிறுத்தி வைத்து, அந்தத் தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பிரதமருடனான ஆலோசனையின்போது தி.மு.கழகம் தனது எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான அடிப்படை மருத்துவ வசதிகளில் குறைந்தபட்ச அளவினையாவது நிறைவேற்றுவதற்கு உதவுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியே!

கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அவரவர் தொகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும், அவர்களின் தொகுதி மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்காகவும் ஒதுக்கீடு செய்துள்ளனர். இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் அந்த நிதியை முடக்கி, மடை மாற்றுவது என்பது, மாநில நலன்களையும் அதன் உரிமைகளையும் ஜனநாயகத்தில் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ள பிணைப்பையும் துண்டித்திடும் என மத்திய அரசின் செயல்பாட்டுக்கு பிரதமர் முன்னிலையில் எதிர்ப்பினைப் பதிவு செய்தது தி.மு.கழகம்.

மத்திய அரசின் இந்த முடிவு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது; பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அனைத்து நிலைகளிலும் பிரித்துக் கொண்டு நிறைவேற்றப்பட்டால்தான், வேகமும் தரமும் இருக்கும் என்ற நிர்வாக நெறியை நீர்த்துப்போகச் செய்வது!

File image : MK Stalin

அதேநேரத்தில், மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அல்லும் பகலும் செயலாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் ஈடுபாட்டையும் தி.மு.கழகம் இதயமாரப் பாராட்டிப் போற்றுகின்றது. பாதுகாப்புடன் பணி செய்ய அவர்களுக்குத் தேவையானவற்றைக் கழகத்தினர் தம்மால் இயன்றவரை ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் பிரிவில் மயிலாப்பூரில் பணியாற்றிய காவலர் அருண்காந்தி, ஊரடங்கு பாதுகாப்புப் பணியினை மேற்கொண்டிருந்தபோது மாரடைப்பினால் மரணமடைந்தார் என்ற துயரச் செய்தி கிடைத்ததுமே அவரது குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவித்ததுடன், நெருக்கடி மிகுந்த சூழலில் பணிச்சுமையுடன் செயல்படும் காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாதவாறு பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளை காவல்துறை தலைவரும் தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். காவலர் அருண்காந்தியின் இறுதி நிகழ்வில் கழக நிர்வாகிகள் நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

மக்களுக்குத் துணை நிற்போரை மனதாரப் பாராட்டி, மக்கள் நலன் காக்கும் களப்பணியில் தி.மு.கழகம் தொடர்ந்து உறுதியுடன் ஈடுபட்டு வருகிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அதுபோலவே, கழக மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணியின் பணிகளையும், அவ்வப்போது கேட்டறிகிறேன். அவர்கள் சிறப்பாக களப்பணியாற்றி வருகின்றனர். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்து , மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன். ஒவ்வொரு நாளும் கழகத்தினர் ஆற்றும் களப்பணிகளும் அதனால் காலத்தே மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளும் தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்கப்படுகின்றன.

Also Read: “பாரபட்சமின்றி கொரோனா தடுப்பு நிதியை ஒதுக்க வேண்டும்” - பிரதமர் மோடியிடம் தி.மு.க சார்பில் கோரிக்கை!

மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகளை நேற்று நான் நேரில் சென்று வழங்கினேன். சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கும், என்னுடைய தமிழாசிரியர் ஓய்வுபெற்ற அய்யா ஜெயராமன் அவர்களும் அவரது துணைவியாரும் தங்களின் வயது மூப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்குவதற்கு வெளியே செல்ல முடியவில்லை என்பதை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, என் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். கழக நிர்வாகிகளிடம் இதுகுறித்துத் தெரிவித்து, ஊரடங்கு காலத்தில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திடச் செய்தேன்.

உங்களில் ஒருவனான என்னைப்போலவே, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களில் பலரும், அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தொடர்ந்து உதவி வருவதை அறிந்து கொள்கிறேன். கழகம் எப்போதும் மக்களுக்குப் பக்கத் துணையாக இருந்து ஊழியம் செய்திடும் என்பதைத் தமிழகம் முழுவதும் கழகத்தினரின் செயல்பாடுகள், இப்போது மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஊரக ஊராட்சிப் பொறுப்புகளில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர்களிடமும், ஒன்றிய தலைவர்களிடமும் நேற்றும் இன்றும் கலந்தாலோசித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள மக்களுக்குக் கிடைத்திட வேண்டிய மருத்துவ உதவிகள், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.கழகத்தினர் அதிக அளவில் வெற்றி பெற்ற காரணத்திற்காகவே, அந்த அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியை ஆட்சியாளர்கள் வழங்காமல் வஞ்சிக்கும் நிலையிலும், அதனையும் கூட அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கழகம் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று, தனது பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

mk stalin

உலகம் இதுவரை கண்டிராத ஒரு பேரிடரை நாம் எதிர்கொள்கிறோம். இதில் மக்களின் உயிர்தான் முதன்மையானது; அரசியல் பார்வைகள் - கருத்து வேறுபாடுகள் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் நம் பணிகளைத் தொடர்ந்திடுவோம்.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உதவிகளையும் உரிமைகளையும் தொடர்ந்து வலியுறுத்துவோம். மக்கள் நலனைக் காத்திடுவோம்; மாநில உரிமைகளைப் போற்றிடுவோம்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: CORONA: “தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு; பா.ஜ.க ஆளாத மாநிலம் என்பதனாலா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!