M K Stalin

“அரசின் சதியால் காய்கிறது காவிரி பூமி” : விவசாயிகள் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தி.மு.க விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் பங்கேற்ற கருத்தரங்கம் தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டுமான பிரச்னை அல்ல; தமிழகத்தின் பிரச்னை. இயற்கையின் சதியால் மட்டுமல்ல, அரசின் சதியாலும் காய்ந்து கொண்டிருக்கிறது நமது பூமி. தண்ணீர் கேட்பது நமது உரிமை, கொடுக்கவேண்டியது அவர்களின் கடமை. கர்நாடக அரசு கடமை தவறி வருகிறது” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “காவிரி நீரை நம்பி 12 மாவட்ட மக்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் மேட்டூர் அணை குறித்த காலத்தில் முறையாகத் திறக்கப்படவில்லை. 8 வழிச்சாலை என்கிற பெயரில் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களை வஞ்சித்து வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

தமிழகத்தின் மீது மத்திய அரசால் நடத்தப்பட்டுவரும் ரசாயனத் தாக்குதல் சதிக்கு எதிராக ஒரு துரும்பையும் இந்த அ.தி.மு.க அரசால் கிள்ளிப்போட முடியவில்லை. இதைச் சொன்னால், மத்திய அரசு கொண்டுவரக் கூடிய திட்டங்களை எல்லாம் நாம் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம் என ஒரு பிரசாரத்தை நடத்துவார்கள்.

மண்ணையும், இயற்கையையும் பாதிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் தி.மு.க அதை எதிர்க்கும். அதேநேரத்தில், மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்களைக் கொண்டுவந்தால், அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்ற ரூபாய் 1.76 லட்சம் கோடியைக் கொண்டு, நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.