M K Stalin

“வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்” - பியூஷ் மனுஷ் மீதான பா.ஜ.கவினரின் தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

பா.ஜ.கவின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது பா.ஜ.க அரசு. சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பா.ஜ.க அடக்குமுறையப் பிரயோகிப்பது இது ஒன்றும் புதிதல்ல.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், பா.ஜ.க ஆட்சியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரம், ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருப்பது, நாட்டில் நிலவிவரும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை குறித்தெல்லாம் பா.ஜ.க நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பியூஷ் மனுஷ்.

பியூஷ் மனுஷின் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாத பா.ஜ.க-வினர் அவரை தரக்குறைவாக விமர்சித்து, கடுமையான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பா.ஜ.க-வினரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இது குறித்து, “பா.ஜ.க அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், சேலம் பா.ஜ.க அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே பியூஷ் மனுஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.