M K Stalin

நீட் தேர்வுக்கு பலியான மாணவி கீர்த்தனாவுக்கு தமிழக அரசின் பதில் என்ன? - மு.க.ஸ்டாலின் கேள்வி!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, வேலூர் தொகுதிக்குட்பட்ட செங்கிலிகுப்பம், மதானஞ்சேரி ஆகிய பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேன் பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், ''தி.மு.க பெறப்போகும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி அரசு, மத்திய பா.ஜ.க அரசுக்கு அடிபணிந்து சேவகம் செய்து வருகிறது.

பெரம்பலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பே, தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டத்தை அ.தி.மு.க. அரசு அறிந்தும், மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்து ஏமாற்றியுள்ளது.

இதுகுறித்து நாங்கள் சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது அமைச்சர்கள் சாக்கு போக்கு சொல்லி, கேள்விக்குப் பதில் சொல்லாமல் சமாளித்தனர். மாணவி கீர்த்தனாவின் மரணத்திற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது. நடந்து முடிந்த தேர்தலில், எடப்பாடி அரசு ‘நீட் தேர்விற்கு விலக்கு வாங்குவோம்’ என கூறி மக்களிடம் வாக்கு கேட்டது வேடிக்கையாக உள்ளது.

தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்திலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில், குடிநீர் பிரச்னையினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க எடப்பாடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தந்தும், ஒகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.'' இவ்வாறு பேசினார்.