India

மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வணிக ரீதியான சிலிண்டர் விலை கிட்டத்தட்ட 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் விளைவாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.ஏற்கனவே உணவக உரிமையாளர்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்குப் பேரிடியாக அமையும் வகையில் ரூ. 993 விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தற்போது விலையும் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 10 ஆயிரத்தைத் தாண்டும் என்ற அச்சத்தில் உணவக உரிமையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இது மோடி அரசின் ‘தேர்தல் பரிசு’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்”தேர்தலுக்குப் பிறகு பணவீக்கத்தின் தாக்கம் இருக்கும் என்று நான் முன்பே சொன்னேன்.

இன்று, வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 993 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இது. இதுதான் தேர்தலுக்கான பரிசு.

பிப்ரவரி முதல் இதுவரை ரூ. 1,380 அதிகரித்துள்ளது - வெறும் 3 மாதங்களில் 81% என்பது மிகப்பெரிய உயர்வு.

தேநீர் கடை, தாபா, ஹோட்டல், பேக்கரி, இனிப்புக் கடை என அனைவரது சமையலறைச் சுமையையும் இது அதிகரித்துள்ளது. இது உணவு விலையிலும் எதிரொலிக்கும். முதலில் கேஸ் மீதான தாக்குதல், அடுத்ததாகப் பெட்ரோல் - டீசல் மீது ஒன்றிய அரசு நடத்த உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!