India
அமெரிக்காவின் பிடியில் நரேந்திர மோடி? ஒப்பந்தத்தை தன்னிச்சையாக அறிவித்த அமெரிக்கா! - முழு விவரம் உள்ளே!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து இந்திய தொழில்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்தார். அந்த வரிவிதிப்பின் முக்கிய காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் விவகாரம் இருந்தது.
இந்த வரிவிதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், ஒன்றிய பா.ஜ.க அரசும், “அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் தீர்வு எட்டப்படும்” என சப்பைக் கட்டுகளை கட்டி வந்தனர்.
இச்சூழலில், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடியுடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிபெற்றுள்ளது எனவும் கூறியதுடன், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த 50 சதவீதம் வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளதாகவும், அமெரிக்காவின் பல பொருட்களுக்கு இந்தியா விதித்து வந்த வரிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு இனி வெனிசுலாவிடம் எண்ணெய்களை வாங்கவுள்ளது எனவும், ரஷியாவிடம் எண்ணெய்களை வாங்காமல் இருக்க ஒப்புதல் தெரிவித்தது எனவும் இந்தியா அறிவிக்கும் முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எனவே, ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியையும் நீக்கியுள்ளோம் என தன்னிச்சையாக டிரம்ப் அறிவித்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடியும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. வரிவிதிப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது, இதனால் இந்தியாவிற்கு பயன் என காலம் தாழ்ந்து அறிவித்தார்.
இந்நிலையில் இந்தியா - அமெரிக்கா இடையிலான வரி குறைப்பு குறித்து இருநாடுகளின் கூட்டறிக்கை என ஒரு அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. அதில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தாகியுள்ளதாகவும் இந்தியா இனிமேல் ரஷியாவிடம் கச்சா எண்ணெய்களை வாங்காது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டுமென முடிவெடுப்பது இந்தியாவா? அல்லது அமெரிக்காவா என பெரும் விவாதங்கள் கிளம்பியது. குறிப்பாக தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க அரசு இன்றுவரை மவுனம் காத்து வருகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “இந்தியா மற்றும் அமெரிக்காவால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது இடைக்கால ஒப்பந்தம் கூட அல்ல. இது ஒரு 'இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு’தான். இதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மட்டுமே பெரிதும் சாதகமாக அமைந்துள்ளது.
உதாரணத்திற்கு, இந்தியா அமெரிக்காவின் அனைத்துத் தொழில்துறைப் பொருட்கள் மற்றும் உணவு, விவசாயப் பொருட்களுக்கான வரிகளை நீக்கும் அல்லது குறைக்கும் வேளையில், அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 18 சதவீத வரியை விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு என்பது எப்படி கொண்டாட்டத்திற்குரிய செய்தியாகும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
குறிப்பாக இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய விளைபொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே தற்போது சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
ஆப்பிள், பருப்பு வகைகள் மற்றும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படுவதால், அமெரிக்கத் தயாரிப்புகள் மிகக் குறைந்த விலையில் இந்தியச் சந்தையில் குவியும் அபாயம் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, இந்திய விவசாயிகள் ஏற்கனவே பருவநிலை மாற்றம், நீர் பற்றாக்குறை மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு எனப் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், வரிச் சலுகையுடன் உள்ளூர் சந்தைக்குள் நுழைந்தால், சிறு மற்றும் குறு விவசாயிகளால் அவர்களுடன் விலையில் போட்டியிட முடியாத நிலை உருவாகும். இது சந்தையில் ஒருவித தேக்கத்தை உருவாக்கி, உள்ளூர் விளைபொருட்களின் விலையை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிடும் என்ற அச்சம் பரவலாக உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாட்டின் முன்னணி விவசாய சங்கத் தலைவர்கள், “அமெரிக்காவில் விவசாயத்திற்கு அந்நாட்டு அரசு அளிக்கும் மானியம் மிக அதிகம். ஆனால், இந்தியாவில் நிலைமை தலைகீழ். இந்தச் சூழலில், இறக்குமதி வரியைக் குறைப்பது என்பது உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்குச் சமம்” என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறாயினும், சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் அதே வேளையில், அவை நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் நலனைப் பலிகடா ஆக்கிவிடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து இதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதே தற்போதைய அவசியத் தேவையாகும்.
இந்த பிரச்சனைகள் கவலைகள் குறித்து, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு மீண்டும் 25 சதவீதம் வரி விதிக்கப்படுமா?
அமெரிக்காவுக்காக ரஷியாவுடனான உறவை இந்தியா சமரசம் செய்கிறதா?
ரஷிய எண்ணெய்யை வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா?
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஏற்றுவிட்டதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறுகிறாரே?
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தின் படி ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டுமா?
என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரே வரியில் அனைவரும் அசந்து போகும் விதமாக வெளியுறவு அமைச்சகத்தை கேளுங்கள் என சற்றும் பொறுப்பில்லாத பதிலை அளித்துள்ளார்.
அதே கேள்வியை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டால், “எனக்குத் தெரியாது, பியூஷ் கோயலிடம் கேளுங்கள்” என்ற பதிலை கொடுத்திருக்கிறார். இதுதான் தற்போதைய இந்தியாவின் வர்த்தக நிலை. எதற்கு பயந்து இந்த ஒப்பந்தத்தை மோடி ஏற்றுக்கொண்டார் என தெரியவில்லை.
இந்திய விவசாயத்தை அழிக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு, சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனை அடகுவைத்து அமெரிக்காவிடம் இந்தியா சரணடைந்து விட்டதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. வர்த்தக அமைச்சர் பதவி விலக வேண்டும். ஒப்பந்தத்திலிருந்து விவசாய பொருள்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரும் 12 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை, தேசிய அளவிலான இயக்கங்கள் அறிவித்துள்ளனர.
அமெரிக்காவிடம் இந்தியா சரணடைந்து விட்டது என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் மக்களவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பினை தெரிவித்தனர். அப்போது, அரசு தரப்பில் விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா மாநிலங்களவையில் அறிவித்தார். ஆனால், அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
மேலும், நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசியது நாடாளுமன்ற விதி மீறல் என்று தி.மு.க மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், இந்த ஒப்பந்தத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் ஆளும் ஒன்றிய பா.ஜ.க அரசு டிரம்பின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பதுபோல், இந்த ஒப்பந்தம் இந்திய நலனுக்கானது என கதைகளை பரப்பிக்கொண்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் நடந்துள்ள நாடகம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழலில் உள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தை முடக்குவதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில்கொடுப்பதில் காட்டுவதற்கு முன்வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Also Read
-
“மிக விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்...” - எங்கெங்கே? - அமைச்சர் மா.சு. தெரிவித்தது என்ன?
-
“காலிஸ்தானாக மாறப்போகும் டெல்லி..” - தலைநகருக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பான நாடாளுமன்றம்!
-
லேண்ட் ரோவர் ஓட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! : இராணிப்பேட்டையில் டாடாவின் நவீன வாகன உற்பத்தி ஆலை திறப்பு!
-
“டாடா-வின் ‘முதல் சாய்ஸ்’ எப்போதும் தமிழ்நாடுதான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் : தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டங்கள்!