India

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!

2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (பிப்ரவரி 06) மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் நலன்சார்ந்த மற்றும் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களின் நிலை, அவற்றிற்கு எப்போது நிதி ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர் தி.மு.க தி.மு.க எம்.பிக்கள். அதன் விவரம் பின்வருமாறு.

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் குறித்து திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு,

வேளாண் பதப்படுத்துதல் மற்றும் உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள் திட்டம், மெகா உணவுப் பூங்காக்கள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) திட்டத்தின் கீழ் அதிக நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் திட்டங்களை நிறுவி செயல்பாட்டிற்குக் கொண்டுவரத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளை பெறுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

இயற்கை உரங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் என்ன? என திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு.

யூரியா, டீசல் எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட் (DEF) உரங்களுக்குப் பதிலாக, இயற்கை உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் பயிற்சி அளிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் மாநில வாரியான விவரங்கள் யாவை? இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளால் உற்பத்தி செய்யும் தானியங்களைக் கொள்முதல் செய்ய அரசாங்கத்ம் வகுத்துள்ள திட்டங்கள் யாவை? இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் விவரங்கள் யாவை?

எண்ணெய் வித்துக்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டுமென திமுக எம்.பி. எஸ். கல்யாணசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு,

இறக்குமதி வரிகள் குறைவாக உள்ள காரணத்தால் உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயிகள் மற்றும் பதப்படுத்துபவர்களைப் பாதுகாக்கும் வகையில், சமையல்/தாவர எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரிகளை அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் மீது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். நுகர்வோர் விலைகளைக் குறைக்கவும், சுத்திகரிப்புத் தொழிலுக்கு ஆதரவளிக்கவும், கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான சுங்க வரியை குறைப்பது உட்பட, சமீபத்திய வரித் திருத்தங்களுக்கான காரணங்கள் என்ன? தற்போதைய கட்டண அமைப்பு உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தி, இறக்குமதி மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

உணவு பதப்படுத்துதல் துறையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார் அவர் தெரிவித்தது பின்வருமாறு.

இந்தியாவின் மொத்த உணவு பதப்படுத்துதல் உற்பத்தியில் தமிழ்நாடு ஏறக்குறைய 8 சதவீதம் பங்களித்து நாட்டில் உணவு பதப்படுத்துதலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பல்வேறு உணவு பதப்படுத்துதல் திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த மத்திய நிதியின் அளவு என்ன என திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்கள் – தாமதன் ஏன்? என திமுக எம்.பி. பி. வில்சன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு.

சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்.ஆர்.டி.எஸ்) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) ஆகியவற்றுக்கு இடையே எம்.ஆர்.டி.எஸ்-ஐ கையகப்படுத்தி ஒருங்கிணைப்பதற்காக கையெழுத்திடப்படவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இறுதி செய்யப்பட்டுள்ளதா எனவும் அந்த இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

01.02.2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களின் விவரங்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை, தற்போதைய நிலை, மற்றும் தாமதத்திற்கான காரணங்கள் யாவை? ஆத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி பிரிவில் கூடுதல் பாதை விரிவாக்கத்திற்காக புதிய டெண்டர் கோர முன்மொழியப்பட்டுள்ளதா எனும் கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கான நூறு நாள் வேலைத் திட்டத்தின் நிலுவைத் தொகையை எப்போது விடுவிக்கும் ஒன்றிய அரசு? என திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு. 

ஜனவரி 2026 நிலவரப்படி, தமிழ்நாடு உட்பட மாநிலங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளின் தற்போதைய நிலை என்ன? என்றும் தமிழ்நாட்டிற்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை விடுவிப்பதற்கான முன்மொழியப்பட்ட காலக்கெடு என்ன? என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கிராமப்புறங்களில் தரமான சாலைகளை உருவாக்கும் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா-IV (PMGSY-IV) திட்டத்தின்கீழ் கண்டறியப்பட்ட 40547 பகுதிகளில், தமிழ்நாட்டில் வெறும் ஐந்து குடியிருப்புகள் மட்டுமே தகுதியுள்ளவையாகக் கண்டறியப்பட்டுள்ளன என்பது உண்மையா என்று ராஜாத்தி சல்மா எம்.பி. தனது மற்றொரு கேள்வியில் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சாலைகளைத் தரம் உயர்த்துதல், புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குத் தொடர்ந்து நிதி வழங்குமாறு மாநிலங்களிடமிருந்து அமைச்சகத்திற்கு வந்த கோரிக்கைகளின் நிலை என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

விசைத்தறி உற்பத்தியாளர்களின் வருமான இழப்பு – தகுந்த நடவடிக்கையை உறுதி செய்யுமா ஒன்றிய அரசு? என திமுக எம்.பி. அந்தியூர் பி. செல்வராசு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்தது பின்வருமாறு.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட பொருட்களுக்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பு இருந்தபோதிலும், விசைத்தறி பொருட்களின் விலையில் போட்டியின் காரணமாக உற்பத்தி தேவை மற்றும் வருமானத்தையும் இழக்கின்றனர் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கைத்தறி முத்திரைகளை மீறுவதையும் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விவரங்கள் யாவை? சட்டப்படியான உற்பத்தியை உறுதி செய்வதற்கும் உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குப் பயனுள்ள பாதுகாப்பை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.

Also Read: “சென்னை - பெங்களூரு இடையிலான NH-40 எப்போது பயன்பாட்டிற்கு வரும்?” : தி.மு.க எம்.பி கிரிராஜன் கேள்வி!