India
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று (28.12.2025) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (28.12.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 27.12.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் இன்று (28.12.2025) கைது செய்த மற்றொரு சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கவலையுடன் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இக்கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இது போன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?